ஆன்மிகம்

தத்துவ விசாரம்: எதைத் தேர்ந்தெடுக்க வேண்டும்?

ஸ்ரீராம்

வாழ்க்கை சிலருக்கு சரியாகவும், மகிழ்ச்சியாகவும் போகிறது. வேறு சிலருக்கு வாழ்க்கை கொந்தளிப்பானதாகவும், கசப்பானதாகவும் போகிறது. எதைத் தேர்ந்தெடுக்கிறோம், கையாள்கிறோம் என்பதைப் பொறுத்தே மகிழ்ச்சியும் கவலையும் அமையும்.

வெண்மை நிறம் சர்க்கரைக்கும் உப்புக்கும் ஒன்றுதான். இரண்டையும் கலந்து ஓரிடத்தில் வைத்துவிட்டு கவனித்தால், அங்கு வரும் எறும்புகள் உப்பை நாடாமல் சர்க்கரையை மட்டும் தேர்ந்தெடுத்து உண்ணும்.

வைணவத்திலே கோழிபோல இருத்தல் என்ற நிலையைச் சொல்வார்கள். குப்பை மேட்டில் எத்தனையோ இருப்பினும், கோழி தனக்கு வேண்டியதை மட்டும் கிளறிக் கிளறி எடுக்கும்.

நல்லது கெட்டது இரண்டிற்குமே இது பொருந்தும்.

வாழ்வின் இனிமைக்கும், கடுமைக்கும் எதைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதே காரணமாக அமைகிறது. மகாபாரதத்தில் ஓர் அற்புதமான கட்டம். மகாபாரதச் சண்டை முடிவாகிவிட்டது.

போருக்கு துரியோதனாதியர் பக்கத்திலிருந்து போரிடவும், பாண்டவர்கள் பக்கத்திலிருந்து போரிடவும் படை திரட்டப்பட வேண்டும்.

கண்ணனிடம் யாதவப்படை இருக்கிறது. கண்ணனிடம் உதவி கேட்டு துரியோதனனும், அர்ஜூனனும் வந்தனர். கண்ணன் அப்போது தூங்கிக் கொண்டிருக்கிறான். அர்ஜூனன் கால் பக்கத்திலும், துரியோதனன் தலை பக்கத்திலும் அமர்ந்து, கண்ணன் கண் விழிக்கட்டும் என்று காத்திருந்தார்கள்.

கண்ணன் எழுந்தவுடன் முதலில் அர்ஜூனனைப் பார்த்தான். ‘என்ன அர்ஜூனா எப்போது வந்தாய்?’ என்று கேட்டவுடன் துரியோதனன் சங்கடமாகி, தானே முதலில் வந்து அமர்ந்திருப்பதாக கூறினான்.

‘ஓ துரியோதனா, நல்லது. ஏதோ காரியத்திற்காக இரண்டு பேரும் வந்திருக்கிறீர்கள். சரி. முதலில் நான் பார்த்தது அர்ஜூனனை. தவிர, அவன் உன்னைவிட இளையவன். முதலில் அவனைக் கேட்கிறேன்’ என்றான் கண்ணன்.

இருவரும் பாரத யுத்தத்தில் கண்ணனின் உதவியைக் கேட்டு வந்திருந்தனர்.

“மகாபாரத யுத்தத்தில் என் உதவியை நாடி வந்திருக்கிறீர்கள். என்னுடைய படைகள் அல்லது ஆயுதமில்லாத வெறும் ஆளாக நான். எது வேண்டும்?”

துரியோதனனுக்கு மனது திடுக்திடுக் என்று அடித்துக்கொண்டது. அர்ஜூனன் படையைக் கேட்டுவிட்டால் வெறும் ஆளாகிய கண்ணனை வைத்துக் கொண்டு என்ன செய்வது? பகவானே, அர்ஜூனன் படையைக் கேட்காமலிருக்க அருள்புரிவாய் என்று வேண்டிக் கொண்டான்.

கண்ணனிடம் அர்ஜூனன், “நீ மட்டும் போதும்” என்றான். துரியோதனனுக்கு நிம்மதி.

அர்ஜூனன் எதைப் பெற்றால் எல்லாம் பெற்றதாக ஆகுமோ அதைப் பெற்றான். துரியோதனனோ எல்லாம் பெற்றும் எதையும் பெறாதவனானான்.

எதைத் தேர்ந்தெடுக்கிறோமோ அப்படித்தான் வாழ்க்கை அமையும்.

SCROLL FOR NEXT