‘மெய்யாகவே இறைவனிடம் அன்பு செலுத்துவதும் அவனை அடைவதும் எப்படி?’ என்று மனித உடலில் வாழும்போதே இறையனுபவம் பெற்ற மாணிக்கவாசகரிடமே கேட்டுவிடுவோம் என்ற எண்ணம் தோன்றியது. மாணிக்கவாசகர் இறைவனுக்கு எழுதிய காதல் கடிதங்களை வாசித்தால் விடை கிடைக்கும் என்று தோன்றியது. நல்லவேளை, அத்தகைய கடிதங்களைத் தொகுத்துத் ‘திருவாசகம்’ என்றும், ‘திருக்கோவையார்’ என்றும் வைத்திருந்தார்கள்.
ஒவ்வொரு கடிதமாக வாசிக்கத் தொடங்கினேன். ஒரே புலம்பலாகத் தோன்றியது. பக்கங்கள் ஓடின. சரிப்பட்டுவராது என்று மனதில்பட்டது; மூடிவைத்துவிட்டேன். சரி, குத்துமதிப்பாக ஒரு பக்கத்தைத் திறப்போம்; ஏதாவது கிடைத்தால் சரி; இல்லன்னா மூடிவைப்போம் என்று முடிவெடுத்து, ஒரு பக்கத்தைப் புரட்டினேன். ‘கோயில் மூத்ததிருப்பதிகம்’ என்ற தலைப்பைப் பார்த்ததும் ‘சப்’பென்று போய்விட்டது. இருந்தாலும் ஒருவரி வாசிப்போம் என்று பார்த்தபோது, முதல் பாடலிலேயே நான் கேட்ட கேள்விக்கு விடை கிடைத்துவிட்டதோ என்று தோன்றியது.
அந்தப் பாடலில் இறைவனிடம் அன்பு செய்வதற்கு, இறைவனிடமே ஒரு சின்ன ஒப்பந்தம் போடுகிறார் மாணிக்கவாசகர்: “அப்பனே! அம்மையோ உன் இதயத்தின் நடுவில் இருக்கிறாள்! நீயோ அம்மையின் இதயத்தினுள் இருக்கிறாய்! நீவிர் இருவரையும் என் இதயத்துள் இருத்த எனக்கு ஆசை போட்டு அடிக்கிறது. அதற்கு நீர் ஒரு சிறிய உதவி எனக்குச் செய்தால் போதும். என்னை உன் அடியார்கள் நடுவில் கொண்டு வைத்துவிடும்” என்பதுதான் அது.
உடையாள் உந்தன் நடு இருக்கும்! உடையாள் நடுவுள் நீ இருத்தி!
அடியேன் நடுவுள் இருவீரும் இருப்பதானால், அடியேன் உன்
அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய்! பொன்னம்பலத்து எம்
முடியா முதலே! ஏன் கருத்து முடியும் வண்ணம் முன்னின்றே! -திருவாச:21-1
புரிந்துவிட்டது எனக்கு. திரையரங்கில் வழியும் கூட்டத்தோடு கூட்டமாக நின்றாலே போதும். அக்கூட்டத்தினரே நம்மை அரங்கினுள் சென்று சேர்த்துவிடுவதைப் போல, அடியவர்கள் கூட்டத்தோடு கூட்டமாக இருந்தாலே போதும். அவர்களுக்கு அருளும் இறைவன் நமக்கும் அருள்வது உறுதி. அடியவர்கள் நடுவில் இருந்தால், அம்மை-அப்பனின் அருஞ்செயல்களைப் பேசுவர்; அவனின் திருவார்த்தைகளைச் சிந்திப்பர்; அவனின் திருநாமங்களைப் பாடிக் களிப்பர். அந்தச் சூழலில், சொந்த முயற்சி இல்லாமலேயே, அம்மையப்பன் நம் இதயத்தில் குடியேறிவிடுவர். என்ன அருமையான சுருக்கு வழி. நாமும் இதற்கு முயற்சி செய்து பார்த்துவிடுவது என்று ‘தீர்மானம்’ செய்துவிட்டு இறைவனைக் காணப்போகிறோம் என்ற நிறைவுடன் உறங்கினேன்.
ஏன் வானம் வசப்படவில்லை?
தமிழக சிவாலயங்களில் இப்போதெல்லாம் ‘திருவாசக முற்றோதுதல்’ அடியவர்களால் அதிகம் நிகழ்த்தப்பெறுகின்றன. ‘திருவாசகம் முற்றோதுதல்’ நிகழ்ச்சிகள் சிலவற்றில் கலந்துகொண்டபின்பு, திருவாசகம் ஓதுதலும், திருவாசகத்தில் உருகுதலும் அனுபவத்தில் கனிந்து வரும் நிகழ்வாக இல்லாமல், ‘திருவாசகம் முற்றோதுதல் நன்மை பயக்கும்’ என்ற நம்பிக்கை சார்ந்த ஒரு சமயச் சடங்காக நிகழ்வதாகவே ஒரு உணர்வு என்னுள் உண்டாயிற்று. ‘திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்ற பழமொழி தமிழரிடை வழங்கி வருவதென்னவோ உண்மைதான். ஆயினும், ஏன் பலருக்கும் அந்த வானம் வசப்படவில்லை என்ற எண்ணமே பெரிதும் தலைதூக்கியது.
விசாரித்துப் பார்த்ததில், ஒரு சில அடியார்கள் சரியாக வழிகாட்டினார்கள். இராமலிங்க வள்ளலார் மாணிக்கவாசகரின் அடியொற்றி, இறைவனைக் கண்டவர் என்று கூறினார் அவர். அப்படியானால் சரி, வள்ளல் பெருமானையே கேட்டுவிடுவோம் என்று முடிவெடுத்து, திருவாசகத்தைப் பற்றி வள்ளலார் உரைத்த “வான் கலந்த மாணிக்கவாசக, உன் வாசகத்தை நான் கலந்து பாடுங்கால்” என்ற வாக்கைப் பற்றினேன். ஆம், வெறும் திருவாசக வாசிப்பு மட்டும் போதாது; ‘திருவாசகத்தில் “நான்” கலந்து பாடினாலே இறைவனைச் சிக்கெனப் பிடிக்க இயலும் என்பதை உணர்ந்தேன். அப்படி “நான்” கலந்து பாடினால் என்ன நிகழும்?
இதோ வள்ளல் பெருமானின் வாக்குமூலத்தைக் கேளுங்கள்:
“நல்ல கரும்புச் சாற்றினில் தேன் கலந்து, பால் கலந்து, நன்கு பழுத்துக் கனிந்த பழச்சாற்றினைக் கலந்து ...”; சிறிது பொறுங்கள்; இத்தனையும் கலந்தால், திகட்டிவிடுமே? நன்றாக இருக்குமா? என்று கேட்டேன் வள்ளல் பெருமானிடம். பெருமான் கூறினார், “இத்தகைய சுவையுடன், உங்கள் ஊனையும், உயிரையும் கலந்து விடுங்கள்; திகட்டாமல் நிலைத்த இனிமை கிட்டும்” என்றார்.
“வான்கலந்த மாணிக்கவாசக! நின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால், நற்கருப்பஞ்சற்றினிலே
தேன்கலந்து, பால்கலந்து, செழுங்கனித் தீஞ்சுவை கலந்து,என்
ஊன்கலந்து, உயிர்கலந்து, உவட்டாமல் இனிப்பதுவே!”- வள்ளலார் பெருமான்.
இதற்கு மேலும் விளக்கம் வேண்டுமோ? வள்ளல் பெருமான் “வாழையடி வாழையாய் வந்த அடியார்த் திருக்கூட்ட மரபினுள்” நம்காலத்திற்கு அண்மையில் வாழ்ந்தவர். அவர்வழி அடியொற்றி, திருவாசகத்தில் “நாம் கலந்து” சுவைத்து, இறைவனைச் சிக்கெனப் பிடித்து உயர்வடைவோம்.
(வாசகம் தொடரும்)