தேவநாத பெருமாள் 
ஆன்மிகம்

108 வைணவ திவ்ய தேச உலா - 41 |  திருவஹீந்திரபுரம் தேவநாத பெருமாள் கோயில்

செய்திப்பிரிவு

கடலூர் மாவட்டம் திருவஹீந்திரபுரம் தேவநாத பெருமாள் கோயில் திருமாலின் 108 திவ்ய தேசத் தலங்களுள் 41-வது திவ்ய தேசமாகும். இத்தலப் பெருமாள், திருமலை வேங்கடவனின் அண்ணனாகக் கருதப்படுகிறார். ரிஷியின் சாபத்தால் இன்றும் கருடநதியின் தீர்த்தம் மழைக் காலத்தில் கலங்கிய நிலையில் ஓடுகிறது.

திருமங்கையாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.

மூவராகிய ஒருவனை மூவுல குண்டு உமிழ்ந் தளந்தானை

தேவர் தானவர் சென்று சென்றிறைஞ்சத் தண் திருவயிந்திர புரத்து

மேவு சோதியை வேல் வலவன் கலிகன்றி விரித்துரைத்த

பாவு தண்டமிழ்ப் பத்திவை பாடிட பாவங்கள் பயிலாவே

(1157 – பெரிய திருமொழி 3-1-10)

மூலவர்: தேவநாதர்

உற்சவர்: அச்சுதன்

தாயார்: செங்கமலம், ஹேமாம்புஜ வல்லி,

தலவிருட்சம்: வில்வம்,

தீர்த்தம்: கருட தீர்த்தம்

விமானம்: சுத்த சத்வ விமானம்

தலவரலாறு

ஒரு சமயம் ஆணவத்துடன் இருக்கும் தேவர்கள், அசுரர்களால் விரட்டி அடிக்கப்பட்டனர். அப்போது அந்த தேவர்கள் இப்பகுதிக்கு (ஔஷத மலை) வந்து திருமாலை வழிபட்டனர். திருமாலும் அவர்களுக்கு உதவுவதாக உறுதி அளித்தார். அசுரர்கள் இதுகுறித்து நான்முகனிடம் முறையிட்டனர். ஈசனின் துணை கொண்டு யுத்தம் செய்யுமாறு நான்முகன் பணித்தார். ஈசனும் அசுரர்களுக்கு உதவுவதாக வாக்களித்தார்.

தேவர்கள் ஈசனால் தாக்கப்பட்டனர். இது பொறுக்காத திருமால் சக்ராயுதத்தை ஏவினார். அது அசுரர்கள் அனைவரையும் தோல்வியடையச் செய்தது. அசுரர்கள் அனைவரும் திருமாலிடம் சரணடைந்தனர். அனைவரையும் அரவணைத்த திருமால், தானே மும்மூர்த்தியாக அருள்பாலிப்பதாகக் கூறி தனது திருமேனியில் நான்முகனையும் ஈசனையும் காண்பித்தார். தேவர்களுக்கு தலைவனாக இருந்ததால் தேவநாதன் என்ற திருநாமம் உண்டாயிற்று. இந்த இடத்தில் திருமால் மும்மூர்த்தியாக வாசம் செய்வதை அறிந்த ஆதிசேஷன், இந்த இடத்திலேயே ஒரு நகரத்தை உருவாக்கினார். அதுவே திருஅஹீந்திர (ஆதிசேஷ) புரம் என்ற பெயரோடு விளங்கியது.

ஒரு சமயம் திருமாலுக்கு தீர்த்த தாகம் ஏற்பட்டது. அப்போது தனது பெரிய திருவடி கருடாழ்வாரை அழைத்து தனக்கு தீர்த்தம் கொண்டு வரப் பணித்தார். உடனே கருடாழ்வாரும் விரஜா தீர்த்தத்தை கொண்டு வந்து தன் தலைவன் தாகம் தீர்க்க நினைத்தார்.

(ஒரு ரிஷியின் கமண்டலத்தில் விரஜா தீர்த்தம் இருப்பதை அறிந்த கருடாழ்வார், தன் அலகால் அந்த கமண்டலத்தை தட்டி விட்டார். கோபமடைந்த ரிஷி கருடனை எதிர்க்க மனமில்லாதவராக, “இந்த நீர் கலங்கட்டும்” என்று சபித்து விடுகிறார். பதறிய கருடன், நாராயணனின் தாகம் தீர்க்கவே தான் அவ்வாறு செய்ததாகக் கூறுகிறார். அதைக் கேட்டு வருந்திய ரிஷி, “கலங்கிய நீர் தெளியட்டும்” என்று கூறினார். அதனால் கருடனால் கொண்டு வரப்பட்ட இந்த நதி கெடில நதியாக இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது.)

அவர் வரத் தாமதமானதால், அருகில் இருந்த ஆதிசேஷன் தன் வாலால் பூமியைப் பிளந்து, அங்கிருந்து ஊற்று பெருக, ஐயனின் தாகம் தீர்ந்தது. இப்போதும் சேஷ தீர்த்தம் என்ற கிணறு இத்தலத்தில் தெற்கு பகுதியில் உள்ளது.

சேஷ தீர்த்தம் ஒரு பிரார்த்தனை கிணறாக விளங்குகிறது. இதில் உப்பு, மிளகு, வெல்லம் போட்டு வழிபட்டால் பல நோய்கள் குணமாகும். சரும குறைபாடுகள், சர்ப்ப தோஷம் நீங்கப் பெறும்.

இத்தலத்தருகே நான்முகன் தவம் செய்த மலை உள்ளதால் பிரம்மாச்சலம் என்ற பெயர் பெற்றது. ஈசன், இந்திரன், பூதேவி, பிருகு முனிவர், மார்க்கண்டேயர் முதலானோர் தவம் செய்த தலம் இதுவாகும். யுகம் கண்ட பெருமாள் என்று தேவநாதப் பெருமாள் அழைக்கப்படுகிறார்.

தாயார் வைகுண்ட நாயகி, தன் நாயகன் தேவநாதனுக்கு உறுதுணையாக இருந்து தேவர்களைக் காத்ததால் ஹேமாம்புஜவல்லி என்று அழைக்கப்படுகிறார். பார் அனைத்துக்கும் அருள்பாலிப்பதால் பார்க்கவி என்று அழைக்கப்படுகிறார். பிருகு முனிவருக்கு அவரது தந்தையார் நான்முகன் அருளியபடி பிரம்ம தீர்த்தத்தில் தாமரை மலரின் நடுவே திருமகள் குழந்தையாகத் தோன்றினார். பிருகு முனிவரும் அவருக்கு ஹேமாம்புஜவல்லி என்று பெயரிட்டு அழைத்து வந்தார். ஹேமாம்புஜவல்லியும்ஸ்ரீமந் நாராயணனையே தன் கணவராக அடைய சேஷ தீர்த்தக் கரையில் தவம் செய்தார். ஹேமாம்புஜவல்லியின் தவத்தால் மகிழ்ச்சி அடைந்த தேவநாதன், அவர்முன்னர் தோன்றி, பிருகு முனிவரின் சம்மதத்துடன் அவரைக் கரம் பிடித்தார்.

‘ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர்’ ‘கவிதார்க்கிஹ சிம்மம்’ என்று அழைக்கப்படும் ஸ்ரீ வேதாந்த தேசிகர் என்ற வைணவ மகான் இவ்வூரில் 40 ஆண்டுகள் வசித்தார். பல நூல்களை எழுதியுள்ளார். அவர் எழுந்தருளிய இடம் ஸ்ரீ தேசிகன் திருமாளிகை என்ற பெயரோடு இன்றும் விளங்குகிறது. அவரே கட்டிய கிணற்றுஇந்த ஊரில் உள்ளது. தன் விக்கிரகத்தைதானே செய்து கொண்டார் தேசிகர். அந்த விக்கிரகம்இத்தலத்தில் இன்றும் உள்ளது.

ஸ்வாமி தேசிகரால் பெரிதும் விரும்பி வழிபடப்பட்டவர் ஹயக்ரீவர். தேவநாதப் பெருமாள் கோயிலுக்கு வலது பக்கம் ஒரு மலையின்மீது கோயில் கொண்டுள்ளார் இந்த பரிமுகன். ஹயக்ரீவ மந்திரத்தை கருட பகவான் ஸ்வாமி தேசிகருக்கு உபதேசித்தார். எப்போதும் ஹயக்ரீவ மந்திரத்தை உச்சரித்தபடியே இருந்த தேசிகருக்கு ஹயக்ரீவர் அருள்பாலித்ததோடு மட்டுமல்லாது, அனைத்து வேத சாஸ்திரங்களையும் இந்த ஔஷத மலையிலேயே கற்பித்தார். தேசிகரால் வழிபடப்பட்ட ஹயக்ரீவரை இன்றும் தேவநாதப் பெருமாள் கோயிலில் தனி சந்நிதியில் காணலாம்.

இத்தலத்தில் உள்ள லட்சுமி நரசிம்மர், லட்சுமியை தனது வலது தொடையின் மீது அமர வைத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இலங்கைக்கு சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்துக் கொண்டு செல்லும்போது ஹனுமன் கையில் இருந்து சிறிதளவு மலை பெயர்ந்து இம்மலையின் மீது விழுந்ததால் இதற்கு ஔஷதாசலம் என்ற பெயர் உறுதியாயிற்று. உயிர்ப்பிணி நீக்கும் பல மூலிகைகள் இம்மலையில் காணப்படுகின்றன. இத்தல மூலவர் சந்நிதியின் மேல் உள்ள விமானம் சுத்த சத்வம் என்று அழைக்கப்படுகிறது. திருப்பதிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கு நேர்த்திக் கடன் செலுத்தலாம் என்பது நம்பிக்கை.

திருவிழாக்கள்

சித்திரை மாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். ஐந்தாம் நாள் கருடசேவை, 9-ம் நாள் தீர்த்தவாரி சிறப்பாக நடைபெறும். வைகாசி விசாகம் நம்மாழ்வார் சாற்றுமுறை 10 நாள் உற்சவம், பெருமாள் வசந்த உற்சவம் 10 நாள் (பவுர்ணமி சாற்றுமுறை), நரசிம்ம ஜெயந்தி, ஆடி அமாவாசை, ஆவணி பவித்ர உற்சவம், கிருஷ்ண ஜெயந்தி உற்சவம், புரட்டாசி தேசிகன் பிரம்மோற்சவம், ஐப்பசி தீபாவளிப் பண்டிகை, முதலாழ்வார்கள் உற்சவம் போன்ற விழாக்கள் மிகச் சிறப்பாக நடைபெறும்.

தேவநாதப் பெருமாளை வணங்குவதால் உயர் பதவி, குழந்தை வரம், நீண்ட ஆயுள், நோயற்ற வாழ்வு, நிலைத்த செல்வம் கிட்டும். பிரார்த்தனை நிறைவேறியவுடன் பக்தர்கள் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்விப்பது வழக்கம்.

இருப்பிடம்: சென்னையில் இருந்து 180 கிமீ தூரத்தில் கடலூர் அமைந்துள்ளது. கடலூர் நகரில் இருந்து 5 கிமீ தொலைவில் திருவஹீந்திரபுரம் அமைந்துள்ளது.

SCROLL FOR NEXT