மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் ஆண்டுதோறும் ஆதீன குருமுதல்வர் குருஞானசம்பந்தரின் குருபூஜை வைகாசி மாதத்தில் கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு இப்பெருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஆதீன குருமுதல்வர் குருஞானசம்பந்தரின் குருவான கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி, நேற்று அதிகாலை ஆதீனத்தில் உள்ள சொக்கநாதர் சந்நிதியில் ஆதீனகர்த்தர் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் சிறப்பு பூஜைகள் மேற்கொண்டார். பின்னர் திருமடத்தில் இருந்து கட்டளைத் தம்பிரான்கள் புடைசூழ நாற்காலி பல்லக்கில் ஆதீனகர்த்தரை, மேலகுருமூர்த்தமான ஆனந்தபரவசர் பூங்காவில் அமைந்துள்ள முந்தைய ஆதீனகர்த்தர்களின் குருமூர்த்தங்களுக்கு சுமந்து சென்றனர். அங்கு சிறப்புவழிபாடு நடைபெற்றது. இதில், மதுரை ஆதீனம், தொண்டை மண்டல ஆதீனம் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று இரவு பட்டினப்பிரவேசம் நடைபெற உள்ளது. இதையொட்டி சுமார் 600 போலீஸார் பணியில் ஈடுபடுகின்றனர்.