புத்தர் தவம் செய்ய ஆரம்பித்தபோது அவருக்கு 29 வயது. 35வது வயதில்தான் அவர் ஞானம் பெற்றார். இந்தத் தவ வாழ்வின்போது அவர் சந்தித்த தடைகள் பல.
முதலாவது உடல் தொடர்பான அசவுகரியங்கள். "சரிபுட்டா, என் தவ வாழ்வு மற்ற தவ நெறிகளில் இருந்து வேறுபட்டது. அதற்கு அடுத்ததாக, பயங்கர நினைவுகள் தந்த தொந்தரவுகளைச் சொல்லலாம்" என்று தன் சீடரிடம் இது பற்றி விவரித்து இருக்கிறார்.
பயம் தந்த அனுபவம்
இந்த இடத்தில் பொதுவாகக் கூறப்படும் பூதங்களைப் பற்றிய கதைகளுக்கு பதிலாக, மனித அனுபவ எல்லைக்கு உட்பட்ட வார்த்தைகளில் தனக்கு ஏற்பட்ட தொந்தரவுகளை புத்தர் வெளிப்படுத்தினார். காட்டில் தனிமையில் கழித்த இரவுகளில் திடீரென அவர் மனதில் பயம் பெரிய உருவம் எடுக்கும்.
"காட்டில் இருந்தபோது அதிகமும் பயந்திருக்கிறேன். அப்போது ஒரு மான் என் அருகே வந்திருக்கலாம். அல்லது ஒரு மயில் சிறு குச்சியைத் தட்டி விட்டிருக்கலாம். தரையில் உதிர்ந்து கிடந்த சருகுகளின் இடையே காற்று சலசலத்துச் சென்றிருக்கலாம்.
ஆனால், அந்த சின்னச் சின்ன அசைவுகளுக்குக்கூட நான் பயந்தேன். ஏன் இப்படிச் சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட பயந்து கொண்டிருக்கிறேன் என்பதைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். அப்போது நிற்காமல், உட்காராமல், படுக்காமல் இடம் வலமாக நடந்தேன். அப்படியே என் பயத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டேன்" என்றும் கூறியுள்ளார்.
ஞானப் பகிர்வு
புத்தரின் மற்றொரு பிரச்சினை ஐயம். தான் பெற்ற ஞான அனுபவத்தைப் பிறருக்குக் கற்றுத் தருவதால் என்ன பயன் கிடைக்கும், உரிய பயன் கிடைக்குமா என்ற சிந்தனை அவரை வதைத்தது. தான் பெற்ற ஞானம் ஞானிகளுக்கு உதவும்.
சாதாரண மனிதர்களுக்கு எவ்வளவு எடுத்துச் சொன்னாலும், சாதாரண அனுபவத்தைத் தவிர வேறு எதையும் அவர்களால் பெற முடியுமா என்ற சந்தேகம் அவருக்கு இருந்தது. உண்மை வழியைக் கூறினாலும் அவர்களுக்குப் புரியுமா?
இப்படி மற்றவர்களைப் பற்றி யோசித்து, தான் எடுக்கும் முயற்சி வீணானால், அது தனக்கு வருத்தம் தரும். அதே நேரம் உலகில் உள்ள எல்லா மனிதர்களும் உண்மை வழியின் மேன்மையை உணராமல் போக மாட்டார்கள். அவர்களுக்கு இதைப் பற்றிக் கூறுவதற்கு வேறு யாரும் இல்லை. இதுவரை அப்படி யாரும் கூறவும் இல்லை.
அதனால் தனக்குக் கிடைத்த ஞானத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று புத்தர் நினைத்தார். கடைசியில் மனிதர்கள் மீது புத்தர் கொண்ட அன்பு, சந்தேகத்தை வென்றெடுத்தது. உண்மை வழியை உலகத்துக்குப் பறைசாற்ற அவர் முடிவு செய்தார்.
ஆசிரியர் புத்தர்
துறவியான கவுதமர், ஆசிரியர் புத்தராக மாறினார். இசிபட்டணம் எனப்பட்ட இன்றைய சாரநாத்தில் இருந்த மான் பூங்காவில் புத்தர் தன் முதல் உபதேசத்தைத் தொடங்கினார். அவரைவிட்டு முன்பு நீங்கியிருந்த ஐந்து துறவிகள், அப்போது திரும்ப வந்து சேர்ந்தனர். அவர்கள்தான் புத்தரின் தர்ம உரைகளைக் கேட்கும் முதல் வாய்ப்பைப் பெற்றனர். அங்குதான் புத்தர் முக்தி நிலை பற்றி முதன்முதலில் பேசினார்.
கி.மு.528-ல் ஜூலை மாத பவுர்ணமி இரவில்தான் புத்தர் முதன்முறையாக போதித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. அது அசல்கா பூஜை என்று கொண்டாடப்படுகிறது.