ஆன்மிகம்

கிறிஸ்துமஸ்: பழமை மாறாத போத்தனூர் புனித மாற்கு தேவாலயம்!

செய்திப்பிரிவு

1900-ம் ஆண்டுகளில் போத்தனூர் பகுதியில் வசித்த, ஆங்கில ப்ரோடஸ்டன்ட் சமூகத்தினரின் வழிபாட்டுக்காகவும், புனிதப் பணிக்காகவும் 1918-ல் போத்தனூர் ரயில்வே காலனியில் தூய மாற்கு தேவாலயம் கட்டத் தொடங்கினர். தேவாலய கட்டுமானப் பணிக்காக கேரள மாநிலம் மலபார் பகுதியில் இருந்து செந்நிற கற்கள் கொண்டுவரப்பட்டன. தரைக்கு டெரகோட்டா டைல்ஸ் பதிக்கப்பட்டது. இந்த ஆலயம் மெட்ராஸ் லார்டு பிஷப்பால் 1919 ஜூலை 24-ம் தேதி அர்ப்பணிக்கப்பட்டது.

நூறு ஆண்டுகளைக் கடந்தும் பழமை மாறாமால் இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது இந்த ஆலயம். இதன் கட்டுமான அமைப்பு மிகவும் அழகானது. தேவாலயத்தின் ஒவ்வொரு பகுதியும் கைகளால் கட்டப்பட்ட போதிலும், மிகுந்த கலை நுட்பத்துடன் அமைத்துள்ளனர்.

அழகிய வளைவுகளை கொண்ட ஜன்னல்கள், அக்காலத்துக்கு ஏற்றபடி சிறந்த கோணத்தில் அமைக்கப் பட்டுள்ளன. அழகிய வேலைப்பாடுடன், தேக்கு மரத்தாலான இருக்கைகள் இன்றும் அங்கு பயன்பாட்டில் உள்ளன. முதலாவது உலகப் போரின்போது இறந்த ஒரு போர் வீரனின் நினைவாக, ஆலயத்தின் ஜன்னல் கண்ணாடியில் வரையப்பட்ட ஓவியம் இங்கிலாந்தில் இருந்து வரவழைக்கப்பட்டு, இங்கு பொருத்தப்பட்டுள்ளது. பழமையான, பாரம்பரியம் மிக்க இந்தக் கட்டிடம், 100 ஆண்டுகளுக்கும் மேலாக, அதே உறுதித்தன்மையுடன் உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் கோட்டும், சூட்டும், தொப்பியும் அணிந்து ஆண்களும், அழகிய ஆடையணிந்த பெண்களும் இங்கு வந்து வழிபட்டுள்ளனர். வெளிநாடுகளுக்கு சென்று குடியேறிய பின்னரும் கூட, இந்த ஆலயத்துக்கு உட்பட்டோர் இங்கு வந்து செல்லத் தவறியதில்லை.

“கடந்த காலங்களில் இங்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் வழிபாடு நடத்திய பாதிரியார்கள் மற்றும் மத குருமார்களை நினைவுபடுத்த கடமைப்பட்டுள்ளோம். வெறும் கற்களை மட்டும் விட்டுச் செல்லாமல், பாரம்பரியத்தையும் உணர்த்திச் சென்றுள்ளனர் மூதாதையர்கள். அவர்களது நினைவுகளுடன் இறை பணியைத் தொடர்வோம்” என்கின்றனர் இந்த ஆலய நிர்வாகிகள். இங்கு சுமார் 150 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து வழிபாடு நடத்தலாம்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் சிறப்பு ஆராதனை, வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு ஜெபக்கூட்டம் நடைபெறுகிறது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு, புனித வெள்ளி, இயேசு உயிர்த்தெழுந்த ஈஸ்டர் உள்ளிட்ட விசேஷ நாட்களில் கிறிஸ்தவர்கள் இங்கு கூடி, சிறப்பு பிரார்த்தனைகளில் ஈடுபடுகின்றனர்.

SCROLL FOR NEXT