பாதூர் என்பது அவர் பிறந்த ஊர். புராணம் என்பது அவர் குலத்துக்குக் கிடைத்த விருது. இவற்றை இணைத்து பாதூர் புராணம் ரங்கராஜன் என்று பக்தர்களால் மரியாதையாகவும், அன்பாகவும் அழைக்கப்பட்டவர் பாதூர் புராணம் ரங்கராஜன்.
திருமலையில் நடைபெறும் ஸ்ரீநிவாச கல்யாணங்களுக்கு நேரடி வர்ணனைகள் வழங்கியவர் பாதூர் புராணம் ரங்கராஜன். தாய்மொழியான தமிழில் வல்லமையும், தந்தையின் வழிகாட்டுதலால் சம்ஸ்கிருதப் புலமையும் பெற்றவர். இதனால் உபய வேதாந்தி (தமிழ், சம்ஸ்கிருதம் ஆகிய இரு மொழிகளிலும் வேத நூல்களைக் கற்றவர்) என அறிஞர்களால் அறியப்பட்ட இவர், 1944-ம் ஆண்டு கார்த்திகை மாதம் அனுஷ நட்சத்திரத்தில் பிறந்தவர்.
ஸ்ரீமத் தேவனார்விலாகம் அழகியசிங்கரிடம் இவர் ஸமாஸ்ரயணம் செய்துகொண்டார். ஸ்ரீமத் வில்லிவலம் ஸ்ரீவண் சடகோப ஸ்ரீநாராயண யதீந்திர மகாதேசிகனிடம் பரசமர்ப்பணம் செய்துகொண்டார். சரளகவி, சாக்ஷுச பதஞ்சலி ஆகிய விருதுகளைப் பெற்ற இவரது தந்தையார் ஸ்ரீமான் ராகவாச்சார்யாரிடம், காலட்சேபம் செய்தவர் ரங்கராஜன். தான் உபன்யாச வழியில் செல்லத் தனது தாய் பெருந்தேவி பெரிதும் காரணம் என்று உபன்யாசங்களில் கூறிவந்தார் ரங்கராஜன்.
நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை, திருப்பதி ஸ்ரீ உ.வே. கம்பராஜபுரம் சேஷாத்திரி ஐயங்காரிடம் கற்ற இவர் தமது வாழ்நாளில் சுமார் பதினேழு ஆயிரம் உபந்யாசகங்களை செய்தவர். நாலாயிர திவ்யப் பிரபந்தமும் அதன் விளக்கங்களும் இவரது நாவில் நின்று வெளிப்பட எந்நேரமும் காத்துக்கொண்டிருக்கும்.
தனது சிம்மக் குரலால் லட்சோபலட்சம் பக்தர்கள் ஆனந்தம் அடையும் வகையில் திருமலையில் ஸ்ரீநிவாச பெருமாள் கல்யாண உற்சவத்தை தங்கு தடையின்றி நேரடி வர்ணனை செய்யும் ஆற்றல் பெற்றிருந்தார்.
இடத்திற்குப் பொருத்தமான புராண, இதிகாசக் கதைகள், திருமலை பெருமாள் குறித்த தகவல்கள், கலைகள் குறித்த அறிவு, விழாவுக்கு வந்திருக்கும் பிரபலம் குறித்த அறிமுகம், கல்யாண நிகழ்ச்சிகளை வரிசை பிசகாமல் ஒன்றன் பின் ஒன்றாகக் கூறுதல் எனப் பன்முகத் திறன் இருந்தால் மட்டுமே இத்துறையில் பரிமளிக்க முடியும். இதில் பட்டை தீட்டிய வைரமாக ஜொலித்த அவர் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலின் நேரடி வர்ணனையில் தலைமை வர்ணனையாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் அரும்பணியாற்றியவர். வேறு பல தமிழ் தொலைகாட்சிகளிலும் பெருமாள் உற்சவங்கள் குறித்த வர்ணனைகளைச் செய்துள்ளார்..
சாஸ்திரங்களின் வழிமுறைகளின்படி வாழ்ந்த இவர் புதிய தொழிநுட்பங்களின் மூலம் பெருமாள் பெருமை பரப்புவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். . அமெரிக்காவில் உள்ள தமிழர்களின் அன்பான வேண்டுகோளுக்குச் செவி சாய்த்த இவர் தொலைபேசி மூலம் ஒரு மணி நேரம் உபன்யாசத்தை அருவிபோல் பொழிந்துவந்தார். இந்நிகழ்ச்சி டெக்சாஸ் மாகாணம் மட்டுமல்லாமல் வாஷிங்டன், கலிஃபோர்னியா ஆகிய மாகாணங்களிலும் ஒலிபரப்பானது.
மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை உபன்யாசத்தை நாற்பது ஆண்டுகளாகத் தொடர்ந்து செய்துவந்த இவர், காலையில் ஒரு கோயில், மாலை நான்கு மணிக்கு மற்றொரு கோயில், மாலை ஆறு மணிக்கு வேறொரு கோயில் என்ற வகையில் மார்கழி மாதத்தில் ஒரு நாளைக்கு மூன்று முறைகூடத் திருப்பாவை உபந்யாசம் செய்துள்ளார்.
இவரது உபந்யாசங்கள், வேதங்கள், சாஸ்திரங்கள், புராண, இதிகாசங்கள், திவ்ய பிரபந்தங்கள் ஆகியவற்றிலிருந்து மேற்கோள்கள் மட்டுமின்றி மூவாயிரப்படி, ஆறாயிரப்படி, பெரியவாச்சான் பிள்ளை, ஸ்ரீபிரதிவாதி பயங்கரம் அண்ணங்காராச்சாரியார், திருப்பாவை ஜீயர் எனப்படும் உடையவர் ராமானுஜர் ஆகியோரின் வியாக்கியானங்களை உள்ளடக்கி அமைந்திருக்கும்.
திருப்பதி ராஷ்ட்ரிய சமஸ்கிருத வித்யாபீடம், இவருக்கு ‘மகாமகோபாத்யாயா’ என்ற விருதினையும், திருமலை திருப்பதி தேவஸ்தானம், ‘சாஸ்த்திர வித்வமணி’ என்ற விருதினையும் அளித்துக் கெளரவித்துள்ளன. காஞ்சி காமகோடி பீடம் ‘ஆன்மிக சேவா ரத்தினம்’ என்ற விருதினை அளித்து கெளரவித்துள்ளது. இவர் அஹோபிலம் மடம் ஆஸ்தான வித்துவானாக நியமிக்கப்பட்டு கெளரவிக்கப்பட்டவர்.
கூடாரை வெல்லும் கோவிந்தனின் பக்தர் என்பதால், அனைவரையும் தமது அன்பால் அரவணைத்துச் செல்பவர். இவரது பெருமாள் சேவை சிறப்புற நடைபெற அயராது ஒத்துழைத்தவர் இவரது மனைவி கல்யாணி. இத்தம்பதிக்கு மூன்று மகன்கள் உண்டு..
ஸ்ரீநிவாச கல்யாணம் நேரடி ஒலிபரப்பு நிகழ்ச்சியில், இவரது நினைவாக தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த சனிக்கிழமையன்று மட்டும் திருக்கல்யாண உற்சவ நேரடி வர்ணனையை ஸ்ரீ வெங்கடேஸ்வரா பக்தி சேனல் நிறுத்தி வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பாதூர் புராணம் ரங்கராஜன், இன்று நம்மிடையே இல்லை என்றாலும், அவரது சிம்மக் குரலில் உபந்யாசங்களை நாம் என்றும் கேட்கும் வகையில் திருப்பாவை குறுந்தகட்டினைத் திருப்பதி திருமலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.