திருப்பதி: திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள அலிபிரியில் திருப்படி திருவிழா நேற்று அதிகாலை வெகு விமரிசையாக நடைபெற்றது.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தாச சாகத்யம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திருப்படி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நேற்று அதிகாலை திரிமாசிக திருப்படி திருவிழா நடந்தேறியது. இதனையொட்டி, தாச சாகத்ய திட்ட சிறப்பு அதிகாரி அனந்த தீர்த்தாச்சாரி தலைமையில் தமிழகம், கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களை சேர்ந்த பக்தி பாடல் குழுவினர், திருப்பதி 3வது கோவிந்தராஜ சத்திரத்தில் இருந்து அலிபிரி வரை பாத யாத்திரையாக பஜனை கோஷங்களை எழுப்பியவாறு வந்தனர்.
பின்னர், அலிபிரியில் உள்ள பாதாள மண்டபம் அருகே திருப்படிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதன் பின்னர் அனைவரும் ஒவ்வொரு படிகளுக்கும், மஞ்சள், குங்குமமிட்டு பூஜைகள் செய்தவாறு திருமலைக்கு சென்றனர். ராமானுஜர் தனது முழங்காலால் நடந்த அந்த திருப்படிகளில், அன்னமாச்சாரியார், புரந்தர தாசர், விஜயநகர பேரரசர் கிருஷ்ண தேவராயர் போன்ற பலர் படி ஏறி சென்று ஏழுமலையானுக்கு சேவைகள் புரிந்துள்ளனர். ஆதலால், ஒவ்வொரு ஆண்டும், திருப்படி திருவிழா நடத்துவது ஐதீகம் என தாச சாகித்ய அகாடமி சிறப்பு அதிகாரி அனந்த தீர்த்தாச்சாரி கூறினார்.