திருச்சி மாவட்டம் அன்பில் சுந்தரராஜப் பெருமால் கோயில், திருமாலின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் 5-வது திவ்ய தேசம் ஆகும். பாற்கடலில் பள்ளி கொண்ட கோலத்தில் இருப்பதைப் போல இங்கும் திருமால் தாரக விமானத்தின் கீழ் உள்ளார். சோழர்களால் கட்டப்பட்ட இக்கோயிலின் விமானம் ராஜகோபுரம் போன்ற அமைப்பில் உள்ளது.
திருமழிசையாழ்வார் இத்தலத்தை மங்களாசாசனம் (நான்முகன் திருவந்தாதி) செய்துள்ளார்.
நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்
நாகத் தணையரங்கம் பேர் அன்பில்-
நாகத் தணைப் பாற்கடல் கிடக்கு மாதி நெடுமால்
அணைப் பார் கருத்தனாவான்.
மூலவர்: சுந்தரராஜப் பெருமாள்
உற்சவர்: வடிவழகிய நம்பி
தாயார்: அழகியவல்லி
தலவிருட்சம்: தாழம்பூ
தீர்த்தம்: மண்டுக தீர்த்தம்
தல வரலாறு
ஒருசமயம் நான்முகனுக்கு உலகில் தானே மிகவும் உயர்ந்தவர் என்ற எண்ணம் மேலிட்டது. மேலும் தான் மட்டுமே உலகில் உயிர்களைப் படைக்கிறோம் என்றும் அவை அழகாக இருப்பதற்குக் காரணம் தான்மட்டுமே என்ற ஆணவமும் வலுப்பெற்றது. இருப்பினும் தன்னை யாரும் வணங்குவதில்லையே என்ற ஆதங்கமும் எழுந்தது.
நான்முகனின் இந்த எண்ண ஓட்டத்தை உணர்ந்த திருமால், இதுகுறித்து நான்முகனை எச்சரித்தார். இதற்கெல்லாம் செவி சாய்க்காதவராக இருந்தார் நான்முகன். திருமால், நான்முகனைத் திருத்தும் நோக்கில், பூலோகத்தில் ஒரு சாதாரண மானிடப் பிறவி எடுக்குமாறு அவரை சபித்துவிட்டார்.
பூலோகத்தில் அனைத்து தலங்களுக்கும் சென்று தன்னுடைய தவறுக்கு மன்னிப்பு கோரி வந்தார் நான்முகன். இவ்வாறு ஒவ்வொரு தலமாகச் சென்று வரும்போது ஒருநாள் இத்தலத்துக்கு வந்தார். இத்தலத்தில் திருமாலை நோக்கி தவம் இருக்கத் தொடங்கினார்.
அச்சமயத்தில் திருமால் பேரழகு வாய்ந்த மனிதராக நான்முகன் முன்பு வந்தார். அப்போது அவரைக் கண்டு அவருடைய அழகு குறித்து வினவினார். அப்போது திருமால், நான்முகனிடம் அழகு நிலையற்றது. ஆணவம் ஒருவரை அழிக்கக் கூடியது. இவ்விரண்டையும் கொண்டிருப்பவர்கள் சிறந்த வாழ்க்கையைப் பெறுவதில்லை என்று கூறினார். உபதேசம் செய்ததோடு மட்டுமல்லாமல் பள்ளி கொண்ட கோலத்தில் இத்தலத்தில் எழுந்தருளினார். பிற்காலத்தில் சோழ மன்னர் ஒருவரால் கோயில் எழுப்பப்பட்டது. நான்முகனிடம் மிகுந்த அன்பு கொண்டு, திருமால் எழுந்தருளிய தலம் என்பதால் ‘அன்பில்’என்ற பெயரை இத்தலம் பெற்றது.
சுதபா என்ற முனிவர் தன் தவ வலிமையால் நீரிலும் நிலத்திலும் வாழும் பண்புகளைக் கொண்டிருந்தார். திருமால் மீது மிகுந்த பக்தி உடையவர். ஒரு சமயம் நீருக்கடியில் திருமாலை நோக்கி தவம் செய்து கொண்டிருந்தார். அப்போது அவரைப் பார்க்க துர்வாச முனிவர் வந்தார். நீருக்குள் இருந்ததால் சுதபா முனிவர், துர்வாசர் வந்ததை கவனிக்கவில்லை. வெகு நெரம் காத்திருந்ததால் கோபமடைந்த துர்வாசர், அவரை தண்ணீருக்கடியில் வாழும் தவளையாக (மண்டுகம்) பிறக்குமாறு சபித்துவிடுகிறார். இதன்காரணமாக சுதபா முனிவருக்கு மண்டுகர் என்ற பெயர் ஏற்பட்டது.
துர்வாசரிடமே சாப விமோசனம் குறித்து கேட்டார் மண்டுகர். முற்பிறவியில் செய்த கர்மத்தாலேயே இச்சாபம் கிடைத்தது என்றும், தகுந்த காலத்தில் திருமாலின் தரிசனம் அருளப் பெற்று சாப விமோசனம் கிடைக்கும் என்று மண்டுகரிடம் கூறினார் துர்வாசர். அதன்படி இத்தலத்தில் உள்ள தீர்த்தத்தில் (மண்டுக தீர்த்தம்) திருமாலை நோக்கி தவம் செய்தார் மண்டுக முனிவர். அவரது தவத்தை மெச்சி திருமால் அவருக்கு சுந்தரராஜராக காட்சி அளித்து சாப விமோசனம் கொடுத்தார்.
கோயில் மூலஸ்தானத்தில் ஆதிசேஷன் மீது பள்ளி கொண்ட கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி நாபியில் நான்முகனுடன் அருள்பாலிக்கிறார் சுந்தர்ராஜ பெருமாள். உத்தமர் கோயிலில் ஈசனின் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றதும், இத்தலத்துக்கு வந்து பெருமாளை தரிசனம் செய்தார்.
இத்தலத்தில் முன்மண்டபத்தில் ஆண்டாள் தனிசந்நிதியில் தெற்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். மூலவர் நின்ற கோலத்தில் இருக்க, உற்சவர் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். ஒரே சமயத்தில் ஆண்டாளின் இரண்டு கோலங்களை தரிசனம் செய்வது சிறப்பு. தேவலோக நடன மங்கை ஊர்வசி தன் அழகு மீது கர்வம் வந்துவிடாமல் இருப்பதற்காக ஆண்டாளை வணங்கிச் சென்றுள்ளாள். ஆண்டாளை வணங்கினால் விரைவில் திருமணம் நடக்க அருள்புரிவாள்.
பிரகாரத்தில் நரசிம்மர், வேணு கோபாலர், லட்சுமி நரசிம்மர், வீர ஆஞ்சநேயர், ஆழ்வார்கள் அருள்பாலிக்கின்றனர். திருச்சி, திருப்பேர் நகர், திருஅன்பில் என அருகருகே மூன்று திவ்ய தேசங்களில் பெருமாள் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
திருவிழாக்கள்
ஆடிவெள்ளி, தைவெள்ளியில் தாயார் புறப்பாடு, நவராத்திரி உற்சவம், திருக்கார்த்திகை திருநாட்களில் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெறும். வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு. மார்கழியில் திருவாய்மொழி, திருமொழி திருநாள், ராப்பத்து திருநாள் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். மாசி மாத தீர்த்தவாரியில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.
தாயாரையும், ஆண்டாளையும் வணங்குவதால் திருமணத் தடை நீங்கி வாழ்வில் ஒளி பிறக்கும்.
அமைவிடம்: திருச்சியில் இருந்து 21 கி.மீ., தொலைவில் உள்ளது.