குன்றக்குடிக்கு மிக அருகிலுள்ளது பலவான்குடி. இங்கே கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ செங்கமலநாயகி அம்மனுக்கு ஒரு கதை உண்டு. 1300 வருடங்களுக்கு முன்பே, ஊரைக் காக்கும் காவல் தெய்வமாக விளங்கினாள் செங்கமலநாயகி அம்மன். அப்போது பலவான்குடியைத் தனது ஆளுமையில் வைத்திருந்த ஆற்காட்டைச் சேர்ந்த முத்துசாமி என்பவர், அக்கிராமத்தை ஸ்ரீ செங்கனி நாட்டார்களிடம் ஏதோ ஒரு காரணத்துக்காக, இந்தக் காலத்துப் பணம் முந்நூறு ரூபாய்க்கு மொத்தமாக எழுதிக் கொடுத்துவிட்டு தனது உறவுகளோடு ஆற்காடு நோக்கிப் புறப்பட்டார்.
ஊரை எழுதிக் கொடுத்துவிட்டுப் போன முத்துசாமியும் அவரைச் சார்ந்தவர்களும் ஊர் எல்லையில் உள்ள தேனாற்றைக் கடக்க முயன்றபோது, முத்துசாமியின் கண்ணெதிரே காட்சி கொடுத்த செங்கமலநாயகி, ‘ஊரை மட்டும் தான் விற்றாயா. இல்லை, என்னையும் சேர்த்து விற்றுவிட்டாயா?’ என்று கேட்டாள்.
கேள்வி கேட்டு மறைந்த செங்கமலநாயகி
‘கண்மாயிலிருக்கும் மீனை விற்கும் போது கருவிலிருக்கும் முட்டையும் சேர்ந்துதானே விலை போகும்’ என்று சொன்னார் முத்துசாமி. இப்படிக் கேட்ட மாத்திரத்தில் அம்மனும் மறைந்தாள்; பதில் சொன்ன முத்துசாமியும் அங்கு இல்லை. அவருக்கு என்ன நடந்தது என்று தெரியாமலேயே அவரோடு வந்தவர்கள் ஆற்காடு போய்ச் சேர்ந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு ஆற்காடு மக்கள் யாரும் செங்கமலநாயகி அம்மன் கோயிலுக்கு வருவதும் இல்லை; அம்மனை வழிபடுவதும் இல்லை. இந்த வழக்கம் இன்று வரை தொடர்கிறது. அதேசமயம், செங்கமல நாயகி அம்மன், செங்கனிநாட்டு மக்களைச் செல்வச் செழிப்புடன் வாழ வைத்தாள். இதனால், செங்கனி நாட்டு மக்கள் அம்மனைப் போற்றிக் கொண்டாடி வருகின்றனர்.
பலவான்குடியைச் சேர்ந்தவர்களுக்கு காவல் தெய்வமாக விளங்குகிறாள் செங்கமலநாயகி அம்மன். நம்பிக்கை வைத்துப் பிரார்த்தனை செய்தால், பிரார்த்திப்பவரின் கனவில் அம்மன் காட்சி கொடுத்து மனக்குறைகளை போக்குவாள் என்ற நம்பிக்கை பலவான்குடி மக்களிடம் இன்றைக்கும் இருக்கிறது. அம்மனை வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும், திருமணத் தடைகள் நீங்கும் என்ற நம்பிக்கையும் இந்த மக்களிடம் ஆழப் பதிந்து கிடக்கிறது.
சித்திரை மாதம் இரண்டாவது திங்களில் தொடங்கி பதினோரு நாட்கள் நடக்கும் தேர் திருவிழா அம்மனுக்கு நடக்கும் முக்கிய வைபவம். இந்தத் திருவிழாவுக்கு நாள் குறித்து விட்டால் வெளியூர்களில் இருக்கும் பலவான்குடி மக்கள் அனைவரும் ஊருக்கு வந்து விடுவார்கள். பதினோரு நாள் திருவிழா முடிந்து காப்புக் களைந்தால் தான் மறுபடியும் அவர்கள், பிழைக்கும் ஊர்களுக்குப் புறப்படுவார்கள்.