ஆன்மிகம்

கிறிஸ்துமஸ்: நீலகிரி மாவட்டத்தில் பாரம்பரியம் மிக்க ‘கேக் மிக்ஸிங்’ நிகழ்ச்சி

ஆர்.டி.சிவசங்கர்

டிசம்பர் மாதத்தின் தொடக்கத்திலேயே கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஆயத்தப் பணிகளை கிறிஸ்தவர்கள் தொடங்கி விடுவார்கள். வீடுகளின் வாசலில் இயேசுவின் வருகையை குறிக்கும் வகையில் நட்சத்திரங்களைக் கட்டித் தொங்க விடுவது, அவரது பிறப்பைச் சித்தரிக்கும் சொரூபங்களுடன் குடில்களை அமைத்தல், கிறிஸ்துமஸ் கேரல்ஸ் (பாடல்கள்) பாடுவது, சான்டா கிளாஸ் வேடமணிவது, கிறிஸ்துமஸ் மரங்களை அமைப்பது, கேக் தயாரிப்பது ஆகிய பணிகளை மேற்கொள்வர். இதில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கேக் தயாரிப்பது நீலகிரி மாவட்டத்தில் ஒரு விழாவாகவே கொண்டாடப்படுகிறது.

பல வகை கேக்குகள் கடைகளில் கிடைத்தாலும், நீலகிரி மாவட்டத்தில் தயாரிக்கப்படும் பாரம்பரியம் மிக்க ‘ரிச் பிளம் கேக்’ உலகளவில் பிரபலமானது. இந்தியாவில் ஆங்கிலேயர்கள் கிறிஸ்துமஸ் பாரம்பரியத்தை தொடக்கினர். கிறிஸ்துமஸ் அன்று விரதமிருந்து மாலையில் கூழ் தயாரித்து, அதை உண்டு விரதத்தை முடிந்தனர். பின்னர் இந்த கூழில் உலர் பழங்கள், தேன், வாசனை திரவியங்கள், ஓட்ஸ் ஆகியவற்றை கலந்து ஒரு கலவை தயாரித்தனர்.

பின்னர், கோதுமை மாவுடன் முட்டை, வெண்ணை ஆகியவற்றை கலந்து, அந்த கலவையை வேக வைத்து ‘பிளம் கேக்’ உதயமானது. ஓவன் வைத்திருந்த செல்வந்தர்கள் உலர் பழங்கள் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு கேக் தயாரித்தனர். உலர் பழங்களை சர்க்கரை பாகில் ஊற வைப்பதால் அவை நீண்ட நாட்களாக கெடாமல் இருக்கும் என்பதை கண்டறிந்தனர். இதை கேக் தயாரிப்பில் பயன்படுத்தினர். 17-வது நூற்றாண்டில் கிறிஸ்துமஸ் பாடல்கள் பாடி வரும் ஏழை மக்களுக்கு ‘கிறிஸ்துமஸ் கேக்’ அளித்து மகிழ்ந்தனர். 18-ம் நூற்றாண்டு இறுதியில் கிறிஸ்துமஸ், ஈஸ்டர், திருமணங்கள், ஞான ஸ்தான நிகழ்ச்சிகளில் கேக் பரிமாறப்பட்டது.

அப்போது முதல் கிறிஸ்துமஸ் கேக் தயாரிப்பதற்கான கலவை கலப்பதை ஒரு விழாவாகவே கொண்டாடி வருகின்றனர். இந்த நிகழ்வை ‘கேக் மிக்ஸிங் செரிமனி’ என கொண்டாடி வந்தனர். வீடுகளில் சிறிய அளிவில் நடத்தப்பட்டு வந்த இந்த கொண்டாட்டம் இந்தியாவில் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களிலும் ஊடுருவி விட்டது. தற்போது இது ஒரு சம்பிரதாயமாக அனைத்து ஹோட்டல்களிலும் கடைபிடிக்கப்படுகிறது.
ஹோட்டல் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள், சுற்றுலா பயணிகள் இந்த விழாவில் பங்கேற்று கேக் தயாரிப்புக்காக உலர் பழங்களான பேரீச்சம் பழம், டூட்டி ப்ரூட்டி, உலர் கொட்டைகளான பாதாம், பிஸ்தா, அரைக்கப்பட்ட வாசனை திரவியங்கள் ஆகியவை கொண்டு கலவை தயாரிக்கின்றனர். இதில், சிறப்பம்சம் என்னவென்றால் இந்த கலவையில் ரம் உள்ளிட்ட மது வகைகள், பழச்சாறு, தேன் கலக்கப்படுகிறது.

இந்த கலவையைப் பதப்படுத்த மர பீப்பாயில் ஒரு மாத காலம் வைக்கப்படும். பின்னர், மைதா மாவு, சர்க்கரை கலந்து கேக் தயாரிக்கப்பட்டு, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு அன்று வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வார்கள். பாரம்பரியமிக்க இந்த விழா குறித்து ஜெம் பார்க் ஹோட்டல் தலைமை சமையல் கலைஞர் சுரேந்திரன் விளக்கினார். அவர் கூறும் போது, “கேக் மிக்ஸிங் செரிமனி ஆண்டாண்டு காலமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு மாத காலத்துக்கு முன்பு ‘கேக் மிக்ஸிங் செரிமனி’ ஐரோப்பா, அமெரிக்காவில் கொண்டாடப்படுகிறது. தற்போது பல சுவைகளில் கிறிஸ்துமஸ் கேக்குகள் தயாரிக்கப்படுகின்றன. இதற்காக 60 கிலோ உலர் திராட்சை, அத்தி, செர்ரி பழங்கள் மற்றும் முந்திரி ஆகியவற்றை மதுபானங்களுடன் கலந்து ஒரு மாத காலம் பதப்படுத்தப்பட்டு, பின்னர் மைதா மாவு, சர்க்கரை கலந்து 120 கிலோ கேக் தயாரிக்கப்படும். இந்த கேக் வெட்டப்பட்டு, வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும்’’ என்றார்.உதகையில் கேக் மிக்ஸிங் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.

SCROLL FOR NEXT