அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தின் ஏழாம் நாளில் மஞ்சள் நிறப் பட்டாடையில் அத்தி வரதர் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார். அத்தி வரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்காக, அறநிலையத் துறையுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் பல்வேறு வசதிகளை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த 7 நாட்களில் மட்டும் 7.80 லட்சம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் பாஜகவின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், நடிகர் ராகவா லாரன்ஸ் ஆகியோர் விஐபி வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர்.
பாதுகாப்பு பணியில் கூடுதல் போலீஸார்
அத்தி வரதர் விழாவுக்கான பாதுகாப்பு பணியில் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 2,600 போலீஸார் ஈடுபட்டுள்ளனர். சுவாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், போலீஸாரின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
குடிநீர் வசதி
பக்தர்களின் வசதிக்காக நகராட்சி நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், லாரிகள் மூலம் குடிநீர் நிரப்பி பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் பொன்னையா கூறியதாவது: அத்தி வரதர் விழாவுக்கு விடுமுறை நாளில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில், எதிர்பார்த்ததைவிட அதிகமான அளவில் பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்துள்ளனர். தொடர்ந்து பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கான அத்தனை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. பக்தர்கள் வெயிலில் நிற்பதை தடுக்கும் வகையில், கோயில் உள்ளே வரிசையை எவ்வாறு அமைக்கலாம் என ஆலோசித்து அத்திட்டத்தை அடுத்து வரும் நாட்களில் செயல்படுத்த உள்ளோம் என்றார்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் வடக்கு மண்டல டிஐஜி.தேன்மொழி கூறியதாவது: அத்தி வரதர் விழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் களைப்படையாமல் இருப்பதற்காக, சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்த உள்ளோம். மேலும், சனி மற்றும் ஞாயிறு நாட்களில் கூடுதல் பக்தர்கள் வருவதால், விழுப்புரம், வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து கூடுதலாக 500 முதல் ஆயிரம் போலீஸாரை பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. நகரப்பகுதியில அசம்பாவிதங்களை தடுப்பதற்காக 24 தனிப்படை அமைத்துள்ளோம்.
அத்தி வரதர் விழாவுக்காக நகரப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. திங்கள்கிழமையில் இருந்து பள்ளி வாகனங்கள் மட்டும், நகரப்பகுதிக்கு அனுமதிக்கப்படும். தொழிற்சாலை பேருந்துகளுக்கு அனுமதியில்லை. நகருக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிலையங்களின் அருகே தொழிற்சாலை பேருந்துகளை நிறுத்தி இயக்க வேண்டும் என தெரிவித்துள்ளோம் என்றார்.
அத்தி வரதரை தரிசிப்பதற்காக வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்த பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “தமிழகத்தில் ஆன்மீகம் தழைத்தோங்குகிறது என்பதற்கு அத்தி வரதர் வைபவமே சான்றாக விளங்குகிறது. அத்தி வரதரை தரிசிக்க குவியும் பக்தர்கள், பொறுமையுடன் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்” என்றார்.