ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் உதய்பூரில் இருந்து 45 கி.மீ தொலைவில் உள்ளது ராஜ்சமந்த் மாவட்டத்தின் நத்வாரா நகரம். இங்குள்ள மலை உச்சியில் 369 அடி உயரத்துக்கு சிவன் தியானத்தில் இருப்பது போன்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்துக்கு கடந்த 2012-ம் ஆண்டு, அடிக்கல் நாட்டப்பட்டது. இந்த சிலையை ‘தத் பாதம் சனஸ்தான்’ என்ற அமைப்பு கட்டியுள்ளது. இதன் அறங்காவலராக மிராஜ் குழுமத்தின் தலைவர் மதன் பாலிவால் உள்ளார்.
3,000 டன் இரும்பு, 2.5 லட்சம் கியூபிக் டன் கான்கிரீட் மற்றும் மணல் பயன்படுத்தி, கடந்த 10 ஆண்டுகளாக இந்த சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலையை 20 கி.மீ தூரத்தில் இருந்தும் பார்க்க முடியும்.
இரவு நேரத்திலும்..
இங்கு சிறப்பு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால், இந்த சிலையை இரவு நேரத்திலும் வெகு தொலைவில் இருந்து காணலாம். இந்த பிரம்மாண்ட சிலையில் 4 லிப்ட்கள், 3 படிக்கட்டுகள், பக்தர்களுக்கான அரங்கம் ஆகியவை அமைக்கப் பட்டுள்ளன.
உலகின் மிகப் பெரிய சிவன் சிலையை, பொதுமக்களின் வழிபாட்டுக்காக, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் முன்னிலையில் மத குரு மொராரி பாபு நேற்று திறந்து வைத்தார்.
9 நாள் நிகழ்ச்சி
இந்நிகழ்ச்சி குறித்து அறங் காவலர் மதன் பாலிவால் கூறுகை யில், ‘‘உலகின் மிக உயரமான சிவன் சிலை திறக்கப்பட்டுள்ளது. இன்று முதல் 9 நாட்களுக்கு இங்கு ஆன்மீக மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும். மத குரு மொராரி பாபு, ராமர் கதைகளை மக்களுக்கு கூறுவார். இந்த பிரம்மாண்ட சிவன் சிலையால், இந்த இடம் ஆன்மீக சுற்றுலா தலமாக மாறும்’’ என்றார்.
சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் இங்கு பங்கி ஜம்பிங், ஜிம் லைன் மற்றும் கோ-கார்ட், உணவு விடுதி, சாகச பூங்கா, ஜங்கிள் கஃபே போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.