கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மனுக்கு அபிஷேகத்துக்கான புனிதநீர் யானை மீது வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. 
ஆன்மிகம்

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் நவராத்திரி விழா

செய்திப்பிரிவு

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் புரட்டாசி மாத 10 நாள் நவராத்திரி விழா நேற்று தொடங்கியது.

நேற்று அதிகாலையில் பகவதியம்மனுக்கு புனித நீரால் சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது. தங்க கிரீடம், வைர மூக்குத்தியுடன் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

கோயிலில் மூலஸ்தானத்துக்கு அருகே உள்ள மண்டபத்தில் உற்சவ அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. தொடர்ந்து மேளதாளத்துடன் கொலுமண்டபத்தில் அம்மன் எழுந்தருளும் நிகழ்வு நடந்தது. அங்கு 9 அடுக்குகளில் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு இருந்தன.

விழாவை முன்னிட்டு 9 நாட்களும் அம்மனுக்கு தினமும் அதிகாலை 5 மணி, 10 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 11.30 மணிக்கு தீபாராதனை, அதைத்தொடர்ந்து அன்னதானம், மாலை 6.30 மணிக்கு தீபாராதனை ஆகியவையும், இரவு 9 மணிக்கு அம்மன் வாகன பவனியும் நடைபெறுகிறது.

முக்கிய நிகழ்வான பரிவேட்டை அக்டோபர் 5-ம் தேதி காலை 9.15 மணிக்கு வெள்ளிக் குதிரை வாகனத்தில் அம்மன் எழுந்தருளி மகாதானபுரத்துக்கு ஊர்வலமாக புறப்படுகிறார். மாலையில் பரிவேட்டை நடைபெறுகிறது.

பகவதியம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்கான புனித நீர் விவேகானந்தபுரத்தில் இருந்து யானைமீது வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

SCROLL FOR NEXT