இறைவன் இந்த நில உலகைப் படைத்தபோது அது நிலைகொள்ளாது குலுங்கியது. எனவே இறைவன் மலைகளைப் படைத்து உலகின் மீது அமைத்ததும் அது நிலை கொண்டது. அதைப் பார்த்துப் பெரிதும் வியந்த வானவர்கள், “ இறைவா, உன்னுடைய படைப்பில் மலைகளை விடவும் வலிமை வாய்ந்ததாக ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டனர்.
இறைவன் சொன்னான்: ஆம். அது இரும்பு.
வானவர் தொடர்ந்து கேட்டனர்: “இறைவா, உன்னுடைய படைப்பில் இரும்பை விடவும் வலிமை வாய்ந்ததாக ஏதேனும் இருக்கிறதா?”
“ஆம். நெருப்பு.”
“இறைவா, உன்னுடைய படைப்பில் நெருப்பை விடவும் வலிமை வாய்ந்ததாக ஏதேனும் இருக்கிறதா?”
“ஆம். தண்ணீர்”
“இறைவா, உன்னுடைய படைப்பில் தண்ணீரை விடவும் வலிமை வாய்ந்ததாக ஏதேனும் இருக்கிறதா?”
“ஆம். காற்று.”
“ இறைவா, உன்னுடைய படைப்பில் காற்றை விடவும் வலிமை வாய்ந்ததாக ஏதேனும் இருக்கிறதா?”
இறைவன் முத்தாய்ப்பாகச் சொன்னான்: “ஆம், ஒரு மனிதன் தன்னுடைய இடதுகைக்குத் தெரியாமல் வலது கையால் செய்யும் அறம் (ஸதகா).”
இதைக் கூறி முடித்த இறைத்தூதர், “ ஒவ்வோர் இறை நம்பிக்கையாளருக்கும் அறம்புரிவது கடமை. நெருப்பைத் தண்ணீர் அணைப்பது போல அறம் பாவங்களை அழித்துவிடும்” என்றும் கூறினார்கள்.
அண்ணல் நபி மூலமாக இறைவனுக்கும் வானவருக்கும் நடைபெற்ற இந்த உரையாடல் முதலில் அவருடைய திருத்தோழர் பெருமக்களையும் பின்னர் பொதுமக்களையும் சென்று சேர்ந்தது. இதைக் கேட்ட செல்வச் சீமான்கள் ரகசியமாகத் தங்கள் செல்வத்தை அறம் செய்து திருப்பொருத்தத்தை அடைவதில் பெரிதும் ஆர்வம் காட்டலாயினர். ஏழைகளோ நம்மிடம் செல்வகளம் இல்லையே, அண்ணலார் சொன்ன அறத்தைச் செய்வது எப்படி? என்று ஏங்கலாயினர். எனவே மக்கள் அண்ணல் நபியிடம் விளக்கம் பெற விரும்பினர். அவரும் எதிர்கொண்ட வினாக்களுக்கு ஏராளமான விடைகளைக் கூறிவந்தார்.
நற்செயல்களைப் புரிய ஏவுவது அறம், தீமைகளைத் தடுப்பது அறம், சரியான வழி கூறுதல் அறம், சாந்தமான பதில் கூறுதல் அறம், அழகிய சொற்களைக் கொண்டு பேசுதல் அறம், ஆறுதலான சொற்களைக் கூறுதல் அறம், அறம் செய்வதால் பொருள் குறைந்துவிடாது, செல்வத்தால் குறைந்தவர் செய்யும் அறம் சிறந்தது, பார்வை இல்லாத மனிதருக்கு உதவுவது அறம், பாதையில் மக்களுக்கு இடையூறாக உள்ள பொருட்களை அப்புறப் படுத்துவது அறம், பாதை தவறிய மனிதருக்கு உரிய பாதையைக் காட்டுவது அறம், உன் வாளியில் தண்ணீர் இறைத்து, உன் சகோதரன் வாளியில் ஊற்றுவதும் அறம், அறங்களில் மேலானது மக்களுக்கிடையில் சமாதானம் செய்வது என்று அண்ணலார் கூறிவந்த விளக்கங்கள் ஏராளம்!
அறத்தைக் குறிக்கும் ‘ஸதகா’ என்ற அரபுச் சொல்லின் பொருளும் அண்ணல் நபியின் அழகிய விளக்கங்களால் பெரிதும் விரிவடையலாயிற்று. அவர் மேலும் சொன்னார்:
உன் சகோதரனை மலர்ந்த முகத்துடன் சந்திப்பது அறமே!
அண்ணல் நபி அவர்கள் தம் வாழ்வில் தாமே முந்திச் செய்து காட்டாத ஒன்றைப் பிறருக்கு ஒருபோது உபதேசித்தவர் அல்ல. அவருடைய அருகாமையைப் பெற்றிருந்த திருத்தோழர் அப்துல்லாஹ் இப்னு ஹாரித் கூறினார்:
“ என் வாழ்நாளில் அண்ணல் நபி அவர்கள் அளவுக்குப் புன்னகை பூக்கும் ஒருவரை நான் கண்டதில்லை” என்றார்.
விலங்குகளால் புன்னகை பூக்க இயலாது. அது மனிதர் களுக்கு மட்டுமே இறைவன் அளித்த சிறப்பு! நம்மில் எத்தனை பேரால் ஒரு பூவைப் போல வெளிப்படையாகப் புன்னகை பூக்க முடிகிறது?
நாம் சற்று எண்ணிப் பார்ப்போம். இது நம்மால் முடியக்கூடியதுதான். மனிதர்களாகிய நமக்கிருக்கும் அகந்தை, ஆணவம், இறுமாப்பு, தற்செருக்கு முதலிய வேண்டாதவற்றை எல்லாம் விட்டொழிப்போம் இனியேனும் உலகில் உள்ள ஒவ்வொரு மனிதரும் தன் சக மனிதனைப் பார்க்கும்போது மனம்விட்டுப் புன்னகை செய்வோம். கதை உறுதி ஏற்றுச் செயல்படுத்தவும் செய்தால் இந்தப் பூமியே புன்னகைப் பூங்காவாக மாறிவிடாதா?