ஜல்..ஜல்..ஜல் என சத்தம் எழுப்பியபடி சைக்கிள் ரிக்ஷாக்கள் பாதையின் குறுக்கும் நெடுக்குமாக இன்றைக்கும் சரளமாகப் பயணிக்கும் இடம், வடசென்னையின் கொண்டித் தோப்பு பகுதி. பாத்திரத்துக்குப் பாலீஷ் போடுவது, கிரில் சட்டங்களை வெல்டிங் செய்து இணைப்பது, பூ, காய்கறி வியாபாரம் என எளிய மக்கள் அதிகம் புழங்கும் இந்தப் பகுதியிலிருக்கும் சிருங்கேரி சங்கர மடத்தில் சமீபத்தில் தியாகராஜர் ஆராதனையை நடத்தியது சாந்தகுரு இசை மற்றும் நுண்கலை அமைப்பு.
தியாகராஜரே எளிமையின் உருவம்தான். அதனால்தான் எளிமையான மக்கள் அதிகமிருக்கும் இந்த இடத்தில் தியாராஜர் ஆராதனையை நடத்துகிறோம் என்றார் சாந்தகுரு அமைப்பின் நிறுவனரும் வயலின் கலைஞருமான ரேவதி கிருஷ்ணசாமி.
தன்னுடைய பக்தியை நளினமாகவும் நுட்பமாகவும் நட்புடனும் இறைவனுக்கு தன்னுடைய பாட்டில் தியாகராஜர் வெளிப்படுத்தினார் என்பதை அவரின் பஞ்ச ரத்னக் கீர்த்தனைகளின் சுருக்கமான அர்த்தத்தைப் படித்தாலே புரிந்து கொள்ளலாம் என்றவர் ஒவ்வொரு பாடலின் கருத்தையும் சுருக்கமாக ஓரிரு வரியில் விளக்கினார்.
பஞ்சரத்னக் கீர்த்தனைகளை ராகம் சகோதரிகள் (சிவரஞ்சனி, நளினகாந்தி) பக்திபூர்வமாக பாடினர். அவர்களுக்கு திருவாரூர் பாலம் அம்மையார் வயலினிலும் திருவையாறு குருமூர்த்தி, புனித் தாவே ஆகியோர் மிருதங்கத்திலும் பக்கபலமாக இருந்து நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.
பஞ்ச ரத்ன கீர்த்தனைகளின் மகத்துவம்
ஏழு ஸ்வர ஸ்தானங்களில் அமையும் ராகங்களை சம்பூர்ண ராகங்கள் என்பர். அப்படிப்பட்ட சம்பூர்ண ராகங்களில் அமையாத ராகங்களில் இந்த பஞ்ச ரத்னக் கீர்த்தனைகளை தியாகராஜர் படைத்திருக்கிறார். குறைபட்ட வாழ்க்கையிலிருந்து இறைவனின் அருளைப் பெறுவதன் மூலம் நிறைவுடன் அவனுடைய பாதக் கமலங்களை அடைய வேண்டும் என்பதே பக்தியின் தத்துவம். அதை வெளிப்படுத்துவதே பஞ்ச ரத்னக் கீர்த்தனைகளின் சிறப்பு.
l ஜகதாநந்தகாரக என்னும் கீர்த்தனையில் தியாகராஜர் சொல்வார், “தியாகராஜனின் நண்பனே நீ வேதங்களின் சாரமாக விளங்குகிறாய். உன்னுடைய கல்யாண குணங்கள் கணக்கற்றவை. உன்னுடைய புகழ் வரம்பற்றது. எல்லாவகையான பாவங்களையும் போக்கும் உன்னை இந்த தியாகராஜன் பூஜை செய்கிறான். உன்னையன்றி வேறு யாரால் இந்த உலகிற்கு ஆனந்தத்தை அளிக்க இயலும்?”.
l துடுகு கல என்னும் கீர்த்தனையில், “உன்னையன்றி வேறு எந்த ராஜகுமாரன் என்னை முன்னேற்றுவான்?”.
l ஸாதிஞ்செனெ என்னும் கீர்த்தனையில், “உன்னுடைய பாதங்களை அனுதினமும் சரணடையும் வரத்தை எனக்குக் கொடு. இன்ப, துன்பங்களை சமமாக ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை எனக்குக் கொடு”.
l கநகநருசிரா என்னும் கீர்த்தனையில், “ராமனின் திருநாமமே இனிப்பானது. ருசியானது. தினமும் அதை ஜபிக்கும் வரத்தை அருள்வாய்”.
l எந்தரோ மகானுபாவுலு என்னும் கீர்த்தனையில், “பரமபக்தர்களாக, ராமச்சந்திரனின் திவ்ய பாதார விந்தங்களையே தியானித்துக் கொண்டு, அவனுக்குத் தொண்டனாகி, தியாகராஜனால் பூஜிக்கப்படும் அந்த ராமனின் அனுக்ரகத்திற்குத் தகுதி யுடையவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நமஸ்காரங்கள்”.