ஆன்மிகம்

108 வைணவ திவ்ய தேச உலா - 52 | திருக்காரகம் கருணாகரப் பெருமாள் 

செய்திப்பிரிவு

108 வைணவ திவ்ய தேசங்களில், காஞ்சிபுரம் திருக்காரகம் கருணாகரப் பெருமாள் கோயில், 52-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. பெரிய காஞ்சியில் உள்ள உலகளந்த பெருமாள் கோயில் பிரகாரத்தில் உள்ள ஒரு சிறிய திவ்ய தேசம் இதுவாகும்.

இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்

நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி

ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்

உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும்

காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா

காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு

பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்

பெருமான் உன் திருவடியே பேணினேனே (8)

(இரண்டாம் ஆயிரம் - 2058 திருநெடுந்தாண்டகம்)

மூலவர்: கருணாகரப் பெருமாள்

தாயார்: பத்மாமணி நாச்சியார்

தீர்த்தம்: அக்ராய தீர்த்தம்

மூலவர் கருணாகரப் பெருமாள், நின்ற திருக்கோலத்தில், தெற்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.


தலவரலாறு

அக்ராயர் என்ற அரசன், தனக்கு ஏற்பட்ட நோய் குணமாகாமல் தவித்தபோது இத்தலத்தில் உள்ள புஷ்கரணியில் நீராடி கருணாகரப் பெருமாளை பிரார்த்தனை செய்தால் கொடிய நோய் விலகிவிடும் என்று கேள்விப்பட்டு, இத்தலத்துக்கு வந்து பெருமாளை வழிபட்டான். பெருமாளும் மன்னனுக்கு தரிசனம் கொடுத்து அவனது தீராத நோயை நீக்கினார்.

கார்ஹ முனிவரின் வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு கருணாகரப் பெருமாள் காட்சியளித்து ஞான பொக்கிஷம் அளித்ததாகக் கூறப்படுகிறது.

இத்தலத்துக்கு காரகம் என்னும் பெயர் வந்ததற்கு இவரது கருணையே காரணமாக இருக்கலாம். கார் என்றால் கருமேகம். சூலுற்ற கருமேகம், மழை பொழிந்து தன் அருளை நானிலம் எங்கும் தூவுவது போல, இந்தத் தலத்தில் கோயில் கொண்டிருக்கும் பெருமாள், பக்தர்பால் இன்னருள் செலுத்தும் ஊற்றாகத் திகழ்கிறார்.

மேகத்தையே தன் வாழ்விடமாகக் கொண்டிருந்தார் ஒரு மாமுனிவர். இவர் இதனாலேயே மேகநிகேதன ரிஷி என்று அழைக்கப்பட்டார். இவருக்கு, மேகம் என்ற பொருளில் வரும் காரகத்தான் காட்சி அருளியிருக்கிறார்.

பிள்ளை பெருமாள் அய்யங்கார் தனது 108 திருப்பதி அந்தாதியில்,

“ஓராதார் கல்வியுடையேம் குலமுடையேம்

ஆராதனம் உடையேம் யாமென்று – சீராயம்

பூங்காரகங் கானப் போதுவார் தான் தலைமேல்

தாங்கா ரகங்காரத் தால்” என்கிறார்.

நற்குலத்தில் பிறந்தவர்கள் நற்கல்வி அடைந்து, அதனால் நற்புகழ் கொண்டிருப்பார்கள். அவர்கள், தங்களது, அந்த அருங்குணங்கள் மேன்மேலும் பெருகி, தமக்கும் தம் குடும்பத்துக்கும் தாம் சார்ந்திருக்கும் சமுதாயத்துக்கும் நலம் பயக்க இந்தப் பெருமாளை வணங்குகிறார்கள். அத்தகையவரது திருப்பாதங்களே என் தலைக்குச் சிறந்த அலங்காரமாகத் திகழும் என்கிறார்.

குறிப்பாக காரகத்துப் பெருமாள் நல்லறிவு, ஆக்கப்பூர்வமான ஆற்றல் நற்குணங்கள் எல்லாம் அருளிச் செய்து நம்மை உய்விப்பார் என்பது இந்தப் பாடலின் உள்ளீடு.

பொதுவாக வைணவ அடியார்கள், திருமாலை அறிதலையே பெரிய ஞானமாகக் கொண்டிருப்பார்கள். இதுவே அவர்களுடைய உயர் கல்வித் தகுதி அவனுக்குத் தொண்டு செய்து உய்யும் குலத்தில் பிறப்பதே பெரும் பாக்கியம் என்பதால், தமக்கு ஒவ்வொரு ஜென்மத்திலும் அதுபோன்ற அரிய பிறப்பை அருளுமாறு அவனையே துதிப்பதை தம் கடமையாகக் கொண்டிருக்கிறார்கள். அவனுடைய அடியார்களைப் போற்றி, ஆராதித்து, அவர்கள் மீது அன்பு செலுத்தி, அவர்களுக்குப் பணிவிடை செய்வதே தம் தொழிலாக மேற்கொண்டிருக்கிறார்கள். உற்றதும் உன்னடியார்க்கடிமை என்ற ஆழ்வார் வரிக்கு உரித்தானவர்களாக இருப்பார்கள்.

தீராத நோய்களால் அவதிப்படுபவர்கள், மன உளைச்சல் கொண்டவர்கள், ஏமாற்றம் அடைந்தவர்கள், அதிர்ச்சியால் பேச்சை இழந்தவர்கள், நரம்பு தளர்ச்சி, தோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வந்து பெருமாளை வழிபட்டால், அனைத்து நோய்கள் மற்றும் மனக்குறைகளும் விலகும்.

வைகுண்ட ஏகாதசி விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

SCROLL FOR NEXT