ஹைதராபாத்: திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், ஹைதராபாத் என்டிஆர் விளையாட்டு அரங்கில் வைபவ உற்சவம் நடைபெறுகிறது. இதில், நேற்று காலை உற்சவ மூர்த்திகளான ஸ்ரீதேவி, பூதேவி சமேதரான மலையப்பருக்கு புஷ்பயாகம் நடைபெற்றது. இதில், ரோஜா, தாமரை, கனகாம்பரம் உள்ளிட்ட 12 வகையான மலர்களும், துளசி, பன்னீர் இலைகள் போன்றவையும் இடம்பெற்றன. மொத்தம் 3 டன் மலர்களால் உற்சவர்களுக்கு புஷ்ப யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
புரட்டாசி மாதம் 4-வது சனிக்கிழமையையொட்டி, நேற்று திருமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.திருமலையில் முடி காணிக்கை செலுத்தவும், அன்னதான சத்திரங்கள், லட்டு விநியோக மையங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. சர்வ தரிசனம் மூலம் சுவாமியை தரிசிக்க 18 மணி நேரம் ஆனது.