பூரி ஜகந்நாதர் அன்னப் பிரம்மம் என்றால், விட்டலன் நாதப் பிரம்மம். அவருக்கு வேதம், கோஷம், மந்திரம், தந்திரம் ஆகியவை வேண்டாம். தாளம் போட்டுக்கொண்டு ஹரி நாமம் சொன்னால் அதுவே ஆனந்தம். அவரும் சாதுக்களுடன் சேர்ந்து ஆட ஆரம்பித்துவிடுவார் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தான் எப்போதும் தயார் என்பதைக் குறிக்கும்வண்ணம், விட்டலன் இடுப்பிலே கை வைத்துக்கொண்டு ஜதி போடும் பாவனையில் நிற்கிறார். நாம சங்கீர்த்தனத்துக்கு என்றே ஒரு பகவான் என்றால் அது விட்டலன்தான். விட்டலனையும் ரகுமாயியையும் தரிசிக்கத்தான் ஆண்டுதோறும் லட்சோப லட்சம் பேர் ஆடி ஏகாதசியை முன்னிட்டுப் பதினைந்து நாள் முன்னரே நடைப் பயணத்தைத் தொடங்கிவிடுவர். இதற்கு வாரகரி யாத்திரை என்று பெயர்.
வாரகரி யாத்திரை
ஆடி மாதம், ஏகாதசி திதி அன்று, விட்டலனைப் போய்ப் பார்ப்பதென்பது வாரகரி யாத்திரையின் குறிக்கோள். இந்த யாத்திரையில் இந்தியா முழுவதிலுமிருந்து 20 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள். பக்தர்கள் குழு அமைத்துச் செல்வார்கள். இந்தக் குழுவுக்குத் திண்டி என்று பெயர்.
ஆலந்தி என்ற இடத்திலிருந்து யாத்திரை தொடங்கும். ஞானேஸ்வர் மகாராஜ் பிறந்த ஊர்தான் ஆலந்தி. தேஹூவும் ஆலந்தியும் அருகருகே உள்ள ஊர்கள். இந்த இரு ஊர்களும் புனேவுக்கு அருகில் உள்ளன. இந்த இடத்தில் இருந்து பண்டரிபுரம் சுமார் 260 கி.மீ தொலைவில் இருக்கிறது.
இங்கிருந்து கிளம்பும் ஆயிரக் கணக்கான திண்டிகளில் உள்ள பக்தர்கள், நாம சங்கீர்த்தனம் மட்டுமே சொல்லிக்கொண்டு போவார்கள். வேறு எதுவும் பேச மாட்டார்கள். அருகில் நடந்து வருபவர் தாமாகப் பேச்சுக் கொடுத்தாலும், பதிலுக்கு நாம சங்கீர்த்தனம்தான் சொல்வார்களே தவிர, வேறு எதுவும் பேச மாட்டார்கள்.
இடித்துத் தள்ளுவதோ, முட்டி மோதுவதோ கிடையாது. வரிசை வரிசையாக அமைதியாக, பகவான் நாமத்தைப் பாடிக்கொண்டே போவதுதான் இவர்கள் வழக்கம். நடைப் பயணம் மேற்கொள்ளப்பட்ட இருபது நாட்களும் வழியில் ஒவ்வொரு க்ஷேத்திரமாக தரிசனம் பண்ணிக்கொண்டே, ஆடி ஏகாதசி அன்று பண்டரிபுரம் சென்றுவிடுவார்கள்.
அந்த ஊரில் யாரைக் கேட்டாலும் அபங்கம் சொல்லி, அதற்கு அர்த்தமும் சொல்லி அழகாகக் கதையும் சொல்வார்கள். லட்சம் அபங்கம்கூடக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.
ஆலந்தியில் ஞானேஸ்வர் மஹாராஜின் சமாதி இருக்கிறது. இதற்கு மேல் ஒரு கலசம் இருக்கும். வாரகரி யாத்திரை தொடங்குவதற்கு முன்னர் அதில் பங்கு பெறும் அனைவரும் அக்கலசத்தையே பார்த்துக் கொண்டிருப்பார்கள். எப்படி ஒரு சாதகப் பட்சி ஒரு துளி மழைக்காக வானத்தையே பார்த்துக் கொண்டிருக்குமோ அதுபோல மேலேயே பார்த்துக்கொண்டு இருப்பார்கள்.
ஏகாதசி திதி இன்ன நேரத்தில் வருகிறது என்று தெரிந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் முன்னே பின்னே சிறிதளவு மாற்றம் பெறுவது நடைமுறையில் உண்டு.
மகாராஜ் காட்டும் பச்சைக்கொடி
ஞானேஸ்வர் மகாராஜ் சம்மதம் அளிக்கும் விதம் ரொம்பப் பிரமாதமாக இருக்கும். சரியான திதி நேரத்தில் நடைப் பயணம் தொடங்கப் பச்சைக் கொடி காட்டுவதுபோல, ஞானேஸ்வர் மகாராஜ் சமாதியின் மேலே உள்ள கலசம் தானாகவே `திடுதிடு’ என்று ஆடுமாம்.
இந்த சமிக்ஞை கிடைத்தவுடன் பாதுகையைப் போட்டுக்கொண்டு `ஞானபா துக்காராம்’ என்று சொல்லிக்கொண்டு பக்தர்கள் நடக்க ஆரம்பிப்பார்கள். இந்த யாத்திரை ஜூன் கடைசி வாரம் தொடங்கி ஜூலை மாதத்தில் வரும் ஆடி மாத ஏகாதசியன்று நிறைவு பெறும். இங்கு வரும் பாண்டுரங்க பக்தர்கள் மிகவும் எளிமையானவர்கள். வாரகரி யாத்திரையில் கலந்து கொள்பவர்களில் பெரும்பாலோர் தினக் கூலிகள்.
சொத்து சுகம் இருக்கிறதோ இல்லையோ ஆனந்தமாக இருப்பதாக இவர்கள் கூறுகிறார்கள்.