படைக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் நாளடைவில் தனது பொலிவை இழக்கும் என்பது இயற்கை விதி. மனிதனும் மனமும்கூட இவ்விதிக்கு அப்பாற்பட்டவையல்ல. ஈமான் என்ற நம்பிக்கை சார்ந்தவைகளும் அவ்வாறே. உள்ளமும் உள்ளத்தின் தன்மைகளும் நாளடைவில் பொலிவிழந்து துருப்பிடிக்கும். இறைநம்பிக்கையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களை சமன்படுத்தி உடலையும் உள்ளத்தையும் பண்படுத்தவே நோன்பு மனிதர்களுக்கு கடமையாக்கப்பட்டுள்ளது.
மனிதன் செயலாற்றுவதற்கு இறைவன் உதவி தேவை. இறை உதவி கிடைக்க மனிதனின் ஒத்துழைப்பும் உந்துதலும் தேவை. மனிதனுடைய ஒத்துழைப்பை பொறுத்தேஇறை உதவி அமையும். ‘‘அடியான்என்னிடம் ஒரு சாண் அளவு நெருங்கினால், நான் அவனிடம் ஒரு முழம் அளவு நெருங்குவேன். அவன் என்பால் நடந்து வந்தால், நான் அவனிடம் ஓடி வருவேன். என்னை அவன் நெருங்க, நெருங்க அவன் பார்க்கும் கண்ணாக, பிடிக்கும் கரமாக, நடக்கும் காலாக நானே மாறிவிடுவேன்’’ என இறைவன் கூறியதாக நபி(ஸல்) அவர்கள் நமக்கு ஒரு செய்தியைத் தருகிறார்.
ஆரம்பித்தலே மனித வேலை;முடித்து வைத்தல் இறைவன்செயல். ‘‘நீங்கள் என்னை அழையுங்கள்! நான் பதிலளிக்கிறேன்’’ (அல்குர்ஆன்). ‘‘நீங்கள் என்னை நினைவுகூருங்கள், நான் உங்களை (வானவர்கள் மத்தியில்) நினைவுகூருகிறேன்.’’ (அல்குர்ஆன்) - போன்றதிருவசனங்கள் இறை காதல், மனிதனை ஆட்கொள்ள தந்திரங்களை தேடுவதாக உணர்த்தி நிற்கிறது.
யார் இறை காதலில் திளைப்பாரோ அவருக்கு இறை கட்டளைகளை நிறைவேற்றுவதில் இன்பம் சுரக்கும். நபித் தோழர்கள் தம் வாழ்வை அதனடிப்படையில் அமைத்துக் கொண்டார்கள்.
‘‘இறைவனுக்கு அழகிய முறையில் கடன் கொடுப்பவர் யார்? அவருக்கு அவன் பலமடங்காக மறுமையில் திருப்பித் தருவான்’’என்ற திருமறை வசனம் இறங்கியது. வசனத்தை செவியுற்ற அபூதல்ஹா (ரலி) என்ற நபித் தோழர்,‘‘இறைவன் கடன் கேட்கிறானா?’’ என நபியிடம் கேட்டார். ‘‘ஆம்!’’ என்றார்கள் இறைத்தூதர் (ஸல்). ‘‘எங்கே உங்கள் கரத்தைத் தாருங்கள்’’ எனக் கேட்டு நபிகளாரின் கரம் பற்றிய அபூதல்ஹா (ரலி), ‘‘என் தோட்டத்தை கடனளித்து விட்டேன்’’ எனக் கூறினார்.
அந்தத் தோட்டத்தில் 600 பேரீத்த மரங்களும், நன்னீர்ச் சுனையும், அவரது வீடும் இருந்தது. பின்னர் தோட்டத்தின் வெளியில் நின்று உரத்த குரலில் தன் மனைவியை அழைத்தார். தன் பிள்ளைகளுடன் வெளிவரப் பணித்தார். அந்நேரம் குழந்தைகளின் கைகளிலும் வாயிலும் பேரீத்தங் கனிகள் காணப்பட்டன. அவரது மனைவி அக்கனிகளைஅகற்றி தன் பிள்ளைகளுடன் வெளியேறினார்.
இவற்றையெல்லாம் அவதானித்த அண்ணலார், ‘‘அபூதல்ஹா(ரலி)க்காக சுவனத்தின் அடர்த்திமிக்க பழக் குலைகள் காத்திருக்கின்றன’’ என நற்செய்தி சொன்னார்கள். இறைக்காதல் வயப்பட்டால் எத்துணை பெரிய செயலும் எளிதில் வயப்படும்.
அன்பனின் காதலை பறித்துச் செல்ல பலர் முனைவர். மனைவி, மக்கள் செல்வம், வேலை போன்றவை கண்களுக்குத் தெரிந்து வழிப்பறி செய்வோர். இவர்களின் இன்னல்களிலிருந்து தப்பித்து, ஒரு மாதமும் உன்னைச் சரணடைந்தேன் என கிடப்பதே நோன்புசெய்யும் மாண்புயர் செயல். ஆம்... அஃதோர் ராணுவப் பயிற்சி. பழுதுபட்ட இறைநம்பிக்கையை பழுது நீக்கும் பட்டறை. எனவேதான் முன்சென்ற ஆன்றோர்கள் நோன்பின் வருகையை எதிர்நோக்கி இருப்பார்கள். லௌகீக வேலைகளை ஒதுக்கிவிட்டு ஆன்மிகச் சிந்தனையில் திளைத்து விடுவார்கள்.
பயணங்கள், நோய், மாதவிலக்கு, பிரசவம் போன்ற தவிர்க்க இயலாத தேவைகளுக்காக அன்றிநோன்பை விடுவது பாவச் செயலாகிறது. நோன்பு வைத்தும்கூட, புறம் பேசியும், பொய் சொல்லியும், ஆகாதவற்றைச் செய்தும் நாளைக் கழிப்பது நம்மை நாமே ஏமாற்றும் செயலாகும். அதையே நபிகளார் ‘‘உங்கள் தாகமும் பசியும் இறைவனுக்குத் தேவையில்லை; இறையச்சமே நோன்பின் உச்சம்’’ என அருளினார்கள்.
தான தருமங்களை அதிகப்படுத்தியும், திருமறையை உணர்ந் தோதியும் நடுநிசிப் பொழுதில் நின்று வணங்கியும், தன் பாவங்களை நினைத்து வருந்தியும் காலங்களை கழிப்பதே இறை காதலின் சுவையை உணர வைக்கும்.
கட்டுரையாளர்:
மெளலானா முஹம்மது மன்சூர் காஷிபி,
தலைமை இமாம்,
மக்கா மஸ்ஜித், சென்னை.