நாட்டிய நிகழ்ச்சிகள் என்றாலே பிரம்மாண்டமான மேடை, பளபளக்கும் உடைகள், நீதிபதி, மத்திய, மாநில அமைச்சர், பிரபல நடிகர்கள் புடைசூழ நடக்கும் வைபவமாகத்தான் இன்றைக்கு பெரும்பாலும் நடக்கின்றது. ஆனால் சமீபத்தில் மயிலாப்பூர் கற்பகாம்பாள் கோயிலில் நடந்த நிஹாரிகா ருக்மிணி பட்ணம் என்பவரின் நடன அரங்கேற்றத்தில் மேற்படி சம்பிரதாயங்கள் எதுவும் இல்லை.
ஒரு நாட்டிய நிகழ்ச்சியைப் பார்ப்பது 100 யாகத்தைப் பார்ப்பதற்கு சமம் என்று நாட்டிய குரு தனஞ்ஜெயன் பேச்சைத் தொடங்கிய விதமே வித்தியாசமான நாட்டிய நிகழ்ச்சிக்கு கட்டியம் கூறுவதாக அமைந்தது.
பெயரில் வெளிப்பட்ட பக்தி
சிலரின் பெயர்களில், சில ஊர்களின் பெயர்களில் கூட பக்தி சார்ந்த சிந்தனைகள் வெளிப்படும். நாட்டிய நிகழ்ச்சிக்கான தலைப்பும், `நிஹாரிகாவின் ரங்கப்பிரவேசம்’ என்றிருந்தது. இது பற்றி கேட்டபோது, சம்ஸ்கிருதத்தில் மேடை என்பதற்கு `ரங்கம்’ என்று பெயராம். ஆக, மேடையில் அரங்கேறுவதற்குப் பெயர் `ரங்கப் பிரவேசம்’ என்று விளக்கினார் நிஹாரிகா.
அர்த்தம் புரிந்து அபிநயங்களை வெளிப்படுத்திய விதம் கூர்மையாக இருந்தது. உலகெலாம் (பெரிய புராணம்), நிஹாரிகாவின் குரு தனஞ்ஜெயனின் உருவாக்கமான கணேச சப்தம், கிருஷ்ண அவதாரத்தின் பெருமைமிகு கதைகளை விவரிக்கும் லால்குடி ஜெயராமனின் பதவர்ணத்தை நிருத்யோபகாரமாக சிறிதும் தொய்வில்லாமல் ஆடினார் நிஹாரிகா.
இரண்டு தம்பதிகளின் ஆதரவு
நாட்டிய குரு சாந்தா தனஞ்ஜெயனின் வளமான நட்டுவாங்கத்தோடு, ஞான பிரசுனா இனிமையான பாடல்களுக்கு, சிவபிரசாத் (மிருதங்கம்), ஜெயலஷ்மி சேகர் (வீணை), சுஜித் நாயக் (புல்லாங்குழல்), துர்கா (தம்புரா) ஆகியோர் இசை கூட்டினர். ரசிகர்களாக நூற்றுக்கணக்கானவர்கள் திரண்டிருந்தாலும், இரண்டு தம்பதிகளின் ஆசிர்வாதம் நிஹாரிகாவுக்கு இருப்பதால்தான் இந்தக் குழந்தையின் நாட்டியம் இந்தளவுக்கு சிறப்பாக அமைந்தது.
இங்கே கோயில் கொண்டுள்ள கபாலீஸ்வரரும் கற்பகாம்பாளும் ஒரு தம்பதி. இன்னொரு தம்பதி நிஹாரிகாவின் தந்தையும் தாயும் என்றார் நெகிழ்ச்சியாக நாட்டிய குரு தனஞ்ஜெயன். நாட்டிய நிகழ்ச்சியோடு தொடர்பில்லை என்றாலும் இந்த இடத்துக்குப் மிகவும் பொருத்தமான `கற்பக வள்ளி நின் பொற்பதங்கள் பிடித்தேன் நற்கதி அருள்வாயம்மா’ பாடலை பாட வைத்ததோடு, அந்தப் பாடலை எழுதிய இலங்கையைச் சேர்ந்த என்.வீரமணியைப் பற்றி புகழ்ந்து பேசினார் தனஞ்ஜெயன்.