நீல வண்ண பட்டாடையில் அத்தி வரதர் 
ஆன்மிகம்

நீல வண்ண பட்டாடையில் அத்தி வரதர்

செய்திப்பிரிவு

அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தின் ஆறாம் நாளில் நீல வண்ண பட்டு ஆடையில் அத்தி வரதர் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார்.

எதிர்பார்த்ததை விட பக்தர்களும், பக்தர்களும் அதிகம் குவிவதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறி வருகின்றனர். பலர் முக்கிய பிரமுகர்கள் நுழைவு வாயில் முன்பு திரண்டு உள்ளே நுழைய முயன்றனர்.

காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலையில் கடும் நெரிசல்

கோயிலின் கிழக்கு கோபுரத்தை தாண்டி காஞ்சிபுரம்-செங்கல்பட்டு சாலையிலும் கோயில் சுற்றுச் சுவரையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று அத்தி வரதரை தரிசித்து வருகின்றனர். மேலும் ஆட்டோக்களிலும், ஷேர் ஆட்டோக்களிலும் பலர் கோயிலுக்கு வந்தபடி இருப்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஒரு புறம் சாலையில் வரிசையில் நிற்கும் பக்தர்கள், மற்றும் அதிக அளவு வாகனங்கள் கோயில் இருக்கும் பகுதியில் வருவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து விஷ்ணு காஞ்சி காவல் நிலையம் அருகே பல கார்கள், ஆட்டோக்கள் திருப்பிவிடப்பட்டன.

அதிக அளவு பக்தர்கள் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் குவிவதால் அந்தப் பகுதியில் சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். கோயிலைச் சுற்றியும், கோயிலுக்குச் செல்லும் வழிகளிலும் பிளீச்சிங் பவுடர் போட வேண்டும். உணவகங்களில் சுகாதாரமான உணவுகள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும்.

அதேபோல் அன்னதானம், நீர் மோர் தானம் செய்யும் இடங்களில் அவை தரமான உணவுதானா என்பதையும் கண்காணிக்க வேண்டும். பக்தர்களுக்கு சுகாதார சீர்கேடுகள் ஏற்படாமல் இருக்க சோதனை நடத்த வேண்டும் என்ற சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.

SCROLL FOR NEXT