தஞ்சாவூர் மாவட்டம் கண்டியூர் (கண்டன க்ஷேத்ரம், பஞ்ச கமல க்ஷேத்ரம்) ஹரசாப விமோசன பெருமாள் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 7-வது திவ்ய தேசம் ஆகும். இத்தலத்தில் பிரம்மதேவன், திருமால், ஈசன் ஆகிய மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கின்றனர்.
திருமங்கையாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.
திருமங்கையாழ்வார் பாசுரம்:
பிண்டியார் மண்டை ஏந்தி பிறர்மனை திரிதந்து உண்ணும்
உண்டியான் சாபம் தீர்த்த ஒருவன் ஊர் உலகம் ஏத்தும்
கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சிபே மல்லை என்று
மண்டினார் உய்யல் அல்லால் மற்றையார்க்கு உய்யல் ஆமே
மூலவர்: ஹரசாப விமோசன பெருமாள், கமல நாதன்
தாயார்: கமலவல்லி நாச்சியார், பூரணவல்லி
தீர்த்தம்: கமல புஷ்கரணி (பத்ம தீர்த்தம்), கபால புஷ்கரணி (கதா தீர்த்தம்)
விமானம் : கமலாக்ருதி விமானம்
தல வரலாறு
ஈசனுக்கு 5 திருமுகங்கள் இருப்பது போல் பிரம்மதேவனுக்கும் 5 திருமுகங்கள் உண்டு. (ஈசனுக்கு ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம் என்ற ஐந்து திருமுகங்கள்.) ஒருசமயம் ஈசனுக்கு ஈடாக தன்னையும் நினைத்துக் கொண்டு மிகுந்த கர்வத்துடன் செயல்பட்டார் பிரம்மதேவன். இவரது ஆணவத்தை அடக்க வேண்டும் என்று எண்ணிய ஈசன், பிரம்மதேவனின் ஐந்து தலைகளில் நடுத்தலையை கிள்ளி எறிந்தார். அன்று முதல் பிரம்மதேவன் நான்முகன் ஆனார்.
பிரம்மதேவனின் தலையை கிள்ளி எறிந்ததால் ஈசனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. மேலும் கிள்ளி எறியப்பட்ட கபாலமும் ஈசனின் கையில் ஒட்டிக் கொண்டது. பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்குவதற்காக தலங்கள்தோறும் சென்று தரிசிக்கலானார். ஒரு இடத்தில் கபாலம் விழுந்தது. விழுந்த இடத்தருகே திருமால் இருந்தார். அந்த இடமே பூரணவல்லியுடன் அருள்பாலிக்கும் ஹரசாப விமோசனப் பெருமாள் கோயில் ஆகும்.
ஈசனின் (ஹரன்) சாபம் தீர்த்ததால், இத்தலப் பெருமாள் ஹரசாப விமோசனப் பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். இக்கோயிலை மகாபலி சக்கரவர்த்தி கட்டியதாக புராணச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதே ஊரில் ஈசனும் ‘கண்டீஸ்வரர்’ என்ற பெயரில் கோயில்கொண்டார். கண்டீஸ்வரர் கோயிலில் சரஸ்வதி தேவியுடன் பிரம்மதேவன் (நான்முகன்) அருள்பாலிக்கிறார். பிரம்மதேவனுக்கு எங்கும் கோயில் கிடையாது என்பதால் இத்தலத்திலேயே தனிசந்நிதியில் அருள்பாலிக்கிறார்.
தாமரை தடாகங்கள் நிறைந்து காணப்பட்டதால் ‘கமலாரண்யம்’ என்றும் மும்மூர்த்திகளுக்கும் கோயில் அமைந்து உள்ளதால் ‘திரிமூர்த்தி க்ஷேத்ரம்’ என்றும், தலத்தை நினைத்தவுடனேயே செய்த பாபங்கள் அனைத்தும் கழிவதால் ‘கண்டன க்ஷேத்ரம்’ என்றும் பெயர் ஏற்பட்டது.
இத்தல பெருமாள் மீது அளவு கடந்த பக்தி கொண்ட நாராயண தீர்த்தர், இத்தலத்துக்கு அருகில் உள்ள திருப்பூந்துருத்தியைச் சேர்ந்தவர். இவரது நூல் ‘கிருஷ்ண லீலா தரங்கிணி’ மிகவும் பிரசித்தி பெற்றது.
திருமங்கையாழ்வார் இத்தலப் பெருமாளை தனது பாசுரத்தில் ஸ்ரீரங்கம் பெருமாள், காஞ்சிபுரம் பெருமாள், கோவிலடி பெருமாளுடன் ஒப்பிட்டு பாடியுள்ளது சிறப்பு.
இத்தல பெருமாள் கமலாக்ருதி விமானத்தின் கீழ் இருந்து கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அகத்திய முனிவர் இத்தலத்தில் வந்து வழிபாடு செய்துள்ளார்.
இந்த திரிமூர்த்தி தலத்தைப் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் எட்டு அத்தியாயங்களிலும், திருமங்கையாழ்வார் பாசுரத்திலும், திருமுறைகளிலும் பிள்ளை பெருமாள் அய்யங்கார் அந்தாதியிலும் காணலாம்.
திருவிழாக்கள்
பங்குனி பிரம்மோற்சவம், ஐப்பசி பவித்ரோற்சவம், வைகுண்ட ஏகாதசி, கார்த்திகை தீப தினங்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள், பல வாகனங்களில் எழுந்தருளி சுவாமி வீதியுலா நடைபெறும். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மும்மூர்த்திகளையும் தரிசித்து அருள்பெறுவர்.
ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா 19 நாட்கள் கொண்டாடப்படும். விழாவில் கருட சேவை, தேர்த் திருவிழா, திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
ஈசனுக்கே தோஷம் போக்கிய தலமாதலால், இத்தல பெருமாளை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.
கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க சரஸ்வதி தேவியை வணங்க வேண்டும். பில்லி, சூனியம், ஏவல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வந்து இத்தலத்தில் வழிபட்டால் அனைத்து பிரச்சினைகளும் தீரும்.
அமைவிடம்: திருச்சி - திருவையாறு சாலையில், திருச்சியிலிருந்து சுமார் 55 கிமீ தொலைவில் உள்ளது.