108 வைணவ திவ்ய தேசங்களில், மயிலாடுதுறை மாவட்டம் திருக்காவளம்பாடி கோபாலகிருஷ்ணர் கோயில், 27-வது திவ்யதேசமாகப் போற்றப்படுகிறது. சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் அமைந்துள்ள இக்கோயில் திருநாங்கூரில் இருந்து ஒன்றரை மைல் தொலைவில் உள்ளது, இத்தலம் திருநாங்கூர் பதினோரு திருப்பதிகளுள் ஒன்றாகும்.
திருநாங்கூர் பதினோரு திருப்பதிகளில் திருக்காவளம்பாடி, திருஅரியமேய விண்ணகரம், திருவண் புருஷோத்தமம், திருச்செம்பொன் செய் கோயில், திருமணிமாடக் கோயில், திருவைகுந்த விண்ணகரம் ஆகிய 6 தலங்கள் திருநாங்கூருக்கு உள்ளே அமைந்துள்ளன.
திருத்தேவனார்த் தொகை, திருத்தேற்றியம்பலம், திருமணிக்கூடம் திருவெள்ளக்குளம், திருப்பார்த்தன் பள்ளி ஆகிய 5 தலங்கள் திருநாங்கூருக்கு வெளியே அமைந்துள்ளன.
பாமாவுக்குப் பிடித்தமான தேவலோக மலரான பாரிஜாத பூச்செடி, கிருஷ்ணரால் இங்கு பூமியில் நடப்பட்டது. இத்தலத்தை திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் மங்களாசாசனம் செய்துள்ளார். சேனைத் தலைவர் விஷ்வக்சேனர், ருத்ரன் முதலானோர் இங்கு வழிபாடு செய்துள்ளனர்.
ஏவிளங் கன்னிக் காகி இமையவர் கோனைச் செற்று
காவளம் கடித்திறுத்துக் கற்பகம் கொண்டு போந்தாய்
பூவளம் பொழில்கள் சூழ்ந்த புரந்தரன் செய்த நாங்கை
காவளம் பாடி மேய கண்ணனே களை கனீயே
மூலவர்: கோபாலகிருஷ்ணர் (ராஜகோபாலன்)
தாயார்: செங்கமல நாச்சியார் (மடலவரல் மங்கை)
தீர்த்தம்: தடமலர்ப் பொய்கை
விமானம்: வேதாமோத விமானம்
தல வரலாறு
கிருஷ்ண பரமாத்மா சத்தியபாமாவுடன் சேர்ந்து நரகாசுர வதத்தை நிகழ்த்தினார். இந்திரன், வருணன் உள்ளிட்டோரிடம் இருந்து நரகாசுரன் அபகரித்த பொருட்கள் யாவற்றையும் அவர்களுக்கே கிருஷ்ணர் மீட்டுத் கொடுத்த பிறகு அவர்கள் கிருஷ்ணருக்கு நன்றி தெரிவித்தனர்.
நீண்ட நாட்கள் கழித்து, இந்திரன் தோட்டத்தில் விளைந்த பாரிஜாத மலர் குறித்து அறிகிறார் சத்தியபாமா. தனக்கு அந்த மலர் வேண்டும் என்று கிருஷ்ணரிடம் கேட்கிறார். கிருஷ்ணரும் உரிமையோடு பாரிஜாத மலரைத் தருமாறு இந்திரனிடம் கேட்கிறார். ஆனால் அதற்கு இந்திரன் உடன்படவில்லை.
கோபம் கொண்ட கிருஷ்ணர், இந்திரனோடு போர் செய்து, அவரது காவளத்தை (பூம்பொழில்) அழித்தார். துவாரகாவில் இருந்து வந்த கிருஷ்ணர், தான் இருப்பதற்கு ஓர் இடத்தை தேர்ந்தெடுக்க விரும்பினார். பிறகு மிகவும் பசுமை நிறைந்த இந்த இடத்திலேயே கோயில் கொண்டார். இந்த இடத்திலேயே சத்தியபாமாவுக்காக பாரிஜாத மலர்ச்செடியை நட்டார் கிருஷ்ண பரமாத்மா.
இத்தலத்துக்கு அருகிலேயே திருமங்கையாழ்வாரின் பிறந்த இடமான குறையலூரும், அவர் வைணவர் அடியாருக்கு அன்னதானம் நடத்திய மங்கை மடமும் உள்ளன.
சிறிய கோயிலாக அமைந்துள்ள இத்தலத்தில் ராஜகோபால சுவாமி கிழக்கு நோக்கி ருக்மிணி, சத்தியபாமாவுடன் எழுந்தருளியுள்ளார்.
திருவிழாக்கள்
கோகுலாஷ்டமி, வைகுண்ட ஏகாதசி விழா தினங்களில் சுவாமி, தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம், ஆராதனைகள் நடைபெறும். ஆண்டுதோறும் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூர் பதினோரு திவ்ய தேச பெருமாள் அனைவரும் ஒன்றாக கருடசேவைக்கு மணிமாடக் கோயிலில் எழுந்தருள்வது வழக்கம்.
அன்றைய தினத்தில் மங்களாசாசனம் செய்ய திருமங்கையாழ்வாரும் எழுந்தருள்வார்.
அன்றைய தினத்தில் ஊரைச் சுற்றியுள்ள வயல்களில் நெற்பயிர்கள் காற்றால் ஆடும் சத்தம் கேட்கும், அந்த சத்தம் திருமங்கையாழ்வாரின் வரவை உணர்த்துவதாக பக்தர்கள் கூறுவர். பதினோரு பெருமாள்களையும் திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்தபிறகு, திருமங்கையாழ்வாரை மணவாள் மாமுனிகள் மங்களாசாசனம் செய்வதைக் காண கண் கோடி வேண்டும்.