மஞ்சள்(வெளிர்) நிற பட்டாடையில் அத்தி வரதர் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார். 
ஆன்மிகம்

அத்தி வரதரை தரிசிக்க நேரம் நீட்டிப்பு: இரவு 10 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி

செய்திப்பிரிவு

| அத்தி வரதர் வைபவம் 2019 மீள் பார்வை பதிவுகள் |

அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தில் ஒன்பதாம் நாளில் மஞ்சள்(வெளிர்) நிற பட்டாடையில் அத்தி வரதர் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார்.

நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தரிசனம் என்று இருந்தது. பின்னர் அது காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை என்று மாற்றப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் தற்போது காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை என்று மாற்றப்பட்டுள்ளது.

முதியோர், மாற்றுத் திறனாளிகள், கர்ப்பிணிகள் ஆகியோர் இந்த கூட்டத்துக்குள் சென்று கிழக்கு கோபுர வாசலை அடையமுடியவில்லை. அங்கிருந்துதான் வீல் சேர், மற்றும் பேட்டரி கார் வசதிகள் உள்ளன. இவர்களின் வசதிக்காக கிழக்கு மாட வீதி மற்றும் வடக்கு மாட வீதி சந்திப்பிலும், சேதுராயர் தெரு நுழைவு வாயிலிலும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு வந்தால் அவர்கள் வீல் சேர் மூலம் அழைத்துச் செல்லப்படுவர்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் மிதியடிகளை தற்காலிக பேருந்து நிலையத்தில் அதற்கென உள்ள இடத்தில் விட்டுவிட்டு வர வேண்டும். கார்களில் வருபவர்கள் கார்கள் நிறுத்தும் இடத்தில் கார்களிலேயே விட்டுவிட்டு வரலாம் என்று மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்தார்.
சௌமியா அன்புமணி தரிசனம்

பசுமை தாயகத்தின் தலைவர் சௌமியா அன்புமணி, பாமக நிறுவனர் ராமதாஸின் மனைவி சரஸ்வதி மற்றும் குடும்பத்தினர் அத்தி வரதரை தரிசனம் செய்தனர். இது குறித்து சௌமியா அன்புமணி கூறும்போது, “அத்தி வரதர் சிலை இவ்வளவு ஆண்டுகள் தண்ணீருக்குள் வைக்கப்பட்டிருந்தும், இதுவரை ஒன்றும் ஆகாதது வியப்பை தருகிறது. அத்தி வரதரை தரிசித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT