திருப்பதி: ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி முருகன் கோயிலுக்கு நேற்று திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பட்டு வஸ்திரங்கள் காணிக்கையாக வழங்கப்பட்டன.
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ஆண்டு தோறும் ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஏழுமலையான் கோயிலில் இருந்து பட்டு வஸ்திரங்கள் திருத்தணி முருகன் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்படுகிறது. இந்த ஆண்டும், நேற்று திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி. சுப்பாரெட்டி தம்பதியினர் சுவாமிக்கு பட்டு வஸ்திரங்களை காணிக்கையாக வழங்கினர்.
அவர்களை திருத்தணி சுப்ரமணியர் கோயில் சார்பில் துணை ஆணையர் விஜயா வரவேற்று பிரசாதங்களை வழங்கினார். அப்போது, உற்சவர்களான வள்ளி, தெய்வயானை சமேத சுப்ரமணியருக்கு, திருப்பதியிலிருந்து வந்த பட்டு வஸ்திரத்தை அணிவித்து அலங்கரித்தனர்.