ஆன்மிகம்

காவல் செய்யும் கள்ளி!

அருணன்

க்ஷேத்திரபாலர் என்பவர் பொற்கூடங்கள், பொக்கிஷங்கள் போன்ற மதிப்புமிக்க இடங்களைப் பாதுகாப்பவர். அதனால் அவரைப் பொன்மலர்கள் கொண்டு பூசிப்பது வழக்கம். திருவலஞ்சுழி க்ஷேத்திரபாலருக்கு மாமன்னன் ராஜராஜன், அவனுடைய தேவியார் ஓலோகமாதேவியார், முதலாம் ராஜேந்திர சோழன் போன்றவர்கள் பொற்பூக்கள் அளித்ததைக் கல்வெட்டுக்கள் எடுத்துரைக்கின்றன.

கள்ளியும் நெருஞ்சியும் காவல் தரும் தாவரங்கள். கள்ளியை வேலி காப்பாக நடுவார்கள். நிலத்தைச் சுற்றி மண் திட்டை அமைத்து, அதில் கள்ளிச் செடிகளை வைத்துவிட்டால் அவை அடர்த்தியாக வளர்ந்து பாதுகாப்பான வேலியாக மாறும். அதில் கூரிய முட்கள் நெருக்கமாக இருப்பதால் விலங்குகளோ மனிதர்களோ அதை எளிதில் கடந்துவிட முடியாது.

அதன் மலர்கள் பல வகையாக இருக்கின்றன. வாழ்வுக்கு வேலியாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும் க்ஷேத்திரபாலர் கள்ளிப் பூக்களை அணிகிறார். கள்ளிக் காட்டில் ஆனையின் உரியைப் போர்த்து ஆடுபவராக அவர் இருக்கிறார். பொனால் கள்ளிப் பூக்களைச் செய்து இவருக்கு அணிவிக்கும் வழக்கமும் இருக்கிறது.

கள்ளி பெரிய வடிவப் பூ. அதற்கு மாறாக சின்னஞ்சிறிய பூவாக இருப்பது நெருஞ்சி. இது பூமியில் படர்ந்து வளரும் தாவரம். பார்க்க பச்சைப் பட்டு விரித்தது போல் இருக்கும். காலை வைத்துவிட்டால் செடியின் கீழுள்ள முட்களைக் கொண்ட காய்கள் குத்தியெடுத்துப் பெரும் துன்பத்தை விளைவிக்கும். காய்ந்த காய்கள் குத்திக் கொண்டால் அதை அகற்ற முடியாது. இதற்குப் பயந்து யானைகள் விலகி ஓடுவதால் நெருஞ்சிக்கு ஆனை வணங்கி என்பதும் பெயராயிற்று.

SCROLL FOR NEXT