கூத்தாண்டவர் எனப்படும் அரவான் திருவிழாக்கள் தமிழகத்தில் வெவ்வேறு விதமாக கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், ‘அன்னு (அன்று) கட்டி அன்னே (அன்றே) தாலி அறுக்கும் கூத்தாண்டை’ திருவிழாவாக இது கொண்டாடப்பட்டுவருவது ஒரு சில ஊர்களில் மட்டுமே. அந்த வகையில் கோவை சிங்காநல்லூர் அரவான் கோயிலில் இந்த வைபவம் வருடந்தோறும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
மகாபாரதப் போரில் பாண்டவர்களின் வெற்றிக்காகக் கள பலி கொடுக்கப்பட்டவன் அரவான். இவன் உலூபி என்ற நாக கன்னிகைக்கும், அர்ச்சுனனுக்கும் பிறந்தவன். அரவான் கள பலியாக்கப்பட்டதற்குப் பல விதமான கதைகள் சொல்லப்படுகின்றன. அதில் ஒன்று இப்படிப் போகிறது: அரவான் மிகுந்த ஆற்றல் கொண்டவன். அவன் போரிட்டால் ஒற்றையாளாக நின்று எதிரிகளைத் துவம்சம் செய்துவிடுவான்; அதனால் பாண்டவர்கள் அடையும் வெற்றியின் பெருமை சோபையில்லாது போகும் என்பதால் மாயக்கிருஷ்ணன், நிறைந்த அமாவாசசையன்று அரவானைக் கள பலியாக்கினால் வெற்றி உறுதி என்று சொல்கிறான். பாண்டவரின் வெற்றிக்காகக் கள பலியை மனமுவந்து ஏற்கிறான் அரவான்.
அரவானுக்கு மனைவியாகும் பொங்கியம்மாள்
இந்த அரவானுக்கும் கூத்தாண்டவர் திருவிழாவுக்கும் என்ன தொடர்பு? திருமணமாகாத இளைஞனைக் கள பலியாக்குவது மரபில்லை. அதற்காக அரவானுக்கு திருமணம் செய்விக்க வேண்டும். ஆனால், நாளைக்குச் சாகவிருக்கும் ஒருவனுக்கு யாராவது பெண் தருவார்களா? அதாவது, ‘அன்னு கட்டி அன்னு அறுக்க பெண் வேணும்!’ என்றால் கிடைக்குமா? எனினும், பீமனும் கிருஷ்ணனும் மணப்பெண்ணைத் தேடுகிறார்கள். அன்றே திருமணம் செய்து அன்றே புருஷனை இழக்க எந்தப் பெண் வீட்டார் சம்மதிப்பார்கள்?
பெண்ணே அகப்படாத நிலையில் அயோத்தியாபுரி பட்டினத்தில் பூலுவர் தெருவில் பொங்கியம்மாள் என்ற பெண்ணை எடைக்கு எடை பொன் கொடுத்தால் தருவதாகச் சொல்கிறாள் பெண்ணின் சின்னம்மா காளியக்காள். எடைக்கு எடை பொன் கொடுத்து பொங்கியம்மாளை அரவானுக்குத் திருமணம் செய்விக்கிறார்கள்.
திருமணம் முடிந்த கையோடு, அரவான் கள பலியாவதைத் தடுக்க மணப்பெண்ணின் சமூகத்தார் மாப்பிள்ளை அரவானைப் பல வழிகளில் மறைத்து வைக்கிறார்கள். அதையும் மீறி கள பலியாகும் கணவனைத் தேடிப் பொங்கியம்மாள் அனுமன் துணையுடன் கட்டுச் சோறு கட்டிக்கொண்டு செல்கிறாள். இறுதியில் கள பலியான அரவானை கண்டு மயங்கிச் சரிகிறாள். கள பலியான அரவான், ‘நான் பலியான பிற்பாடு மக்கள் என்னை பூலோகத்தில் கூத்தாண்டையாகக் கொண்டாட வேண்டும்!’ என்று மாயவனிடம் வரம் பெற்றிருக்கிறான். அதை முன்வைத்தே இந்தத் திருவிழாவாக்கிக் கொண்டாடுகிறார்கள் பக்தர்கள்.
யாரும் பெண் கொடுக்க முன்வராத நிலையில் கிருஷ்ணனே பெண்ணாக மாறி அரவானைத் திருமணம் செய்துகொண்டதாகவும் ஒரு கதை உள்ளது. ஆணாக இருந்து பெண்ணாக மாறுபவர்கள் பெண்ணாக மாறிய கிருஷ்ணனின் நினைவாக மூன்றாம் பாலினத்தவர் கூத்தாண்டவர் கோயிலில் இந்த விழாவைக் கொண்டாடுவதாகவும் கருதப்படுகிறது.
பொங்கியம்மாள் கதையை அடிப்படையாகக் கொண்ட சம்பிரதாயப்படி, கோவையில் நீலிக்கோணாம்பாளையம் என்ற ஊரை மாப்பிள்ளையின் (அரவான்) ஊராகவும் அங்கிருந்து 3 கிமீ தொலைவில் உள்ள சிங்காநல்லூரை மணப் பெண்ணின் (பொங்கியம்மாள்) ஊராகவும் வைத்து இந்தத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
கடந்த வாரம் நீலிக்கோணாம்பாளையம் கோயிலில் கம்பம் நடப்பட்டு இத்திருவிழா தொடங்கியது. இங்கே உள்ள மேடையில் தங்க முகம் வைத்து அலங்கரிக்கப்பட்டு செவ்வாய்க்கிழமையன்று மாப்பிள்ளைக் கோலம் பூண்ட அரவான் சிங்காநல்லூர் செல்கிறான். புதன்கிழமை இரவு திருக்கல்யாணம் நடக்கிறது. வியாழனன்று அரவானை அனுமனும், பொங்கியம்மாளும் தேடும் படலம். இதன் உச்சகட்ட நிகழ்வான கள பலி வெள்ளியன்று (11-ம் தேதி) நடக்கிறது.
4 நாட்கள் வெகு விமரிசையாக நடக்கும் இந்தத் திருவிழா நீலிக்கோணாம்பாளையம், சிங்காநல்லூருக்கு மட்டுமல்ல, அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஒண்டிப்புதூர், ராமநாதபுரம், புலியகுளம், உப்பிலிபாளையம் உள்ளிட்ட 7 ஊர் மக்களின் கொண்டாட்டமாக ஆண்டாண்டு காலமாக நடைபெற்றுவருகிறது.
இந்தத் திருவிழாவின்போது இக்கோயிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். திருவிழாவில் புதிதாகத் திருமணமான மணப்பெண், அரவானையும், பொங்கியம்மாளையும் காணக் கூடாது என்பது ஐதீகம். கள பலிக்குக் கொண்டுசெல்லப்படும் அரவானைத் தேடி அலையும்போது பொங்கியம்மாளின் முகம் வேர்த்து இப்போதும் கண்ணீர் வடிப்பதாக நம்புகிறார்கள் பக்தர்கள்.
‘முப்பத்து முக்கோடி தேவர்களின் அருள் பெற்றவன் அரவான். அவனை விழா நாளில் வழிபடுவது அத்தனை தேவர்களிடமும் வரம்பெற்றதுக்கு ஈடாகும்!’ என்கின்றனர் கோயில் பொறுப்பாளர்கள். இந்த விழா முடிந்த பிறகு கோவையில் வெள்ளலூர், குறிச்சி, துடியலூர் ஆகிய ஊர்களில் அரவான் திருவிழா நடக்கிறது. என்றாலும் பெரிய அளவில் நடக்கும் திருவிழா இது ஒன்றுதான்.