ஆன்மிகம்

வான்கலந்த மாணிக்கவாசகம் 02: தேவரும் அறியாச் சிவனே காண்க

ந.கிருஷ்ணன்

வள்ளல் பெருமான் உரைத்த திருவாசகத்தில் “நான்” கலப்பது என்ற இறைவனுடன் இரண்டறக் கலக்கும் விதத்தை, பத்தாம் திருமுறை ஆசிரியரான திருமூலர் ‘திருமந்திரத்தில்' அழகாகக் கூறியுள்ளார். அதையும் இங்கு நினைவுகூர்தல் நம் பார்வையைத் தெளிவாக்கும். வள்ளலார்க்கும் திருமூல தேவ நாயனார் ஒரு குரு அல்லவா?

திருமூலர் இறைக்கலப்பில் முழுமை அடைந்த மகான். தான் பெற்ற இறையின்பத்தை இவ்வுலக மக்கள் அனைவருக்கும் தருகிறார். உலகோர் அனைவருக்கும் ‘குரு'வாக விளங்கும் அவர் சொல்வதைக் கேளுங்கள்.

“யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

வான் பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்

ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்

தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே.”

இறைவன் எங்கோ விண்ணிலும், நாம் இங்கே மண்ணிலும் உறைவதாகக் கருதி, இறைவனைத் தேடும் அன்பர்களுக்கு, “இறைவன் எங்கோ உறைவதில்லை; இன்னும் சொல்லப்போனால், இறைவனுக்கென்று தனியே ஓர் உறைவிடம் இல்லை; ஏனெனில், அவன் எங்கும் நிறைந்தவன்; எப்படியென்றால், தேனுக்குள் உறைந்துள்ள இனிப்பு” என்னும் இன்பத்தை எவ்வாறு கருப்பு, சிவப்பு என்று குறிப்பாக அடையாளம் காட்ட இயலாமல் எங்கும் அவ்வின்பம் செறிவாக நிறைந்துள்ளதோ, அதைப்போலவே, எங்கும் நிறைந்துள்ள இறைவன் நம் ஊனுடம்புக்குள்ளும் செறிவாக மறைந்து உறைகின்றான்”. என்கிறார் திருமூலர்.

“தேனுக்குள் இன்பம் கறுப்போ? சிவப்போ?

வானுக்குள் ஈசனைத் தேடும் மதியிலீர்!

தேனுக்குள் இன்பம் செறிந்திருந்தாற் போல்

ஊனுக்குள் ஈசன் ஒளிந்திருந்தானே!'' – திருமந்திரம்

ஒரு பாதிரியாரை திருவாசகம் கவரமுடியுமா?

திருவாசகத்தை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, அதன் பெருமையை உலகோர் அனைவருக்கும் பறைசாற்றியவர் லண்டன் மாநகரிலிருந்து தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சாயர்புரம் என்ற ஊரில் கிறிஸ்தவத் தொண்டாற்றிய ஆங்கிலேய அருட்தந்தை ஜி. யூ. போப் அவர்கள். தமிழ்மறையாம் திருவாசகம் உலகெங்கும் பேசப்பட்டது தமிழர்கள் அனைவருக்கும் பெருமையான செய்தி. அதேவேளை, எல்லோருக்குமான ஓர் ஐயம், சிவனை முழுமுதற்கடவுளாகப் பாடி உருகும் திருவாசகம் ஒரு கிறிஸ்தவ அருட்தந்தையை எப்படிக் கவரமுடியும்? இது ஒரு முரண்பாடாகத் தெரிகிறதே என்பதாகும்.

இதில் ஒரு முரண்பாடும் இல்லை; இறைவன் ஒருவனே ஆதலால், திருவாசகத்தில் ‘சிவன்' ஆகக் காட்சியளிக்கும் அதே இறைவன்தான் அருட்தந்தை ஜி.யூ.போப் அவர்களுக்குப் பரமண்டலத்திலிருக்கும் பிதாவாக, இயேசு பெருமானால் அடையாளம் காட்டப்பட்டார். வெறும் நம்பிக்கை சார்ந்து வாழாமல், ஊனுக்குள் ஒளிந்திருக்கும் ‘பிதாவை' உணர்வில் கண்டுகொண்ட அருட்தந்தை போப் அவர்களுக்குத் ‘திருவாசகத்தில்' ஒளிந்திருக்கும் 'சிவனே' அவர் வழிபடும் ‘பரமண்டலப் பிதா' ஆவார் என்பதை எளிதாக அடையாளம் காண இயன்றது.

திருவாசகத்தின் உருக்கத்தில் கரைந்தார் அருட்தந்தை; அவர் லண்டன் நகரின் சர்ச்-ல் முழந்தாளிட்டுச் செபம் செய்யும்போது, தன்னருகில் மாணிக்கவாசகரும் முழந்தாளிட்டு செபம் செய்ததாகத் தான் உணர்ந்ததைத் தன்னுடைய திருவாசக ஆங்கில மொழிபெயர்ப்பு நூலில் பதிவிட்டுள்ளார். இதுவே சமயம் கடந்த பக்திநிலை; பன்மைத்துவத்தைப் போற்றும் நிலை; இறைவனை உணர்ந்த அருளாளர்களுக்கு இம்மனநிலையும், இறை அருளும், அமைதியும், பேரின்பமும், வீடுபேறும் கிட்டும்.

மாணிக்கவாசகர் இறைவனை நேரிலே கண்டதாக அவர் வாக்கிலேயே கேளுங்கள்:

“பரமன் காண்க பழையோன் காண்க

பிரமன் மால் காணாப் பெரியோன் காண்க

யாவரும் பெறவுறும் ஈசன் காண்க

தேவரும் அறியாச் சிவனே காண்க

கண்ணால் யானுங் கண்டேன் காண்க - திருவாசகம்: அண்டப்பகுதி-37,38,55,56,58

குருவடிவில் தோன்றிய இறைவன்

இளமைப் பருவத்திலேயே கல்வி-கேள்விகளில் தேர்ந்த மாணிக்கவாசகர் பாண்டிய மன்னனின் முதலமைச்சராகப் பணியாற்றியவர். பாண்டிய நாட்டின் எல்லாவகைச் செல்வங்கள், பதவிகள், அதிகாரங்கள் அனைத்தும் தன் கட்டுக்குள் வைத்திருந்தவர்; அப்படிப்பட்டவர் பாண்டிய நாட்டின் குதிரைப்படைகளை வலுப்படுத்த, அரசனின் ஆணைப்படிப் புதிய குதிரைகளை வாங்க திருப்பெருந்துறைக்குச் செல்கிறார்; சென்ற இடத்தில், திருமறை பயிற்றுவிக்கும் குருவடிவில் தோன்றிய இறைவனால் ஆட்கொள்ளப்படுகிறார். பாண்டியப் பேரரசின் முதலமைச்சராக, அதிகாரத்தின் உச்சத்தில், அனைத்துவகைச் சுகபோகங்களுடனும் வாழும் ஒரு மனிதனைத் ‘திருவாசகம்’ பாடத் தேர்ந்தெடுக்க இறைவனுக்கு ஒரு வலுவான காரணம் இருந்திருக்க வேண்டும்.

உலகில் வாழ்ந்து பெற்ற பட்டறிவினால், உலகஇன்பங்களின் நிலையாமையை உணர்ந்து, தன்னை அறிந்து, தலைவனாம் ‘இறைவனை' அடைய எத்தனையோ யோகிகளும், ஞானியரும் தவமாய்த் தவம் கிடக்க, இதைப்பற்றித் துளியும் சிந்திக்கவே வாய்ப்பும், நேரமும் இல்லாத பாண்டிய நாட்டின் முதலமைச்சர் மாணிக்கவாசகரை வலியத் தேடிவந்து, இறைக் காட்சித் திருவருள் தந்தது ஏன் என்பதே நாம் அனைவரும் அறிய விரும்புவது.

சராசரி மனிதனின் பார்வையில் மாணிக்கவாசகர் இவ்வுலக இன்பங்கள் அனைத்தையும் நுகரும் வாய்ப்பு கொண்ட சர்வவல்லமை கொண்ட ஒரு முதலமைச்சர். இவை அனைத்தையும் விட்டுவிட்டு, “அளவற்ற இறைப்பேரின்பம் பெற்ற அவரின் அனுபவப் பிழிவான திருவாசக வரிகள்” மற்ற மனிதர்களுக்கு இறைத்தேடல் நிகழ்த்த நம்பிக்கையான வழிகாட்டியாக இருக்கும். அவ்வாறு, “மனிதன் இறைவனுக்குச் சொன்னதே திருவாசகம்” மனிதனுக்கு இறைகாட்சியை உணர்த்தும் அற்புதமான ஆற்றுப்படைத் தமிழ்மறையே திருவாசகம் என்று நாம் அறியவேண்டும்.

நம்முன் உள்ள மற்றொரு முக்கியமான ஐயம், இறைக்காட்சி கிடைத்தாலும்கூட, மனிதஉடலில் வாழும் எவருக்கும் இறையின்பத்தைச் சுவைத்து அறியமுடியாது என்றும் கூறப்படுகிறது. “கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர்” என்ற விதியை மாணிக்கவாசகருக்காக மட்டும் இறைவன் தளர்த்தியது ஏன் என்பதை அடுத்த வாரம் காண்போம்.

(வாசகம் தொடரும்)

SCROLL FOR NEXT