ஆன்மிகம்

திருப்பதியில் கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவம் கோலாகல தொடக்கம் - 2 ஆண்டுகளுக்கு பிறகு மாட வீதிகளில் வாகன சேவை

என். மகேஷ்குமார்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா, நேற்று மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

மேள தாளங்கள் முழங்க, வேத கோஷங்களுடன் ஏழுமலையான் கோயிலில் உள்ள தங்கக் கொடி மரத்தில் கருடன் சின்னம் பொறித்த கொடியை அர்ச்சகர்கள் ஏற்றினர்.

வரும் அக்டோபர் 5-ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவ விழாவையொட்டி, திருப்பதி, திருமலை விழாக்கோலம் பூண்டுள்ளது. எங்கு பார்த்தாலும், மின் விளக்கு அலங்காரங்கள், அலங்கார வளைவுகள், தோரணங்கள் என திருமலை களைகட்டியுள்ளது.

கரோனா பரவலால், கடந்த 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் பிரம்மோற்சவ விழாவின்போது, மாடவீதிகளில் வாகன சேவைகளை தேவஸ்தானம் ரத்து செய்து, கோயிலுக்கு உள்ளேயே சம்பிரதாய முறைப்படி தினமும் வாகன சேவைகள் நடத்தப்பட்டன. தேர் திருவிழா, தங்க தேரோட்டம் முற்றிலுமாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 2 ஆண்டுகளுக்கு பிறகு மாட வீதிகளில் வாகன சேவைகள் நடக்க உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவத்தின் 5-ம் நாள் கருட சேவையன்று திருப்பதி ஏழுமலையானுக்கு ஆந்திர முதல்வர், பட்டு வஸ்திரத்தை காணிக்கையாக வழங்குவது வழக்கம். கடந்த 2003-ல் அப்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு, பட்டு வஸ்திரம் வழங்க திருப்பதியில் இருந்து திருமலைக்கு காரில் வந்தபோது, அலிபிரி சோதனைச் சாவடியை கடந்ததும், குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

இதனால், பட்டு வஸ்திரம் வழங்கும் சம்பிரதாயம், பிரம்மோற்சவத்தின் முதல்நாளுக்கு மாற்றப்பட்டது. அதுமுதல் பிரம்மோற்சவத்தின் முதல் நாளிலேயே ஆந்திர முதல்வரின் பட்டு வஸ்திர காணிக்கை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, பிரம்மோற்சவத்தின் தொடக்க நாளான நேற்றுமாலை, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன், திருமலையில் உள்ள பேடி ஆஞ்சநேயர் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்களை தலையில் சுமந்து வந்து காணிக்கையாக வழங்கினார். பின்னர் அவர் சுவாமி தரிசனம் செய்து, இரவு நடந்த பெரிய சேஷ வாகன சேவையில் பங்கேற்றார்.

SCROLL FOR NEXT