மாணிக்கவாசகர் இறைவனின் கட்டளைப்படியே பல சிவத்தலங்களையும் தரிசித்து, தில்லைக்கு வருகின்றார். தில்லைவாழ் சிவனடியார்கள் மாணிக்கவாசகரை வணங்கி, வரவேற்று மகிழ்ந்தனர். பின் அடிகளிடம், “நாங்கள் சிவனடியார்கள்; சிவபெருமானின் பெருமையெல்லாம் அறிந்திருக்கின்றோம்; ஆயினும் கண்ணால் காணும் பேறு பெறவில்லை; பிரம்மனும், திருமாலும் காணமுடியாத சிவபெருமானைத் திருப்பெருந்துறையில் தாங்கள் கண்டுகளித்த அனுபவத்தை எங்களுக்கு அறியத் தாருங்கள்” என்று விண்ணப்பித்தனர்.
அடியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்டதும், இறைப்பேரின்ப நிகழ்வுகளின் நினைவுகள் மாணிக்கவாசகப் பெருமானை ஆட்கொண்டன; தம்மைச் சுற்றி நிற்கும் அடியாரை மறந்தார்; தம்மையே மறந்தார்; இறைப்பேரின்ப வெள்ளத்தில் திளைத்தார்; அடிகளின் மனம், மொழி, மெய் எல்லாம் கனிந்துருகத் ‘திரு’வாம் இறைவனில் கரைந்த அனுபவத்தை விளக்கும் ‘கோயில் திருப்பதிகம்’ என்னும் பத்துப் பாடல்களும், முன்னிற்கும் இறைவனுடன் பேசும் திருவார்த்தைகளாக, சிவனடியார்கள் அனைவரின் ஊனினை உருக்கி, என்புருக்கும் இறைக்காட்சியாய் விரிந்தது.
இறைவனை உள்ளவாறு காண ...
“தேனினும் தெளிவான சிவபெருமானே, திருப்பெருந்துறையில் உறையும் சிவனே! சொர்க்கப்பதவி, பிரம்மலோகப் பதவி, வைகுண்டப் பதவி போன்று முடிவில்லாத பல பதவிகள் எல்லாவற்றையும் கடந்த இன்பமே! என்னுடைய அன்பே! உன்னை எனக்கு உணர்த்தும் கடமைகளிலிருந்து மாறி நின்று, என்னை மயக்கிடும் மெய், வாய், கண், மூக்கு, செவியாம் ஐந்து வஞ்சகப் புலன்களின் வாயில்களையும் அடைத்து, அமுதமாய்ச் சுரந்து நின்று, என்னுள்ளே உதிக்கின்ற இறையொளியே! யான் உன்னை உள்ளவாறு கண்டதை அடியவர்கள் காணும்படி வந்தருள்வாயாக!” என்று அருளிய மாணிக்கவாசகப் பெருமான் பரவசத்தில் மூழ்கினார். (தேறலின் தெளிவே - தேனின் தெளிவானவனே)
மாறிநின்று என்னை மயக்கிடும் வஞ்சப் புலனைந்தின் வழியடைத்து அமுதே
ஊறிநின்று என்னுள் எழுபரஞ் சோதி உள்ளவா காண வந்தருளாய்
தேறலின் தெளிவே சிவபெருமானே திருப்பெருந் துறையுறை சிவனே
ஈறு இலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே என்னுடை அன்பே.
திருவாசகம்:20-1
இந்திரன், பிரம்மன், திருமால், உருத்திரன் உள்ளிட்ட எண்ணற்ற தேவர்களுக்குரிய எண்ணற்ற பதவி இன்பங்களினும் மேலான இன்பவடிவினன் சிவபெருமான்-எனவே, 'ஈறு இலாப் பதங்கள் யாவையுங் கடந்த இன்பமே' என்றார்; ‘அன்பே சிவம்’ ஆகையால், 'என்னுடை அன்பே' என்றார்; மாறி நின்று மயக்குதல் என்பது, இறைநெறியில் சென்று பேரின்ப முழுமையறிவைப் பெற விடாமல் வழிமாறச் செய்வது; ஏனெனில், மனம் என்னும் கருவியின் கட்டுப்பாட்டில் உள்ள ஐந்துபுலன்களும் அவைகளுக்குரிய ஐந்துபொறிகள் வழியாக மனதைத் தம் வழியே திசைதிருப்பும் தன்மையுடையன.
மயக்கும் புலன்கள்
அறிவு பெறுவதில் நமக்கு வரமாகச் செயல்படும் பொறி,புலன்களே உலகச் சிற்றின்பம் துய்ப்பதற்கும் வாயில்களாக உள்ளமையால், பலவேளைகளில் மனதைத் தீய வழிகளில் திசைமாற்றும்போது சாபமாக மாறிவிடுகின்றன. எனவேதான், அவைகளை ‘மயக்கும் வஞ்சப்புலன் ஐந்தின் வழி’ என்றார் மணிவாசகர். எனவே இவைகளின் துணையுடன் இறைவனைக் காண இயலாது. சுவை, ஒளி, தொடுதல், ஓசை, மணம் என்று சொல்லப்படும் ஐம்புலன்களையும், மனதையும் தன்வயப்படுத்தி அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனுக்கே இவ்வுலகம் வசப்படும் என்கிறார் திருவள்ளுவர்.
சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என ஐந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு.
-திருக்குறள் 27
அப்பர் சுவாமிகளும் ‘இறைவனின் அருள்’ என்னும் கண்கொண்டு கண்டாலொழிய, மற்றைப் பொருள்கள்போல இன்னவகையுட்பட்டவன், இன்ன நிறத்தையுடையவன் , இன்ன வடிவத்தை உடையவன் என்று இவனைச் சொல்லோவியமாகவோ எழுத்தோவியமாகவோ எழுதிக் காட்டல் இயலாது என்கிறார்;
இறைவனின் அருள் என்னும் பேரின்பம் உள்ளேயிருந்து ஊறி எழும்போது, மயக்கும் ஐம்புலன்களும் செயல்மறந்து போவதால், ‘அடைத்து அமுதே ஊறி நின்று' என்றார். உலகோர் அனைவரும் இறைவனை கண்டுகளிக்குமாறு வழிகாட்டும் விருப்பத்தால், 'உள்ளவா காண வந்தருளாய்' என்றார். இறைவன் வெளிப்பட்டுத் தோன்றும்போது, புற உலகத்தையே காணும் உடலும் புலன்களும் ‘மாறி நின்று மயக்கும்’ செயல்மறந்து, இறைக்காட்சி காணும் புலன்களாக மாறும். தளைகள் அணுகவியலா இறைவன் உயிரை அணுகினால், உயிரைக் கட்டிய தளைகள் நில்லாமல் சென்று ஒழியும் என்பது திருமூலர் வாக்கு.
‘சார்ந்த வண்ணம் ஆதல்’ உயிரின் தன்மை (தத் த்வம் அசி) - நீ அதுவாக இருக்கிறாய்’ என்று வேதமும் கூறும். அதாவது, “நீ உடலைச் சார்ந்து, ‘உடலே நான்’ என்று வாழ்கிறாய்” என்கிறது வேதம். உடல்-பொறி-புலங்களால் கட்டுண்ட ‘நாம்’ உடல்-பொறி-புலன்களை நம் கட்டுக்குள் கொண்டுவருவோம்; இறைவனைக் காண்பதற்கு இதுவே முதல்படி ஆகும். இதில் வெற்றி கிட்டும்போது, நம்முள்ளும் அமுதே.
ஊறிநின்று பரஞ்சோதியாம் இறைவன் எழுந்து, உள்ளபடியே நாம் காண வந்தருள்வான் என்பது உறுதி. இறைக்காட்சிக்கான இரண்டாவது தகுதியைப் பேசும் திருவாசகத் தேனை அடுத்த வாரம் சுவைப்போம்.
தொடர்புக்கு:krishnan@msuniv.ac.in
(வாசகம் தொடரும்)