ஆன்மிகம்

க்ஷேத்திர தரிசனம்: திருவலஞ்சுழி - கடல்நுரையால் செய்யப்பட்ட விநாயகர்

ராஜீ மணி

நெஞ்சைஅள்ளும் தஞ்சை மாவட்டத்தில், காவிரியின் தென் கரையில் அமைந்துள்ளது திருவலம்சுழி ஸ்வேத விநாயகர் ஆலயம் . கும்பகோணத்திலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவிலும், அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. சைவ சமயக் குரவர்களுள் ஒருவரான திருநாவுக்கரசரால் பாடப்பெற்ற பெருமை உடையது. காவிரி நதி, இங்கே சற்றே திரும்பி வலமாக வளைந்து பாய்வதால் இவ்வூர் திருவலம்சுழி என பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. இங்கு அருள்பாலிக்கும் ஸ்வேத விநாயகரது தும்பிக்கை வலப்புறமாக வளைந்திருப்பதும் இப்பெயர் வர ஒரு காரணம் என்றும் சொல்கின்றனர்.

இந்திரன் வழிபடும் தலம்

‘ஸ்வேத’ என்ற வடமொழிச் சொல்லுக்கு ‘வெள்ளை’ என்று பொருள். பாற்கடலைக் கடைந்தபோது, மிதந்து வந்த வெள்ளை நிற நுரையைக் கொண்டு இந்திரன் வடித்து வழிபட்ட உருவம்தான் இது எனக் கூறப்படுகிறது. ஒருமுறை தேவலோகத்துக்கு விஜயம் செய்த துர்வாச முனிவரை மதியாததால் தேவேந்திரன் சபிக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது. சாப விமோசனம் பெரும் பொருட்டு, கடல் நுரையால் செய்யப்பட்ட விநாயகர் உருவத்தை எடுத்துக்கொண்டு பூமியில் சுற்றித் திரிந்தார். அமைதியான இந்த காவிரிக்கரையைக் கண்டதும், பிள்ளையாரைக் கீழே வைத்து விட்டு நதியில் நீராடினார். ஆற்றிலிருந்து திரும்பி வந்து சிலையை எடுக்க தேவேந்திரன் முயன்றார். முடியவில்லை. இன்றும் ஒவ்வொரு விநாயக சதுர்த்தியன்றும் இந்திரன் இங்கு வந்து வழிபடுவதாக ஐதீகம்.

சின்னஞ்சிறு மூர்த்தி விநாயகர்

கடல்நுரையால் செய்யப்பட்டதால் எந்தவித அபிஷேகமும் இங்கு பிள்ளையாருக்குச் செய்யப்படுவதில்லை. பச்சைக் கற்பூரம் மட்டுமே திருமேனியில் சாத்தப்படுகிறது. விசேஷ தினங்களில் வெள்ளி, தங்கக் கவசங்கள் அணியப்படுவது உண்டு. சின்னஞ்சிறிய மூர்த்தியான ஸ்வேத விநாயகருக்கு அசாத்திய சக்தியும் கீர்த்தியும் இருப்பதற்கு சாட்சி எண்ணிலா பக்தர்களின் வருகைதான்.

திருமணம் வேண்டி இந்தத் தும்பிக்கையானிடம் பரிபூரண நம்பிகையுடன் வேண்டும் பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றி வைப்பதால் இளைஞர் கூட்டம் அலைமோதுகிறது. பரந்து விரிந்த பிரகாரங்களையுடைய இக்கோயில், உயர்ந்த கோபுரம், பெரிய குளம், நுழைவுக் கோபுரம், தேர் வடிவில் அமைந்த ஸ்வேத விநாயகர் சன்னதி, அபூர்வமான கருங்கல் சாளரம், நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய கருங்கல் தூண்கள் கொண்ட ஆலயம் இது. சுயம்புவான சடைமுடி நாதர், திருமணக் கோலத்தில் அன்னை பெரியநாயகியின் சன்னதி, அஷ்ட புஜ துர்க்கை அம்மனின் திருச் சன்னதி, சனிபகவானின் தனிச்சன்னதி என்று ஒரு கலைப் பொக்கிஷமாக விளங்குகிறது இந்த ஆலயம்.

மகாசிவராத்திரி, விநாயக சதுர்த்தி, திருக்கார்த்திகை ஆகியவை விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகைகள். சைவ சமயப் பண்டிகைகள் எல்லாவற்றிலும் உள்ளூர் மக்கள் ஆரவாரமாகப் பங்கேற்கும் ஆலயம் இது.

SCROLL FOR NEXT