திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் 17-ம் தேதி ஆனிவார ஆஸ்தானம் நடைபெற உள்ளது. அன்றைய தினம் சுவாமி முன்னிலையில் தேவஸ்தான கணக்கு வழக்குகளை ஒப்படைப்பது ஐதீகம். இதை முன்னிட்டு, கோயிலின் கற்ப கிரகம், உப சன்னதிகள், பலிபீடம், கொடிக்கம்பம், விமான கோபுரம் உட்பட கோயில் முழுவதும் சந்தனம், பன்னீர், பச்சை கற்பூரம், மஞ்சள், குங்குமம், போன்றவை கலந்த வாசனை திரவியங்களால் நேற்று சுத்தம் செய்யப்பட்டது.
கோயில் ஆழ்வார் திருமஞ்சனத்தில் பங்கேற்ற தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி கூறும்போது, “உகாதி பண்டிகை, பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆனிவார ஆஸ்தானம் ஆகிய விசேஷ தினங்களுக்கு முன் வரும் செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடத்துவது ஐதீகம். தற்போது ஆனிவார ஆஸ்தானத்திற்காக கோயில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சிகள் ஆகம நியதிகளின்படி நடத்தப்பட்டது” என்றார்.