ஆன்மிகம்

பட்டினியைப் போக்கிய மதம்

ஜெய்

மஸ்டாக்கிஸம் பெர்சியாவில் (ஈரானில்) கி.மு. 6 - 5-ம் நூற்றாண்டுகளில் பின்பற்றப்பட்ட முக்கியமான மதம். கிட்டத்தட்ட எட்டு நூற்றாண்டுகள் இந்த மதம் மக்களால் பின்பற்றப்பட்டது. பிறகு இந்த மதம் செல்வாக்கு இழந்து இன்று காணாமல் போய்விட்டது. இதைத் தோற்றுவித்தவர் பெர்சியாவின் சமூக சீர்திருத்தவாதியான மஸ்டாக். இவர் தன்னை ஒரு நபியாக அறிவித்துக்கொண்டார். மஸ்டாக்கிசம் மதத்திற்கான ஒரு அமைப்பையும் உருவாக்கி, அதன் மூலம் சமூக நலத் திட்டங்களையும் முன்னெடுத்தார். மஸ்டாக் பெர்சியாவில் பெருவாரியாகப் பின்பற்றப்பட்ட ஜொராஷ்ட்ரியன் மதத்தின் போதகராக இருந்தவர்.

மஸ்டாக்கிஸம் மதம் தோன்றக் காரணமாக இருந்தது சஸ்ஸானிட் அரச வம்ச ஆட்சியின் மக்கள் விரோதப் போக்குதான். ஒரு சாரார் செல்வந்தர்களாக வாழ்ந்த அந்த நாட்டில் சிலர் வறுமையில் உழன்றுகொண்டிருந்தனர். மஸ்டாக்கிஸம் சமத்துவத்தை வலியுறுத்தியது. மஸ்டாக்கிஸம் மதத்தைப் பின்பற்றுபவர்கள் மிதமிஞ்சிய செல்வச் செழிப்பு மிக்க மாளிகைக்குள் நுழைந்து சோதனையிட்டனர். இந்தச் சமூகச் சீர்திருத்தப் போக்கிறகுப் பயன் கிடைத்தது. மன்னன் முதலாம் காவாடுவா மஸ்டாக்கிஸம் மதத்தைத் தழுவினான். அதன் பிறகு பல மக்கள் நலத் திட்டங்களை மன்னன் அறிமுகப்படுத்தினான். ஏழைகளுக்குத் தனியான தங்கும் விடுதிகளை ஏற்படுத்தித் தந்தான்.

ஆனால் இது நீடிக்கவில்லை. மன்னனின் இந்த நடவடிக்கை, அந்நாட்டின் பிரபு குலத்தவருக்கும் அங்குப் பாரம் பரியமாக இருந்த ஜொரஷ்ட்ரியன் மதகுருமார்களுக்கும் பிடிக்கவில்லை. இவர்களின் கடுமையான எதிர்ப்பின் காரணமாக மன்னன் பதவியிழக்க வேண்டி வந்தது. ஆனாலும் அண்டை நாட்டு அரசுகளின் ஆதரவுடன் மூன்றே ஆண்டுகளில் மீண்டும் ஆட்சியைப் பிடித்தார். ஆட்சியை இழந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வால் அவர் மஸ்டாக்கிஸம் மதத்திலிருந்து தன்னை விலக்கிக்கொண்டார். அது மட்டுமல்லாமல் மஸ்டாக்கிஸத்திற்கு எதிராகப் பிரச்சாரத்தை முன்னெடுக்க தன் மகனுக்கு அனுமதி வழங்கினார்.

இதற்கிடையில் மஸ்டாக்கிஸம் மதத்தைப் பின்பற்றுவர்கள் பலரும் அரசால் படுகொலை செய்யப்பட்டார்கள். தப்பிய சிலர் வெகு தொலைவில் சென்று தலை மறைவு வாழ்க்கையைத் தொடங்கினர். அவர்களின் தலை முறையினர் இன்று பெளத்தர்களாக வாழ்வதாகச் சொல்லப்படுகிறது.

மஸ்டாக்கிஸம் இருளையும், ஒளியையும் இரு முக்கியமான அம்சங் களாக விவரிக்கிறது. ஒரு விபத்தால் இவை இரண்டும் இணைந்து பிரபஞ்சம் உருவானதாகச் சொல்கிறது. ஒளி இறைவனின் அடையாளமாகவும், இருள் சாத்தானின் அடையாளமாகவும் பார்க்கப்படுகின்றன. ஒரு மனிதனின் கடமை என்பது நன்னடத்தையின் வழியாக அவன் உலகுக்கு ஒளியை அளிக்க வேண்டும் என்று இந்த மதம் போதிக்கிறது. கொலை செய்வதையும், மீனை உண்பதையும் மிகப் பெரிய பாவம் எனவும் அன்புடனும் அமைதியுடனும் வாழ்வதே இறைவனுக்குச் செய்யும் பிரார்த்தனை எனவும் சொல்கிறது.

SCROLL FOR NEXT