கிராமத்தின் பெயரோ ஆறுமுக மண்டலம். ஆட்சி செலுத்தும் ஆண்டவனோ ஆயிரத்தெண் விநாயகர். எத்தனையோ பெயர்களில் பிள்ளையார் கோயில்கள் பார்த்திருக்கிறோம். அதென்ன ஆயிரத்தெண் விநாயகர்?
தூத்துக்குடி அருகே ஏரலுக்குப் பக்கத்தில் உள்ள கிராமம்தான் ஆறுமுக மண்டலம். சாலை வழியே பயணிக்கும்போது இருபுறமும் பச்சைப் பசேல் எனற வயல் வெளிகளின் காட்சி குளிர்ச்சி தருகிறது. வழியில் மயில்கள் தோகை விரித்து ஆடுகின்றன. ஒரு மயில் மாபெரும் ஆலமரத்தின் உச்சியில் அமர்ந்து குரல் கொடுத்துக்கொண்டிருக்கிறது.
ஏரல் பேருந்து நிலையத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ஆறுமுக மண்டலம். கோயிலின் பிரதான வாயில் மூடியிருக்கிறது. கோயிலை ஒட்டிய குறுகிய தெருவில் ஒரு வீட்டிலிருந்து அரச்சகரை அழைத்து வந்தார் காவலாளி. காலை 11 மணிக்கே நடை சாத்திவிடும் பழக்கம் அங்கே உள்ளது.
கோயில் கூறும் கதை
கோயிலைச் சுற்றி நடக்கும்போது அர்ச்சகர் கோயிலின் கதையைச் சொல்லத் தொடங்கினார். சுமார் 2000 வருஷத்திற்கு முன்னர் சோமார வல்லபன் (கொற்கைb பாண்டியன் என்றும் கூறுகின்றனர்) என்று ஒரு ராஜா இங்கு ஆண்டுகொண்டிருந்தான். 1008 புரோகிதர்களை நர்மதா நதிக்கரையிலிருந்து வரவழைத்து, ஒரு பெரிய யாகம் நடத்த ஏற்பாடு செய்தான் . 1007 புரோகிதர்கள் வந்துவிட்டார்கள். இன்னும் ஒரு புரோகிதர் வராததால் யாகத்தைத் துவங்க முடியாமல் வருந்தி நின்றான் மன்னன். எடுத்த காரியத்தை விக்னமின்றி முடிக்க உதவும் விக்னேஸ்வரனை மனம் உருக வேண்டினான். அரசனின் ஆசை நிறைவேற, அந்த ஆதிமூலப் பெருமானே 1008-வது புரோகிதராக வந்து, யாகத்தையும் அன்னதானத்தையும் இனிதே நிறைவேற்றிக் கொடுத்தான்.
வேள்வியைச் செவ்வனே முடித்துக்கொடுத்த அந்தப் புரோகிதருக்கு ஆறுமுக மண்டல கிராமத்தை அன்பளிப்பாகக் கொடுத்தான் அரசன். தனக்கு வெகுமதியாகக் கிடைத்த கிராமத்திலேயே கோயில் கொள்ள முடிவெடுத்தான் ஏக தந்தன். உடன் வந்த 1007 அந்தணர்களும் அங்கேயே தங்கி விநாயகனுக்குக் கைங்கரியம் செய்யத் தீர்மானித்தனர். அங்கே கோயில் கொண்ட கணேசனுக்கு ‘ஆயிரத்தெண் விநாயகர்’ என்ற திருநாமம் சூட்டி வழிவழியாக வழிபட்டுவருகின்றனர் என்று அர்ச்சகர் சொல்லி முடித்தார்.
அன்னையின் திருநாமம் நித்திய கல்யாணி
பிரதான சன்னிதியில் மூலவர் ஆயிரத்தெண் விநாயகர் ஆட்சி செலுத்துகிறார். அருகில் ஸ்ரீ காளஹஸ்வரனது சன்னிதி உள்ளது. பக்கவாட்டில் ஸ்ரீ நடராஜப் பெருமான் சன்னிதி. அடுத்த சன்னிதி அம்பாளுடையது. அன்னையின் திருநாமம் நித்திய கல்யாணி. பெயருக்கேற்ப அழகும் இளமையும் கூடிய தோற்றம். மூலவருக்கு வலப்புறம் பஞ்சமுக விநாயகர் காட்சியளிக்கிறார். கம்பீரமான ஐந்து திருமுக மண்டலங்களும், பத்துக் கரங்களில் பல்வேறு முத்திரைகளும், ஆயுதங்களும் கொண்டு எழுந்தருளியுள்ள இந்த நர்த்தன விநாயகர் சுமார் மூன்றடி உயரமானவர். இது 1945-ல் நடந்த கும்பாபிஷேகத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. வெளி மண்டபத்தில் வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணிய சுவாமியும் உள்ளார்.
திருவிழாக்கள்
நான்கு கால நித்ய ஆராதனைகளுடன் விநாயக சதுர்த்தி, சிவராத்திரி, நவராத்திரி, சித்திரை பிரம்மோத்சவம் போன்றவை இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து பக்தர்கள் திரளாக வந்து,விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றுச் செல்கின்றனர். பத்து நாள் பிரம்மோத்சவத்தின் நிறைவு நாள் அன்று திருத்தேரில் பவனி வரும் ஆயிரத்தெண் விநாயகரைக் காண, ஆயிரம் கண் போதாதென்று, பக்தர்கள் பரவசத்துடன் சொல்கிறார்கள்.
ஆதிசங்கரர் பாதம் பட்ட தலம்
ஜகத்குரு ஆதி சங்கரர், திருச்செந்தூர் சென்று சுப்பிரமணிய புஜங்கம் பாடுவதற்கு முன் ஆறுமுக மண்டலம் வந்து, ஆயிரத்தெண் விநாயகரின் முன்பு கணேச பஞ்சரத்னத்தை அர்ப்பணித்தார் என்கிறது செவிவழிச் செய்தி ஒன்று.