திருப்பதி: டிசம்பர் மாதம் ரூ. 300 தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்துக்கொண்ட பக்தர்கள், திருமலையில் தங்கும் விடுதிக்காக ஆன்லைனில் இன்று முன்பதிவு செய்து கொள்ளலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
வரும் டிசம்பர் மாதத்தில் ரூ. 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு ஏற்கனவே இணையத்தில் வெளியானது. வெறும் 40 நிமிடங்களிலேயே இந்த முன்பதிவு நிறைவடைந்தது.
ஆன்லைனில் டிசம்பரில் தரிசனத்துக்காக முன்பதிவு செய்த பக்தர்கள் திருமலையில் தங்கும் விடுதிக்காக இன்று (16-ம் தேதி) மதியம் 3 மணிக்கு திருப்பதி தேவஸ்தான இணையதளம் மூலமாக அறைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
இதேபோன்று, டிசம்பர் மாதத்தில் நேரில் திருமலைக்கு வர இயலாத பக்தர்கள், ஆன்லைன் முன்பதிவு மூலம் ஆர்ஜித சேவைகளான கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீப அலங்கார சேவைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இவர்களுக்கு பிரசாதம் அவரவர் வீடுகளுக்கே திருப்பதி தேவஸ்தானம் அனுப்பி வைக்கும்.