குழந்தைப் பருவத்திலேயே “அவனருளால் அவன் தாள் பணியும் பேறு” பெற்றவர் சம்பந்தர். பந்தம் என்றால் உறவு. இவர் ஞானத்துடன் உறவு கொண்டார் அதனால் திருஞானசம்பந்தர் என்பார் வாரியார் சுவாமிகள். இறைவனை அடையப் பட்டினி கிடந்து உடலை வருத்திக் கலங்க வேண்டாம். மனதால் நல்ல பக்தியால் அழுதால் இறைவனைக் காணலாம் என்பதால் சம்பந்தர் அழுதார். ஞானப்பால் பெற்றார். இன்னும் ஒரு முறை அழுதார். சைவத் துறை விளங்கியது.
சீர்காழிக்கு இரண்டு பெயர்கள். இந்த உலகமெல்லாம் நீரில் மூழ்கியபோது, மிதந்த ஊர் சீர்காழி. அதனால் அவ்வூருக்கு தோணிபுரி என்றொரு பெயர். பிரம்மா பூஜித்ததால் திருபிரம்மபுரம். இந்த ஊரில் அந்தணர் குலத்தில் பிறந்தவர் சிவபாத இருதயர். சிவனுடைய பாதத்தை இதயத்திலே வைத்துக்கொண்டதால் இப்பெயர். இவ்வுலகம் தழைக்க வேண்டும் என்பதற்காகத் தவம் செய்தார். இவரது துணைவியார் பகவதி. இவர்களது ஞானப் புதல்வன் சைவ சமயம் தழைக்க செய்ய வேண்டும் என்று வேண்டித் தவமிருந்தார்.
அப்போது பாண்டிய மன்னர் சமண சமயத்தைச் சேர்ந்தவராக இருந்தார். சமண சமயம் நிர்வாகத்தின் துணையோடு செழித்து வளர்ந்த காலம் அது. சமயப் பிரச்சாரம் பிற சமய வெறுப்பாகவும் சில சமயம் எல்லை மீறிச் சென்றதுண்டு என்றும் சொல்லப்படுவதுண்டு.
இத்தருணத்தில்தான் சோழநாட்டில் சிவபாதர் சைவ சமயத்தைக் காக்க பிள்ளை வரம் வேண்டித் தவம் இருந்தார். இறைவன் திருவருளால் அவரது மனைவி பகவதி அம்மையார் திருக்கரு கொண்டார். சம்பந்தர் பிறந்தார். சீரும் சிறப்புமாய் வளர்ந்தார். மூன்றாண்டு நிறைவு பெறுகிறது. குழந்தை சம்பந்தருக்கு பிறந்த நாள் விழா கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
தந்தை சிவபாதர் திருக்கோவில் குளத்தில் நீராடக் கிளம்பினார். நானும் வருவேன் என்று குழந்தை சிவபாதர் காலைக் கட்டிக் கொண்டது. அக்குழந்தையைத் தோளில் தூக்கிக்கொண்டு கோவிலுக்குள் சென்ற அவர், சுவாமி சன்னதிக்கும், அம்பாள் சன்னதிக்கும் இடையில் உள்ள பிரம்ம தீர்த்தத்தில் நீராடச் சென்றார். நீரில் மூழ்கிக் குளிப்பதற்காக அவர் தலை நீரில் மறைந்தது. தந்தையாரைக் காணவில்லை என்றவுடன் குழந்தை அழத் தொடங்கியது. அதன் ‘கண் மலர்கள் நீர் ததும்ப; கை மலர்களால் பிசைந்து; வண்ண மலர் செங்கனி வாய் அதரம் துடிதுடிப்ப அழுது அருளினார்’ என்று சேக்கிழார் இக்காட்சியினை வருணிக்கிறார்.
இந்த அழுகுரலைக் கேட்டு அம்மையும் அப்பனுமாய் விடையின் (நந்தி) மீது காட்சி அளித்தனர். அம்மையிடம் குழந்தை அழுகிறதே பால் கொடு என்றார் பால் வெண்ணீற்றுச் சிவன். உமாதேவியாரோ சிவஞானப் பாலைத் தங்கக் கிண்ணத்தில் ஏந்திக் குழந்தைக்குக் கொடுத்தார். அதனை உண்டவுடன் அக்குழந்தைக்குப் புத்தகம் படிப்பதால் வரும் அபர ஞானமும், அனுபவத்தால் வரும் பரஞானமும் ஏற்பட்டது.
குழந்தை தெரியாமல் திருட்டுப் பாலைக் குடித்துவிட்டதோ என்று அஞ்சி தந்தை அதனிடம் கேட்க, அக்குழந்தையோ தன் பூம்பொற்கையை நீட்டி அம்மை அப்பனைக் காட்டியது. அமுத வாய் திறந்து ‘தோடுடைய செவியன்’ என்று குறிப்பிட்டுப் பாடியது. பெண்கள் அணிவதுதான் தோடு. இங்கே அன் விகுதி சேர்ந்து ஆணைக் குறிக்கிறது. அக்குழந்தைக்கு காட்சியானது சிவனின் அர்த்தநாரீஸ்வரர் கோலம். எனவே உமை இருந்த பகுதியான காதில் தோடு இருக்க அதனையே சுட்டிக் காட்டியது குழந்தை.
இக்குழந்தையே பின்னாளில் சைவ சமயத்தைக் காக்க அற்புதங்களைச் செய்தது. வைகையாற்றில் ஏடு எதிரேறியது, புத்தரை வென்றது. நெருப்பிலிட்ட ஏடு வேகாதிருந்தது, மறைக்காட்டில் மணிக்கதவம் அடைத்தது, திருவோத்தூரில் ஆண் பனையைப் பெண் பனையாக்கியது, மயிலையில் எலும்பைப் பெண்ணாக்கியது, மருகலில் அரவின் விடத்தை அகற்றியது என அப்பட்டியல் நீள்கிறது. அந்தச் சிவநெறியாளர்தான் திருஞான சம்பந்தர். ஞானப்பால் உண்ட குழந்தை உலகுக்கு இறைஞானத்தைப் பக்தி அமுதமாக வழங்கியிருக்கிறது.