ஆன்மிகம்

108 வைணவ திவ்ய தேச உலா - 49 | காஞ்சிபுரம் திருநிலாத் திங்கள் துண்டம்

செய்திப்பிரிவு

108 வைணவ திவ்ய தேசங்களில், பெரிய காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோயில் உட்பிரகாரத்தில் அமைந்துள்ள திருநிலாத் திங்கள் துண்டம், 49-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது.

இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

நீரகத்தாய் நெடுவரையின் உச்சி மேலாய்

நிலாத்திங்கள் துண்டத்தாய் நிறைந்த கச்சி

ஊரகத்தாய் ஒண் துறை நீர் வெஃகா உள்ளாய்

உள்ளுவார் உள்ளத்தாய் உலகம் ஏத்தும்

காரகத்தாய் கார்வானத்து உள்ளாய் கள்வா

காமரு பூங் காவிரியின் தென்பால் மன்னு

பேரகத்தாய் பேராது என் நெஞ்சின் உள்ளாய்

பெருமான் உன் திருவடியே பேணினேனே (8)

(இரண்டாம் ஆயிரம் - 2058 திருநெடுந்தாண்டகம்)

மூலவர்: நிலாத் துண்டப் பெருமாள்

தாயார்: நேர் உருவில்லா வல்லி

தீர்த்தம்: சந்திர புஷ்கரிணி

மூலவர் நிலாத் திங்கள் துண்டத்தான், நின்ற திருக்கோலமாக மேற்கு நோக்கிச் சேவை சாதிக்கிறார்.

தவமிருந்த பார்வதிக்கு தமையனான பெருமாள் உதவிய தலம். வைணவம், சைவம் இரண்டு சமயங்களும் ஒன்றோடொன்று தொடர்புடையன என்பதை உலகுக்கு உணர்த்தும் திருத்தலம்.


தலவரலாறு

ஒரு சமயம் தேவர்களும், அசுரர்களும் ஒன்று சேர்ந்து அமிர்தத்தைப் பெற வேண்டி திருப்பாற்கடலைக் கடைந்தனர். மந்திர மலையை மத்தாகவும், வாசுகி என்னும் பாம்பை கயிறாகவும் சுற்றிப் பிணைத்து, அதன் தலைப்புறத்தில் அசுரர்களும், வால்புறத்தில் தேவர்களும் நின்று இழுத்துக் கடைந்தனர். அப்படிக் கடையும்போது வாசுகி வலி தாங்காமல் விஷம் கலந்த பெருமூச்சு விட்டாள். அவ்விஷமானது கடலில் கலக்கும்போது ஆழ்கடலில் இருந்து கொடிய விஷம் வெளிப்பட, வெப்பம் தாளாமல் அனைவரும் ஓடினர். அப்படியும் முடியாமல் அவர்களது தேகம் கருமை நிறத்தைப் பெற்றது.

தேவர்களுக்கு ஆறுதல் கூறிய திருமாலின் உருவமும், அவ்விஷ வெப்பத்தால் கரிய நிறத்தை அடைந்துவிட்டது. தாம் கரிய நிறமாகி விட்டதை கண்டு மனம் வருந்திய திருமால், இந்தத் துன்பம் நீங்க, காஞ்சிப் பதியை அடைந்து அழகிய லிங்கம் ஒன்றை நிறுவி பக்தியுடன் ஈசனை வழிபட்டார். அவரால் நிறுவி வழிபடப்பட்ட அழகிய சிவ லிங்கத் திருமேனிதான் கண்ணேசலிங்கம் ஆகும்.

திருமாலின் வழிபாட்டால் மனம் மகிழ்ந்த சிவபெருமான், அவருக்கு காட்சி கொடுத்து, “துளப மார்பை உடையவனே… உன்னை வருத்தி வரும் வெப்பத்தின் கொடுமை நீங்க யாம் ஒரு வழி கூறுகிறோம்” என்று கூறி, “மாவடி நிழலிலே எழுந்தருளியுள்ள எம் சந்நிதிக்கு வந்தால், இளம் சந்திரனுடைய குளுமை பொருந்திய கிரணங்கள் வீசும் இடத்தில் இருந்து அதன் குளிர்ச்சியால் துன்பம் நீங்கப் பெறுவாய்” என்று அருளினார்.

சிவபெருமான் அருளியபடியே திருமால், பிறைச் சந்திரனுடைய குளிர்ச்சிப் பொருந்திய கிரணங்கள் விழும் இடத்தை அடைந்து அங்கே இருந்தவாறு இறைவனை துதித்தார். அக்கணம் அவரை வதைத்து வந்த கொடிய வெப்பத்தின் வருத்தம் நீங்கப் பெற்றார். சந்திரனின் அமிர்த தாரைகள் பட்டு அப்பிணி நீங்கி சாந்தம் நிலவியது.

அன்று முதல் ‘கச்சி நிலாத் துண்டப் பெருமாள்’ என்ற பெயரோடு திருமால் எழுந்தருளியிருக்கிறார்.

ஒரு மாமரத்தின் கீழே பார்வதி தேவி தவம் செய்யும்போது, தவத்தை சோதிக்க சிவபெருமான், அந்த மாமரத்தை எரித்ததாகவும், அப்போது பெருமாள் அந்த எரிந்த மாமரத்தை தழைக்கச் செய்து, குளிர்ச்சியை பரவச் செய்ததாகவும் கூறுவர். பார்வதியும் தன் தவத்தைத் தொடர்ந்தாள். அந்த மாமரத்தை எரித்த ஈசன் இதே தலத்தில் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயருடன் விளங்கினார். பார்வதிக்கும் இவருக்கும் திருமணம் முடித்து அவர்களை சிறப்பித்தார் பெருமாள்.

இவ்வாறு தன் தாபத்தை பெருமாள் தீர்த்ததால், அவரை வணங்கி, அதே தலத்தில் அவர் அர்ச்சாவதார ரூபியாக நிலை கொள்ள வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள் பார்வதி. இவ்வாறு நிலைபெற்றவர்தான் இந்த நிலாத்திங்கள் துண்டத்தான்.

அலங்கார பூஷிதனாக அழகுத் தோற்றம் காட்டும் நிலாத் துண்டப் பெருமாள், நோய் தீர்க்கும் நாயகன் என்றும் போற்றப்படுகிறார். பார்வதி அருகே உள்ள வாமனர்தான் மாமரத்தை தழைக்க வைத்த பெருமாள் என்றும் கூறுவர்.

கோபத்தால் செய்த பாபங்கள் போக்க, தீயால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, வியாபார நஷ்டம் ஏற்படாமல் இருக்க, பிறர் கோபத்தால் ஏற்பட்ட பாதிப்பு நீங்க இத்தலப் பெருமாளை வழிபட்டால், கை மேல் பலன் உண்டு.

திருவிழாக்கள்

பௌர்ணமி, புரட்டாசி சனிக்கிழமை, மார்கழி மாத வைகுண்ட ஏகாதசி நாட்களில் சுவாமி, தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும்.

SCROLL FOR NEXT