ஜோதிடம் என்பதை எந்த அளவிற்கு நம்பலாம்? அதன்படி எல்லாம் சரியாக நடக்கிறதா? இது அறிவியல் பூர்வமானதா என்பது குறித்து பலர் பலவிதமாக சொல்லி வருகிறார்கள். முதலில் ஜோதிடம் என்றால் என்ன என்பது பற்றி கொஞ்சம் தெளிந்து கொள்வோம்.
பண்டைய காலத்தில் மக்கள் இயற்கையைக் கடவுளாக வணங்கி வந்தனர். அதில் மிக முக்கியமாக வானில் வலம் வரும் சூரியன் மற்றும் சந்திரனை கடவுளாக கொண்டு வழிபாடு செய்துவந்தனர். தாம் வழிபடும் சூரியன் மற்றும் சந்திரன் இருவரின் ஒளியை திடீரென்று மங்க செய்யும் சூரிய மற்றும் சந்திர கிரகணங்களை கண்ட முன்னோர்கள். இவ்வாறு நிகழ என்ன காரணம் என ஆராய ஆரம்பித்தனர். இதுவே வானிவியல் ஆராய்ச்சிக்கு வித்திட்டது.
வானவியலே கிரகங்களின் பருமன் முதற்கொண்டு இயக்கத்தையும், பால்வெளியில் இருக்கும் நட்சத்திர கூட்டத்தையும் மற்றும் கிரகங்களின் கட்டமைப்பையும், நிறத்தையும் மேலும் பல முக்கிய பண்புகளை மிக துல்லியமாக அளவிட உதவியது. இப்படியாக வானவியலில் இருந்து அறியப்பட்ட கிரக இயக்கங்கள் பூமியில் இருக்கும் உயிரினங்களை எவ்வாறு பாதிக்கும் என்ற ஆராய்ச்சி தொடங்கப்பட்டது அதன் பெயரே ஜோதிஷம் எனும் ஜோதிடம்.
ஜோதிஷம் என்னும் சமஸ்கிருத வார்த்தையின் பொருள் கிரகங்கள் பிரதிபலிக்கும் ஒளி மூலம் மனித வாழ்வியலை ஆராய்ந்து அறிவது என்பதாகும். மனித வாழ்வியலின் வழிகாட்டி என்பதாலேயே ஜோதிடம் 'வேதத்தின் கண்' என்று அழைக்கப்படுகிறது.
சூரியன் மற்றும் சந்திரன் நகர்வுகளை கண்ணால் கண்டு ஆராய்ச்சி செய்து, கிரகங்களின் இயக்கம் நட்சத்திரங்கள் கொண்டு அளவிடப்பட்டு பஞ்சாங்கம் உருவாக்கப்பட்டது. பஞ்சாங்கம் என்பது வாரம், திதி, கரணம், நட்சத்திரம் மற்றும் யோகம் என்ற ஐந்து காரணிகள் ஆகும்.
புவி மைய கொள்கையை (Geo-Centric) அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது ஜோதிடக் கலையாகும். அதாவது பூமியை மையமாக வைத்து அதனைச் சுற்றி இருக்கும் கிரகங்களின் இயக்கம் எவ்வாறு உயிரினங்களின் இயக்கத்தையும் வாழ்வியலையும் பாதிக்கிறது என்பதை கூறுவதே இக்கலையின் நோக்கமாகும்.
கிரகமும் ராசியும்
கிரகம் என்ற சமஸ்கிருத வார்த்தையின் பொருள் பற்றுதல் அல்லது பற்றி இழுத்தல் என்பதாகும். பிரபஞ்சத்தில் பல நட்சத்திர கூட்டங்கள் இருந்தாலும், சூரியன் எனும் நட்சத்திரம் மட்டுமே நமது பூமியின் இயக்கத்தையும் மற்றம் ஒன்பது கிரகங்களையும் பெருமளவில் பாதிக்கிறது. அது போலவே நமது பூமியின் துணைக் கோளான சந்திரனின் இயக்கம் பூமியை மிக அதிக அளவில் பாதிப்பதால்தான் பூமியை சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிவரும் சந்திரன் முக்கிய கிரகமாக எடுத்து கொள்ளப்பட்டு இருக்கிறது.
நமது பூமி 23°1/2 பாகை சாய்ந்து, தன்னை தானே சுற்றி கொண்டு சூரியனை சுற்றி கொண்டு இருக்கிறது என்பதை வானியல் கணிதம் மூலம் உணர்ந்தனர். இந்த பூமியின் சுழற்சி மூலம் தட்பவெப்பநிலை மாற்றங்கள் உண்டாவதையும் உணர்ந்தனர். இத்தகைய புவியின் இயக்கம் சூரியனின் ஈர்ப்பு விசையாலும் மேலும் அதை சுற்றி இருக்கும் கோள்களின் பாதிப்பாலும் ஏற்படுகிறது.
தட்ப வெப்ப நிலை மாற்றங்கள் என்பவை நீர் நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற பஞ்சபூதங்களில் மூலமே பூமியில் நிகழ்கிறது. இந்த பஞ்சபூதங்கள் மூலமே கிரகங்கள் மனிதர்களை இயங்குகின்றன. இரவு பகலாக கண்விழித்து பூமி சுற்றி வரும் பாதையில் இருக்கும் நட்சத்திர கூட்டங்களைக் கூறுகளாக்கி ராசி என்று பெயர் வைத்தனர்.மேலும் ராசிகளின் வடிவமைப்பைக் கொண்டு அதற்கு தகுந்த பெயரிட்டனர்.
ஜோதிடம் ஒரு அறிவியலா?
இவ்வாறாக வானவியலில் இருந்து ஜோதிடம் தோன்றியது. கிரக இயக்கங்களைப் பஞ்சாங்கம் கொண்டு கணித்து, மேலும் பல கணித சூத்திரங்கள் கொண்டு மனித வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை சொல்வதால் ஜோதிடம் ஒரு அறிவியலே என்று கூறுகிறார்கள்.
இது எந்த அளவுக்கு உண்மை? மேலும் ஆராய்வோம்.