அருளாளர்கள் பலரால் பாடப்பட்ட ஆலயம். பூஜிக்கப்பட்ட ஆலயம் என்னும் பெருமையைக் கொண்டது ரங்கம். இந்த ஆலயத்தில் கொண்டாடப்படும் பக்திமணம் பரப்பும் சடங்குகளையும், விழாக்களையும், சம்பிரதாயங்களையும், கோபுர தரிசனங்களையும் ஒளிப்படங்களாக எடுத்திருக்கிறார் ரமணன். அந்த ஒளிப்படங்களின் கண்காட்சியை சென்னை, ஆழ்வார்பேட்டை, டேக் மையத்தில் கடந்த 25 முதல் இம்மாதம் 28 (இன்று) வரை காணலாம். ஒவ்வொரு ஒளிப்படத்திற்கும் கீழேயே அதற்கான ஆங்கில விளக்கத்தையும் கொடுத்திருக்கின்றனர்.
நம்பெருமாள் தொடர்பான வேடுபறி சம்பவங்களும், ஆரத்தி வழிபாடுகளும், சொக்கப்பனை எரிக்கும் நிகழ்வுகளும் ஒளிப்படங்களின் வழியே நம் கண் முன்னே தத்ரூபமாக தரிசனம் ஆகின்றன.
21 கோபுரங்கள், செவ்வக வடிவில் ஏழு பிராகாரங்களைக் கொண்ட பிரம்மாண்டமான ரங்கம் ஆலயத்தின் பல முக்கிய நிகழ்வுகள் இந்த ஒளிப்படக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இராப்பத்து திருவிழாவின் 8-ம் நாளில் நடக்கும் வேடுபறி விழாவுக்கு நம்பெருமாள் புறப்படும் காட்சி, தெய்வீக அனுபவமாக நம் கண் முன் விரிகிறது.
தாசி வெள்ளையம்மாளின் தியாகம்
ஏழு பிரகாரங்களில் அகலங்கார திருச்சுற்றில் கிழக்குப் பகுதியில் எழும்பியிருக்கும் வெள்ளை கோபுரம் முக்கியமானது. பகைவர்களின் படையெடுப்பில், ரங்கநாதர் விக்கிரகத்தை கைப்பற்ற சேனாதிபதி கோயிலுக்குள் வருகிறார். அவரை, தாசி வெள்ளையம்மாள் என்பவர் ரங்கநாதரின் சிலை இருக்கும் இடத்தைக் காட்டுகிறேன் என்று அழைத்துக் கொண்டு, கோபுரத்தின் உச்சியை அடைகிறாள். அங்கிருந்து சேனாதிபதியை கீழே தள்ளிவிட்டு, தானும் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்கிறார். அவரின் தியாகத்தைப் போற்றும் வகையிலேயே அந்தக் கோபுரம் வெள்ளை கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. இன்றளவும் அந்தக் கோபுரத்திற்குப் பூச்சுகள் எதுவும் பூசாமலேயே பராமரிக்கப்படுகிறது.
யானையின் மீது காவிரி தீர்த்தம்
ஆலயத்தில் நடக்கும் முக்கியமான சடங்குகள் எல்லாவற்றுக்கும் காவிரித் தீர்த்தத்தை கோயில் யானையின் மீது வைத்தே கொண்டுவந்து செய்யப்படுகிறது. இதற்குக் காரணம், வைகுண்டத்தில் ஓடும் விராஜ நதியைப் போன்றே புனிதமானது காவிரி என்பதாலேயே காலம்காலமாக இந்தக் கோயிலில் கடைப்பிடிக்கப்படுகிறது.
ரங்கநாதருக்கு நடத்தப்படும் அரையர் ஆட்டம் எனும் சேவையும், ஏகாந்தம் எனும் சேவையும் முக்கியமானவை. ஏகாந்த சேவை எனப்படுவது, சுவாமியின் முன்பாக வீணை வாசிக்கும் சேவை. இவை குறித்த ஒளிப்படங்களும் நம் கண்களுக்கு, கடவுளையும் அக்காலகட்டத்தின் தொன்மையையும் ஒரேவேளையில் தரிசனப்படுத்துகின்றன.