அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தின் ஐந்தாம் நாளில் காவிப் பட்டாடை அணிந்தவாறு அத்தி வரதர் பக்தர்களுக்கு சயன கோலத்தில் அருள்பாலித்தார்.
அத்தி வரதர் விழாவில் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் குவிவதால் கூட்டம் அதிகரித்துள்ளது. கோயிலின் கிழக்கு கோபுரத்தை தாண்டி வெளிப்பிரகாரத்தைச் சுற்றி நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்து நின்று அத்தி வரதரை தரிசித்து வருகின்றனர். கடந்த 4 நாட்களில் 3 லட்சம் பக்தர்கள் அத்தி வரதரை தரிசித்துள்ளனர். அத்தி வரதர் எழுந்தருளும் வைபவத்தின் ஐந்தாம் நாளில் பக்தர்கள் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் வரிசையில் நின்று அத்தி வரதரை தரசித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி நேரில் சென்று பாதுகாப்பு பணிகளை மேற்காண்டார். அவர் அத்தி வரதர் அருகே கூட்டம் நீண்ட நேரம் தேங்காதவாறு பார்த்துக் கொண்டார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் பட்டாபிராமன் மூன்றாவது. முறையாக அத்தி வரதரை தரிசனம் செய்தார்.
முதலில் 7 வயதிலும், அடுத்து 47 வயதிலும் தரிசனம் செய்திருந்தார். தற்போது 3-வது முறையாகவும் தரிசனம் செய்தார். அத்தி வரதரை மூன்றாவது முறையாக தரிசனம் செய்தது மிகவும் நெகிழ்ச்சியாக உள்ளது என்றார். மீண்டும் இரவு 8 மணி வரை தரிசிக்க அனுமதி தரிசன நேரம் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா வெளியிட்ட அறிக்கை: இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதி பெற்று அத்தி வரதருக்கான தரிசன நேரம் காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆனி கருட சேவை நடைபெறும் ஜூலை 11-ம் தேதியும், ஆடி கருட சேவை நடைபெறும் ஆகஸ்ட் 15-ம் தேதி ஆகிய இரு நாட்கள் மட்டும் காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை தரிசனம் நடைபெறும் என்றார்.