ஆன்மிகம்

மலை மீது தவழும் நல்லிணக்கம்

எம்.நாகராஜன்

உடுமலையில் இப்படி ஓர் இடம் இருக்கிறதா என்பது உடுமலை வாசிகளில் பலருக்கும் தெரியாத இடமாக உள்ளது துருவமலை. திருப்பூர் மாவட்டம் உடுமலையிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரம் தொலைவில் அமராவதி நகர் உள்ளது. அங்கிருந்து அமராவதி அணையின் பிரதான கால்வாய் வழியாகச் சென்றால் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் துருவமலையின் அடிவாரத்தைத் தொட்டுவிடலாம்.

அங்கிருந்து கரடுமுரடான வழித்தடத்தில் சிறிது தூரம் செல்ல வேண்டும். பின்னர் சுமார் ஆயிரம் மீட்டர் உயரத்தில் செங்குத்தான வடிவில் தோற்றமளிப்பதுதான் துருவமலை. இதனை துருவத்துப் பர்வதம் என்றும் அழைக்கின்றனர். பர்வதம் என்றால் மலை என்று அர்த்தம்.

ஆஞ்சநேயரின் உருவம் கருட வாகனம்

செங்குத்தான மலையில் மேலே ஏறும்போது, காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். மலையுச்சியில் சிதிலமடைந்த நிலையில் பெருமாள் கோயில் உள்ளது. அங்கு சிலை இல்லை. பெருமாளின் நாமம் பதித்த கல்லை மக்கள் வழிபட்டுவருகின்றனர். ஆஞ்சநேயரின் உருவம் பொறிக்கப்பட்ட கல்தூணும், கருட வாகனமும் உள்ளது. கோயிலின் கூரைகள் இருந்ததற்கான அடையாளமே இல்லை. நான்கு திசைகளிலும் உள்ள கல்தூண்கள் அவற்றை நினைவுப்படுத்துகின்றன. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாக இருக்கக்கூடும்.

கோயிலின் இடதுபுறமாக திப்பு சுல்தான் தர்கா உள்ளது. அதில் உள்ள ஒரு சமாதியை இஸ்லாமிய மக்கள் வழிபட்டு வருகின்றனர். பெருமாளை வணங்க வரும் இந்துக்களும், திப்பு சுல்தான் தர்ஹாவில் தொழுகைக்கு வரும் இஸ்லாமியர்களும் பெருமாளை வணங்கும் வழக்கம் இன்றளவும் இருந்து வருவது அனைவரும் வியக்கும் வண்ணம் இருப்பதோடு நம் முன்னோர்களின் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாகவும் உள்ளது.

மலையில் உள்ள ஒரு சுனையிலிருந்து வற்றாத நீர் பச்சை நிறத்தில் உள்ளது. கோயிலின் மேற்குத் திசையில் அகன்று விரிந்த தெப்பக்குளம் உள்ளது. அதன் கைப்பிடிச் சுவர்கள் பழங்காலச் செங்கற்களால் வடிவமைக்கப்பட்டிருப்பது பண்டைய தமிழர்களின் கட்டிடக் கலையைப் பறைசாற்றும் விதமாக உள்ளது.

இரவு நேரத்தில் மாட விளக்குகள்

வட்ட வடிவமாக நீளும் கைப்பிடிச் சுவர்களில் மாட விளக்குகள் வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்தக் காலத்தில் இரவு நேரத்தில் எரியும் மாட விளக்குகளின் நடுவே ஜொலிக்கும் நீர்க்காட்சிகள் பழந்தமிழரின் ரசனையைக் கண் முன் கொண்டுவருவதாக உள்ளன. பெருமாள் கோயிலின் எதிரே கீழ் நோக்கி இறங்கும் வழியில் ஒரு குகை உள்ளது. அதில் சித்தர்கள் வாழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

துருவமலையில் உச்சியில் நின்று பார்த்தால், மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட அமராவதி அணையின் ரம்மியமான தோற்றமும், அணையின் முன்பகுதி தென்னை மரங்களால் நிரம்பி இருப்பதும் கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

அங்கிருந்து வளைந்து நெளிந்து செல்லும் அமராவதி ஆறும், அதனை ஒட்டிச் செல்லும் பிரதான கால்வாயும் அதன் அழகை மேலும் மெருகூட்டும். ஆறு மற்றும் கால்வாயின் இரு கரைகளை ஒட்டிய நிலப்பரப்பு மட்டும் பசுஞ்சோலையாகவும் அதனைத் தாண்டிய நிலப்பரப்புகள் நீரின்றிப் பாலைவனம் போலவும் காணப்படுகின்றன.

மதங்களை கடந்த மனித நேயம் இருந்ததற்கான அடையாளங்களாகக் கண் முன் காட்சி தரும் துருவ மலை போன்ற இடங்களைப் பார்ப்பது மட்டுமல்ல, பாதுகாப்பதும்கூட நம் எதிர்காலச் சந்ததிக்கு நாம் விட்டுச் செல்லும் அரிய பொக்கிஷமாகும்.

SCROLL FOR NEXT