திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்குவது கடந்த ஏப்ரல் மாதம் 12-ம் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், மாதவம் பக்தர்கள் தங்கும் விடுதி மற்றும் கோவிந்தராஜ சுவாமி சத்திரம் ஆகிய 3 இடங்களில் சர்வ தரிசன டோக்கன் விநியோகம் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் தொடங்கப்பட்டது.
அப்போது தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி செய்தியாளர்களிடம் பேசும்போது, "திருப்பதியில் 3 இடங்களில் தலா 10 மையங்களில் சர்வ தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். நள்ளிரவு 12 மணியிலிருந்து டோக்கன் வழங்கப்படும்.
ஆதார் அட்டை கொண்டு வரும் பக்தர்களுக்கு இந்த இலவச டோக்கன் வழங்கப்படும். டோக்கன் பெற்ற பக்தர்கள் அன்றே குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தரிசனத்திற்கு செல்ல வேண்டும்” என்றார். டோக்கன் பெறாதவர்கள் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ்-2ல் சென்று சுவாமியை தரிசிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.