சிம்மசேனன் எனும் அரசன் சிம்ம மகாபுரத்தை ஆண்டுவந்தான். அமைச்சனாக சத்தியகோசன் என்பவன் இருந்தான்.பத்மசண்டம் என்னும் நகரத்தின் பத்திரமித்திரன் எனும் இரத்தின வியாபாரி திரைகடல் சென்று வணிகம் செய்து பெரும்பொருள் சம்பாதித்து நகரத்திற்குத் திரும்பினான். வழியில் சிம்ம மகாபுரம் வந்து அடைந்தான்.
அந்நகரின் அழகும், மன்னனின் பெருமையும், வாணிபச் சிறப்பும், சொல் பிறழாமையும், குற்றங்களே இல்லாத தன்மையும் கண்டு வியந்து அந்நகரத்திலேயே தங்க முடிவு செய்தான்.எனவே தன்னிடமுள்ள பெருஞ்செல்வத்தை அந்நகரிலுள்ள நல்ல மனிதர் ஒருவரிடம் தந்துவிட்டு, தன் ஊர் சென்று குடும்பத்தினரை அழைத்து வர விரும்பினான்..
அதனால் அவன், அமைச்சன் சத்தியகோசனிடம் சென்றான். தன் விருப்பத்தைச் சொன்னான். அமைச்சனும் சரி என்றான். பத்திரமித்திரன் தன் விலையுர்ந்த ரத்தினங்கள் அடங்கிய பெட்டகத்தை அமைச்சனிடம் பாதுகாப்பாக வைத்திருக்கத் தந்துவிட்டு தன் நகரத்திற்குச் சென்று திரும்பினான்.
சத்தியகோசனிடம் சென்று தன் ரத்தினப் பெட்டகத்தைத் திருப்பித் தரும்படி கேட்டான். அமைச்சனோ, பத்திரமித்திரனை யாரென்றே தெரியாது என்று கூறிப் பெட்டகத்தைத் தர மறுத்துவிட்டான். பத்திரமித்திரன் மிகவும் அதிர்ச்சியுடன் வருந்தி அழுது சத்தியகோசனின் துரோகச் செயலை நகர் முழுவதும் சொல்லித் திரிந்தான். அமைச்சனோ, பத்திரமித்திரனைப் பைத்தியம் எனச் சொல்லி தன் குற்றத்தை மறைத்தான். இதுபற்றி அரசன் சத்தியகோசனிடம் விசாரிக்க அமைச்சன், பொய்சொல்லித் தப்பித்துக் கொண்டான்.
பத்திரமித்திரன் அரண்மணைக்கு அருகிலுள்ள மரத்தின் மீதேறி அமர்ந்து சத்தியகோசன்,தன் பெருஞ்செல்வத்தை அமைச்சன் அபகரித்து ஏமாற்றுகிறான் என்று தினமும் அதிகாலை அழுது புலம்பினான்.அரசனோ சத்தியகோசன் மீதிருந்த நம்பிக்கையால் அவனது புலம்பலைக் கண்டு கொள்ளவில்லை.
ஆனால் பட்டத்தரசி ராமதத்தை, பத்திரமித்திரனின் பக்கம் நியாயம் இருக்கலாம் என்று யூகித்தாள். அரசி, அரசனிடமும் தன் ஐயத்தைக் கூறினாள். அமைச்சனுடன் தான் சூதாட வேண்டுமென்றாள். சிம்மசேனனும்,சத்தியகோசனைச் சோதிப்பதற்காக சொக்கட்டான் ஆட அனுமதித்தான். ராமதத்தை அமைச்சனின் பூணூலையும் ராஜ முத்திரை மோதிரத்தையும் பந்தயத்தில் வைக்கும்படிக் கூறி அவற்றை வென்றாள்.
பின் தனது பணிப்பெண் நிபுணமதியிடம் பூணூலையும் ராஜமுத்திரை மோதிரத்தையும் கொடுத்து சத்தியகோசனின் கருவூலக அதிகாரியிடம் காண்பித்து பத்திரமித்திரனின் ரத்தினப் பெட்டகத்தை பெற்றுவரக் கூறினாள். நிபுணமதியும் அவ்வாறே பெற்றுவந்தாள்.
அரசன் பத்திரமித்திரனைச் சோதிப்பதற்காக அப்பெட்டகத்தில் மேலும் பல உயரிய ரத்தினக்கற்களை வைத்து பத்திரமித்திரனிடம் அளித்தான். பத்திரமித்திரன் பெட்டகத்தைத் திறந்து பார்த்தான். உள்ளே தன்னுடையது போக வேறு விலை உயர்ந்த ரத்தின மணிகள் இருப்பதைக் கண்டு அவை தன்னுடையவை அல்லவென்று அவற்றை மன்னனிடம் அளித்துவிட்டான். பிறர் பொருள் அபகரிக்காமையைக் கொள்கையாகக் கொண்ட பத்திரமித்திரனை சிம்மசேனன் மிகவும் போற்றிப் பாராட்டினான். சத்தியம் துறந்த சத்தியகோசனைத் தண்டித்து நாடு கடத்தினான்.