ஆன்மிகம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் 5-ம் நாள் விழா - கருடசேவையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

என்.மகேஷ்குமார்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் நேற்று இரவு கருட வாகன சேவை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் கடந்த 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் 5-ம் நாளான நேற்று காலை மோகினி அவதாரத்தில் மலையப்பர் பவனி வந்தார்.

அப்போது நான்கு மாட வீதிகளிலும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என முழுக்கமிட்டவாறு சுவாமியை வழிபட்டனர். வாகன சேவையின் முன், குதிரை, காளை, யானை போன்ற பரிவட்டங்கள் செல்ல, ஜீயர் குழுவினர் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகளும் வாகன சேவையில் பங்கேற்றனர்.

நேற்று புரட்டாசி 2-வது சனிக்கிழமை என்பதால் வழக்கத்துக்கு அதிகமான பக்தர்கள் திருமலையில் குவிந்திருந்தனர். மோகினி வாகன சேவை நிறை வடைந்ததும், மாட வீதியில் குவிந்திருந்த பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் உணவுப் பொட்டலங்களும் குடிநீரும் வழங் கப்பட்டன.

கோவிந்தா, கோவிந்தா...

இதைத்தொடர்ந்து இரவு, கருட வாகனத்தில் மலையப்பர் திருவீதியுலா வந்தார். அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தியுடன் சுவாமியை வழிபட்டனர்.

கருடசேவையை முன்னிட்டு நேற்று முன்தினம் முதலே திருமலைக்கு பைக்குகள் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று மதியம் முதல் கார்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் பேருந்துகளில் மட்டுமே திருமலை வந்தடைந்தனர்.

இவர்கள் அனைவரும் மாலை முதல் மாடவீதிகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் ஏழுமலையான் கோயிலை சுற்றிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.

கருட வாகன புறப்பாடு மாலை 7 மணிக்கு தொடங்கி இரவு 12 மணி வரை நடைபெற்றது. வாகன சேவையின் போது ஆரத்தி கொடுப்பது தடை செய்யப்பட்டதால் கூடுதலான பக்தர்கள் வாகன சேவையை கண்டு மகிழ்ந்தனர்.

SCROLL FOR NEXT