ஆன்மிகம்

மகிழ்ச்சியைத் தூது விட்ட நடனம்

வா.ரவிக்குமார்

சங்கீத கலாநிதி டாக்டர் எஸ். ராமநாதன் அவர்களின் பெயரில் நிறுவப்பட்ட அறக்கொடை, ஆண்டுதோறும் நாரத கான சபாவின் நாட்டியரங்கத்தின் வழியாக ஒரு நடன நிகழ்ச்சியை வழங்கும்.

எஸ்.ராமநாதனின் குடும்பத்தார் இத்தகைய ஏற்பாட்டைத் தொடங்கினர். தமிழ் இலக்கியத்திலிருந்து நடனத்துக்கான கருத்து எடுத்துக்கொள்ளப்படும். ஒரு சிறந்த நடனக் கலைஞரின் மூலமாக நடன வடிவில் அது வெளிப்படும்.

இந்த ஆண்டு தமிழ் இலக்கியத்தில் ஒரு பகுதியான தூது என்ற தலைப்பில், நடனக் கலைஞர் லாவண்யா அனந்த் நிகழ்ச்சியை வழங்கினார். அதற்கு முன்பாக பேராசிரியர் ரகுராமன் தூது குறித்து சிற்றுரை ஆற்றினார்.

திருக்குறளில் தூது என்னும் அதிகாரத்திலிருந்து சில குறள்களை ராகமாலிகையாகவும், மகாபாரதத்தில் பாண்டவர்களின் சார்பாக கிருஷ்ணன் தூது போவதை மிக நளினமாகவும் காட்சிப்படுத்தினார் லாவண்யா. தொடர்ந்து நாச்சியார் திருமொழியிலிருந்து மேகம், குயில், கடல், மழை ஆகியவை தூது போகும் சம்பவங்கள், ராமாயணத்தில் அனுமன் தூது போகும் காட்சி, நற்றிணைப் பாடல் ஒன்றில் தலைவிக்காக தூது போகும் சகி (தோழி) என புராணம் முதல் சங்க இலக்கியம் வரை பலவகையான தூதுக் காட்சிகளையும் மிகவும் நேர்த்தியாக மேடையில் கொண்டுவந்து, ரசிகர்களிடையே மகிழ்ச்சியைத் தூதுவிட்டார் லாவண்யா.

இது சங்கீத கலாநிதி டாக்டர் எஸ். ராமநாதன் அவர்களின் நூற்றாண்டு. (புகழ் பெற்ற வீணைக் கலைஞரும் தமிழ்ச் சிறுகதை எழுத்தாளருமான கீதா பென்னட், ராமநாதன் அவர்களின் புதல்வி.)

எஸ்.ராமநாதன்

SCROLL FOR NEXT