முதுமை அடைவதால் உண்டாகும் நலிவைத் தீர்ப்பவரும் (மூப்பூர் நலிய நெதியார் சம்பந்தர்) பிறப்பை அறுத்துக் கவலை தீர்ப்பவருமாகிய சோமேசப் பெருமான் அருள் பாலிக்கும் தலம் கும்பகோணம் சோமேஸ்வரர் திருக்கோயில். திருக்குடந்தைத் காரோணம் என்று தேவாரத்துள் சம்பந்தரால் பாடப்பெற்ற சிறப்புக்குரியது இக்கோயில். கும்பகோணம் பொற்றாமரைக் குளத்தில் கீழ்க்கரையில் அமைந்துள்ளது.
சிவலிங்கமான சிக்கம்
பிரளயம் ஏற்படுவதை அறிந்த பிரம்மன், சிவனின் ஆணைப்படி சிருஷ்டி பீஜங்களை (வித்துக்களை) ஒரு குடத்தில் வைத்துப் பூஜித்து வந்தான். பிரளயத்தின்போது அந்தக் குடம் மிதந்து வந்து ஓரிடத்தில் தங்கியது. சிவபெருமான் வேடராக வந்து அம்பினால் அக்குடத்தை உடைத்தார். அந்தக் குடத்தின் மூக்கு விழுந்த இடம் குடமூக்கு. அக்குடம் வைத்திருந்த உறி (உறி சிக்கம்) இத்திருக்கோயிலில் விழுந்து லிங்கமாக மாறியது. அக்காரணத்தால் இத்தலத்திலுள்ள இறைவன் சிக்கேசர் என்று அழைக்கப்படுகிறார்.
சிவனை ஆரோகணித்த அம்பிகை
இத்தலத்தில் அருள் பாலிக்கும் அம்பிகையின் திருநாமம் தேனார்மொழியம்மை. அம்பிகை இறைவனின் திருமேனியை ஆரோகணித்த காரணத்தால் இத்தலம் காரோணம் என்று அழைக்கப்படுகின்றது. அம்பிகைக்கு சோமசுந்தரி என்ற பெயரும் உண்டு. இக்கோயில் கிழக்கு முகமாக அமைந்தது. கோபுரம் மிகச் சிறியது.
சோமனின் சாபம் தீர்த்த சிவன்
சோமன் எனப்படும் சந்திரனுக்கு பிரகஸ்பதியால் ஒரு சாபம் ஏற்பட்டது. அச்சாபம் நீங்கும் பொருட்டு இத்தலத்தில் ஒரு தீர்த்தத்தை (சந்திர புட்கரணி) உண்டாக்கி இறைவனை வழிபட்டான். இறைவன் அவனது சாபத்தை நீக்கி அருளினார். அதனால் இறைவனுக்குச் சோமேசர் என்ற பெயர் வழங்கலாயிற்று. ஒருமுறை திருமால் இத்தலத்தில் வந்து சோமேசுவரரை ஓராண்டு காலம் பூசித்துவந்தார். அதன் பயனாக அசுரர்களை அழிக்கும் வல்லமையும் பெற்றார். அவ்வாறு மாலுக்கு அருள் செய்த ஈசன் பெயர் மாலீசர். ராஜகோபுரம் வழியாக உள்ளே வந்தால் மாலீசரையும் மங்களாம்பிகையையும் தரிசிக்கலாம்.
வளர்பிறை சதுர்த்தசி
அகிலம் உய்ய ஆனந்த நடம் புரியும் நடராஜர் இத்தலத்தில் அற்புதமாகக் காட்சியளிக்கிறார். முட்டை வடிவமான திருவாசியில் நட்டம் பயில்கிறார். அம்மை அருகில் நின்று கண்டு களிக்கிறார். அப்பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு கால அபிஷேகம் நடைபெறுகிறது.புரட்டாசி மாதம் வளர்பிறை சதுர்த்தசியில் இத்தலத்தில் நடைபெறும் நடராஜர் அபிஷேகம் சிறப்பு வாய்ந்தது.