சிவனின் உத்தரவுக்குப் பணிந்து பொதிகை மலை நோக்கிச் சென்ற அகத்தியன், தான் பயணித்த மார்க்கத்திலெல்லாம் ஈசனைப் பிரதிஷ்டை செய்து உள்ளம் உருக வழிபாடு செய்தார். ‘நஞ்சு உண்ணப் பொலிந்த மிடற்றினார் உள்ளம் உருகில் உடனாவார்’ என்ற வாக்கிற்கு ஏற்ப அகத்திய மகரிஷி தன் சிந்தையில் சிவனை நிறுத்தி பூஜித்தார். அவரது பக்திக்கு மனமிரங்கிய ஈசன், அவர் பூஜித்த இடங்களிலெல்லாம் தன் தேவியோடு திருமணக் கோலத்தை அகத்தியருக்குக் காட்டியருளினார். அம்மையப்பனின் திருமணக் கோலத்தை அகத்திய மகரிஷி கண்டு ஆனந்தம் அடைந்த திருத்தலங்களில் ஒன்றுதான் புத்திரன்கோட்டை.
‘புத்தனூர்க்கோட்டை’ என்று குறிப்பிடப்பட்ட இத்திருத்தலம் காலப்போக்கில் மருவி தற்போது ‘புத்திரன்கோட்டை’ என்று அழைக்கப்படுகிறது. அகத்தியப் பெருமானின் திருக்கரங்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட எம்பெருமான் தற்போது ‘அகத்தீஸ்வரர்’ என்னும் திருநாமத்தோடு இப்பகுதி மக்களால் பக்தியோடு பூஜிக்கப்படுகிறார். மிகப் பழமை வாய்ந்த கல்வெட்டுகளின் மூலம் தமிழகத்தை ஆண்ட மன்னர்கள் ஸ்ரீ அகத்தீஸ்வரப் பெருமானுக்கு அமுது படைக்கவும் தீபமேற்றவும் ஏராளமான நிலங்களைத் தானமாக அளித்துள்ளதை அறிய முடிகின்றது.
சின்முத்திரையுடன் தட்சிணாமூர்த்தி
‘மரகத வடிவுடை நாச்சியார்’ என்றும் ‘முத்தாரம்பிகை’ என்றும் வணங்கப்படும் இத்தலத்தின் அம்பிகை தன் திருநாமத்திற்கு ஏற்றவாறு கற்பனைகளுக்கெல்லாம் எட்டாத எழில் கோலத்தில் கருணையே வடிவாகக் காட்சி தருகிறாள். கருவறையின் தென்பகுதியில் கோஷ்டத்தில் சின்முத்திரையுடன் அருள்பாலிக்கும் ‘ஸ்ரீ தட்சிணாமூர்த்தியின்’ திருமேனியில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகள் நம்மை பிரமிக்க வைக்கின்றன.
புத்திர பாக்கியம் அளித்தமைக்கு நன்றிக் கடனாக அகத்தீஸ்வரப் பெருமானுக்குப் பல்வேறு திருப்பணிகளைச் செய்த சோழமன்னன் தன் புத்திரனின் நினைவாகவே இப்பகுதியில் மிகப் பெரிய ஆலயம் அமைத்து ‘புத்திரன்கோட்டை’ என்ற திருநாமத்துடன் ஈசனைப் பூஜித்ததாக இத்திருக்கோயிலின் தல வரலாறு தெரிவிக்கின்றது.
திருமணமாகிப் பல ஆண்டுகளாகியும் புத்திர பாக்கியம் இன்றி வருந்தும் தம்பதியினர் இத்தலத்திற்கு வருகை புரிந்து எம்பெருமானை நெய்தீபம் ஏற்றி வழிபட அவர்களின் இல்லங்களில் விரைவில் மழலை ஒலி கேட்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது. பக்தியோடு தன் திருவடிகளில் சரணடைந்த அன்பர்களின் பூர்வஜென்மப் பாவங்களையும் போக்கி அருள்கிறான் புத்திரன்கோட்டை எம்பெருமான். சோழ, பல்லவ மற்றும் பாண்டிய மன்னர்கள், இத்தலத்துப் பெருமானை வணங்கி, ஏராளமான வரங்களைப் பெற்று பேருவகை அடைந்துள்ளனர்.
இக்கோயிலின் தொன்மையை அறிவிக்கும் முப்பதுக்கும் மேற்பட்ட கல்வெட்டுத் தொடர்கள் இத்தலத்தில் இன்றும் காணப்படுகின்றன. சிதிலமடைந்த நிலையிலும் தெய்வீக சக்தி சிறிதும் குன்றாமல் ஸ்ரீ அகத்தீஸ்வரப் பெருமான் அருள்பாலிக்கிறார். தற்போது புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவரும் இக்கோவில், வாழ்நாளில் ஒருமுறையேனும் சென்று வழிபட வேண்டிய தலமாகும்.
செல்லும் வழி
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத் திலிருந்து சூணாம்பேடு செல்லும் சாலையில் உள்ளது புத்திரன்கோட்டை ஸ்ரீ அகத்தீஸ்வரர் திருத்தலம்.