| அத்தி வரதர் வைபவம் 2019 மீள் பார்வை பதிவுகள் |
அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தில் 22-ம் நாளில் அத்தி வரதர் இளம் மஞ்சள் நிறப் பட்டாடையில் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார்.
கட்டுக் கடங்காத வகையில் பக்தர்கள் கூடியதால் அவர்கள் சுவாமி தரிசனம் செய்ய சுமார் 8 மணி நேரம் காத்திருந்தனர். இதனால் அத்தி வரதரை தரிசனம் செய்துவிட்டு வரும் பக்தர்கள் மிகவும் சோர்வுடன் காணப்பட்டனர். வரும் வழியில் சில பக்தர்களுக்கு குளிர்பானங்கள் மற்றும் நீர் மோர் ஆகியவை வழங்கப்பட்டன.
அம்பத்தூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் கூறும்போது, ‘‘நான் காலை 7 மணி அளவில் அத்தி வரதரை தரிசிக்க வரிசையில் நின்றேன். மாலை 5 மணி அளவில்தான் தரிசித்து வெளியில் வந்தேன். பலருக்கு 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் ஆகிறது. வரிசையில் வரும் பக்தர்களுக்கு குடிநீர் மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரு இடத்தில் சிலருக்கு நீர் மோர் வழங்கினர். கூட்டம் அதிகம் இருப்பதாலும், நீண்ட நேரம் வரிசையில் நிற்க வேண்டி இருப்பதால் பழச்சாறு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். முதியோர் வரிசையிலும் அதிக கூட்டம் இருந்தது.
16 கண்காணிப்பு குழுக்கள் அமைப்பு
அத்தி வரதர் வைபவத்துக்கான ஏற்பாடுகளைக் கண்காணிக்கவும் பக்தர்களின் வசதிக்காகவும் 9 துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "இந்த வைபவத்தை சிறப்பாக நடத்துவது குறித்து தமிழக அரசின் தலைமைச் செயலர் சண்முகம், டிபிஜி திரிபாதி ஆகியோர் ஆய்வு செய்து பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளனர். அதன்படி இந்த வைபவத்துக்கான ஏற்பாடுகளை கண்காணிக்க ஊரக வளர்ச்சித் துறை இயக்குநர் பாஸ்கரன், தோட்டக்கலைத் துறை இயக்குநர் சுப்பையா அவர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் ஆய்வு செய்து பல அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
அத்தி வரதரை பக்தர்கள் தரிசிக்க வரும் இடங்களை சுகாதாரமாக பராமரிப்பது, குடிநீர் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வது ஆகியவற்றுக்காக 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் பக்தர்கள் தரிசிக்க வரும் பகுதிகளை 16 ஆக பிரித்துக் கொண்டு பணிகளை கவனிப்பர். இந்தக் குழுவில் சுகாதாரத் துறையினர், காவல்துறையினர், தீயணைப்புத் துறையினர் வருவாய்த் துறையினர் என தேவைக்கு தகுந்தாற்போல் அனைவரும் இருப்பர்.
பக்தர்கள் வசதிக்காகக் கூடுதல் கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் வசதிகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. தெற்கு மாட வீதியில் முழுவதுமாக நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது. வடக்கு மாட வீதியில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு நிழற்குடைகள் அமைத்துள்ளோம்" என்றார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்: "வரிசையில் வரும் பக்தர்களுக்கு கிழக்கு ராஜகோபுரம் பகுதியில் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் நிற்கும் வகையில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட நேரம் வரிசையில் வருபவர்கள் அமர்ந்து ஓய்வு எடுக்க மணல் கொட்டப்பட்டுள்ளது. தேவைக்கு தகுந்தாற்போல் கொஞ்சம் நாற்காலிகளும் போடப்பட்டுள்ளன. நீண்ட நேரம் நடந்து வருபவர்கள் அங்கு ஓய்வு எடுத்துவிட்டு பின்னர் வரிசையில் செல்லலாம்.
வடக்கு மாட வீதி, ஆழ்வார் பிரகாரம் உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்களுக்கு நீர் மோர், தேநீர், பிஸ்கெட் ஆகியவை கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பக்தர்களை கண்காணிக்கும் 16 குழுக்களிலும் அதிகபட்சமாக 9 துறைகளைச் சேர்ந்தவர்கள் பணியில் இருப்பர். சில குழுக்களில் 5 துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் சில குழுக்களில் அதற்கும் குறைவான துறைகளைச் சேர்ந்தவர்களே பணிகளில் இருப்பர்.
அத்தி வரதர் இருக்கும் இடத்தை மாற்றுவது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பரிசீலனை செய்து வருகிறார். ஆகம விதிகளை எல்லாம் பார்க்க வேண்டியுள்ளது. அவர்கள் முடிவு எடுத்த பிறகே இதுகுறித்து தெரிவிக்கப்படும். அதுபோல் முன் கூட்டியே தரிசனத்தைத் தொடங்க வேண்டும் என்பது குறித்தும் அறநிலையத் துறையின் பரிசீலனையில் உள்ளது. மூலவருக்கு செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முடித்த பிறகே இங்கு பூஜைகள் செய்ய வேண்டியுள்ளது. இது குறித்தும் அறநிலையத் துறை முடிவு எடுத்த பிறகு உங்களுக்கு தெரிவிக்கப்படும்.
அத்தி வரதர் நின்றகோலத்தில் எப்போது வைக்கப்படுவார் என்பது குறித்து விரைவில் தகவல் தெரிவிக்கப்படும். முதலமைச்சர், பிரதமர் போன்ற முக்கிய பிரமுகர்கள் வருகை குறித்து தகவல் ஏதும் இல்லை. மருத்துவக் குழுக்கள் 5-ல் இருந்து 8-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் நர்ஸிங் படிக்கும் மாணவர்கள் முதலுதவி செய்வதற்காக ஈடுபடுத்தப்படுவர். போலி பாஸ்கள் வைத்திருந்தது தொடர்பாக 7 பேர் சிக்கினர். அதில் 5 பேர் அந்த பாஸை வாங்கி வந்தவர்கள் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. கலர் ஜெராக்ஸ் எடுத்து தயாரித்த 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பட்டுச் சேலை கடைகளில் சேலை எடுப்பவர்களுக்கு சிறப்பு அனுமதிச் சீட்டு வழங்குவது குறித்து கேட்டதற்கு சிலர் இந்த விழாவுக்கு நன்கொடை அளித்துள்ளனர். நன்கொடை அளித்தவர்களுக்கு இந்த அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. அதை அவர்கள் தங்கள் நண்பர்களுக்கு வழங்கி இருக்கலாம். இந்த அனுமதிச் சீட்டை பயன்படுத்தி சேலையைக் கூடுதல் விலைக்கு விற்றால் அது குறித்து விசாரிக்கப்படும்" என்றார்.