கோவை பெரிய கடைவீதியில் உள்ள தூய மிக்கேல் அதி தூதர் பேராலயத்தின் முகப்புப் பகுதி. படம்: டி.ஜி.ரகுபதி 
ஆன்மிகம்

கோவை: 170 ஆண்டு பழமைவாய்ந்த தூய மிக்கேல் அதிதூதர் பேராலயம்

டி.ஜி.ரகுபதி

கோவையில் பெரிய கடை வீதி, போத்தனூர், திருச்சி சாலை, காந்திபுரம் என பல்வேறு இடங்களில் நூற்றாண்டுகளை கடந்த தேவாலயங்கள் அதிகளவில் உள்ளன. கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற தேவாலயங்களில் ஒன்றாக, பெரியகடை வீதியில் உள்ளதூய மிக்கேல் அதிதூதர் பேராலயம் உள்ளது. மிகவும் பழமைவாய்ந்த இப்பேராலயத்தில், ஒரே நேரத்தில் 2 ஆயிரம் பேர் அமர்ந்து, பிரார்த்தனையில் ஈடுபடலாம். கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கோவை மறை மாவட்டத்தின் தலைமை ஆலயமாகவும், இந்த தூய மிக்கேல் அதிதூதர் பேராலயம் உள்ளது.

இப்பேராலயத்தின் அருட் தந்தை மை.ஜார்ஜ் தனசேகர் ‘இந்து தமிழ்திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: பேராலயம் என்பது ஆயரின் தலைமைப் பீடமாகும். வழிபாடு மற்றும் மறை பணியின் மையமாகவும் அமைந்துள்ளது. பாரம்பரியம், கலாச்சாரம், குழு வாழ்வு என இம்மூன்றின் சிறப்பை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளதுடன், மறை மாவட்டத்தின் தாய் கோயிலாகவும் உள்ளது. பேராலயம் மக்களின் அச்சத்தை போக்கி மகிழ்வின் சூழலை ஏற்படுத்துகிறது. பேராலயம் என்பதற்கு ஜெர்மானிய மொழியில் ‘டோம்’ என்றும், இலத்தீன் மொழியில் ‘டோமுஸ் எக்லிஸியா’ அல்லது ‘டோமுஸ் எபிஸ்கோபலிஸ்’ என்றும், இத்தாலியன் மொழியில் ‘டியூமோ’ எனவும், டச்சு மொழியில் ‘டோம் கெர்க்’ எனவும், ‘கோக்னெட்ஸ்’ எனவும் அழைக்கப்படுகிறது.

ஆவணங்களின்படி, கடந்த 1849-ம் ஆண்டு ஜூலை 24-ம் தேதி தூய மிக்கேல் அதிதூதர் பேராலயத்தை கட்டும் திருப்பணி தொடங்கப்பட்டது. தந்தை துபுவா, ரோமில் உள்ள புனித ராயப்பர் பேராலயம் அமைப்பில் இதை கட்ட விரும்பினார். இதற்காக வரைபடம் தயாரித்து, புதுவையைச் சேர்ந்த தந்தை லவோனான் அடிகளுடனும், கட்டிடப் பொறியாளர்களின் ஆலோ சனைகளையும் கேட்டறிந்தார்.

இதற்காக சுமார் 50 ஆயிரம் பிராங்குகள் (பிரான்சு கரன்சி) செலவாகும் என அறிந்தார். ‘மறைபணி செயலகத்துக்கு’ உதவி கேட்டு மனு அனுப்பினார். கடந்த 1850-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி கட்டிடக் கலை நிபுணரும், கொல்லம் ஆயருமான பாசி நெல்லி, பேராலய கட்டிடத்தின் வரைபடத்துக்கு இறுதி வடிவம் கொடுத்தார். அந்த ஆண்டின் இறுதியில், தூய மிக்கேல் அதிதூதர் பேராலயத்துக்கு கோவை ஆயர் பிரெசியலாக் அடிக்கல் நாட்டினார். கடந்த 1867-ம் ஆண்டு இந்த பேராலயம் திறக்கப்பட்டது.

மூன்று மணிகள்

இப்பேராலயத்தில் மூன்று மணிகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் பிரெஞ்சு மற்றும் லத்தீன் மொழியில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. இந்த மூன்றையும் கோவையின் 4-வது ஆயர் பிரான்சு நாட்டிலிருந்து தருவித்தார்கள். இந்த மணிகளில் ஒன்று எல்லீஸ் என்பவரது நன்கொ டையாகும். அதேபோல, ஆலயத்தில் அமைந்துள்ள புனித சூசையப் பர் பீடமும் பிரான்சிலிருந்து வரவழைக்கப்பட்டது. இந்த நேர்த்தியான மர வேலைப்பாடுகள் நிறைந்த பீடமானது காலப்போக்கில் கரையான்களால் சேதமுற்றது. இவை கடந்த 1919-20-ம் ஆண்டுகளில் ரூ.1,200 செலவில் புனித சூசையப்பர் தொழிற்பள்ளி மூலம் புதுப்பிக்கப்பட்டது.

இப்பேராலயத்தில் பிரான்ஸ் நாட்டு பேரரசர் மூன்றாம் நெப்போலியன் புனித மார்ட்டின் மற்றும் புனித ஸ்நாபக அருளப்பர் தலை வெட்டப்பட்ட ஓவியங்களை தனது நினைவாக அளித்தார்கள். கடந்த 1927-ம் ஆண்டு வரை, இந்த ஓவியங்கள் பேராலயத்தில் நிலைத்திருந்தன. துரதிர்ஷ்டவசமாக கரையான்களால் அரிக்கப்பட்டு, கடந்த 1927-ம் ஆண்டு அக்டோபர் மாதம் பொடிப் பொடியாக கீழே விழுந்து விட்டன. இது ஒரு பேரிழப்பாகும். இதன் மரச்சட்டத்தில் பிரான்சிஸ் கான்வென்டைச் சேர்ந்த அருட்சகோதரி ஒருவர் வரைந்த லூர்து அன்னையின் ஓவியம் பொருத்தப்பட்டுள்ளது.

பேராலயம் புதுப்பிப்பு

ஏறத்தாழ 163 வருடங்களை கடந்த இந்தப் பேராலயத்தின் கட்டிடம் பழமையானதால், புதுப் பித்து கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, கடந்த 2013-ம் ஆண்டு புதிய பேராலயம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் தொடங்கப் பட்டன. இப்பணிகள் 2016-ம் ஆண்டு முடிக்கப்பட்டு, டிசம்பர் மாதம் 9-ம் தேதி பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. ரோம் நகரில் உள்ள ஆலயத்தின் உட்புற வடிவமைப்புகளை போல, இந்திய கலாச் சாரங்களுடன் இப்பேராலயம் கட்டப்பட்டுள்ளது. இன்றளவும் பழமையும், பெருமையும் மாறாமல் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT